Wednesday, December 22, 2010

நாள்தோறும் நாடோடி


இருவாரங்களாக டெல்லிக் குளிரிலிருந்து தப்பித்திருந்தேன். வேலை காரணமாக மஹாராஷ்ட்ரா பயணம். புனேவுக்கும், மும்பைக்கும் அருகிலிருக்கும் வளர்ந்து வரும் தொழில் நகரமான கோலாப்பூருக்கு ட்ரிப். கோலாப்பூரைப் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. எப்போதும் மிதமான வெயில், மாலையானால் லேசான தூறல், அடிக்கடி பெருமழை, எப்போதாவது ஆலங்கட்டி மழை, எதற்கும் பதற்றமில்லாத நிதானமான மக்கள், சீராகி வரும் நகரின் உள்கட்டமைப்புகள், பெருகி வரும் தொழில், வேலை வாய்ப்புகள் என அருமையான நகரம். இந்நகரின் மஹாலக்ஷ்மி கோவில் மிகச் சிறப்பு. அத்துடன் இவ்வூரின் குடிசைத் தொழிலான தோல் செருப்புகள் தயாரித்தல் தற்போது அருகி வந்தாலும் கையால் தயாரிக்கப்படும் செருப்பிற்கென இருக்கும் பெயரைத் தக்க வைத்துக் கொள்ள அம்மாநில அரசாங்கம் பெருமுயற்சியெடுத்து வருகிறது. கோலாப்பூரின் செருப்புகளுக்கு உடல் வெப்ப நிலையையும், அழுத்தத்தையும் சீராக வைத்துக் கொள்ளும் தன்மையிருப்பதாய் சொல்கிறார்கள்.


கோலாப்பூரின் அருகிலேயே ஏகப்பட்ட சுற்றுலாத்தலங்கள், மலைவாசஸ்தலங்கள். மாலை நேரத்தில் சட்டென்று போய் வர இருபது கிலோ மீட்டர் தூரத்தில் பனாலா(Panhala) என்றொரு மலைப் பிரதேசமிருக்கிறது. அங்கிருக்கும் சிவாஜி மஹாராஜாவின் கோட்டை மிகப் பிரபலமானது. ஏறக்குறைய சிதைந்து விட்ட அக்கோட்டையின் மேலேயிருந்து கோலாப்பூர் மற்றும் சுற்றியிருக்கும் பல ஊர்களையும் காண முடிகிறது. மன்னர்களின் ஆட்சி இப்போது இல்லையெனினும் இன்னும் கூட அம்மக்கள் மன்னர்களுக்குத் தங்கள் மனதில் வைத்திருக்கும் மரியாதை ஆச்சரியப்பட வைக்கிறது. இவ்வூரிலிருந்து ஷீரடி, கோவா, மஹாபலேஷ்வர், பெல்காம் என முக்கியமான இடங்கள் அருகிலிருப்பது சிறப்பு. கோலாப்பூர் பற்றியும் அதன் சிறப்புகள் பற்றியும் தனிக் கட்டுரை எழுத நினைத்துத் தள்ளிக் கொண்டே போகிறது. விரைவில் எழுத வேண்டும். (கோவா அல்லது மும்பை வரை விடுமுறையில் போகிறவர்கள் கோலாப்பூர் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களுக்கும் சென்று வரலாம். அமைதியான இடம்.)

*************************************************************************************************************


மும்பை எனக்கு வாழ்நாள் கனவு. டெல்லியோ, மற்ற பெரு நகரங்களோ தராத ஒரு மகிழ்ச்சி மும்பையில் இறங்கிய அந்த நிமிடம் எனக்குத் தந்தது. சிறு வயதிலிருந்தே “பம்பாய்!” எனும் பிரம்மிப்போடே பார்த்திருக்கிறேன். அப்போது இண்டியா கேட்டை விட கேட் வே ஆஃப் இண்டியாதான் கனவாக இருந்தது. பெரிய, தொன்மையான கட்டிடங்கள் கொண்ட தென்மும்பையில் கழட்டி விட்ட எருமை போன்ற நிதானமான நடை நல்ல அனுபவத்தைத் தந்தது. மும்பையில் யாரும் நடக்க மாட்டார்கள், ஓடிக் கொண்டு தானிருப்பார்களென யோகி சொன்னதை அனுபவிக்கையில் வித்தியாசமாக இருந்தது. மும்பை ஹிந்தி கொடுமை. சென்னைப் பேட்டைத் தமிழ் போலிருந்தது. எங்கும் ஜனத்திரள். மூச்சு முட்டும் கூட்டம். புறாக்கூண்டு போன்ற வீடுகள். பறவைகள் கூட நேரம் கணக்கிட்டுப் பறக்கும் போல. யாருக்கும் எதற்கும் நேரமில்லை. எல்லாமே கடிகார முட்களைக் கணக்கிட்டே நடந்தன. எல்லாவிதமான மக்களையும் பார்க்க முடிந்தது. எப்போதும் தங்களைக் கொஞ்சம் உயர்மட்டமாகக் காட்டிக் கொள்ளும் தில்லி மனிதர்களிடையே வாழ்கையில் மும்பை ஒரு புது அனுபவம் தந்தது. (முக்கியமா ஜுஹூ பீச் பக்கத்துல ஒரு கார்னர்ல திருநெல்வேலிக்காரர் வெச்சிருக்கற பாவ்பாஜிக்கடை அபாரம். செம டேஸ்ட்டான பாவ்பாஜி. நிச்சயம் முயற்சியுங்கள்.)

*************************************************************************************************************

தமிழ்மணத்தின் சேவை ஒவ்வொரு பதிவரும் அறிந்ததே. அத்தமிழ்மணத்தின் ஓட்டுகள் ஆரம்பமாகிக் கோலாகலமாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சகபதிவர்களிடமிருந்து வரும் ஆர்வக்கோளாறான மெயில்கள் சலிப்பைத் தருகின்றன. எனக்கு ஓட்டுப் போடுங்கள். போட்டால் நானும் உங்களுக்குப் போடுவேன் என்கிற ரீதியில் வரும் மெயில்களைப் பார்க்கையில் என்னவென்று சொல்ல... அரசியலில் ஓட்டு வேட்டை நடந்தால் கொதித்தெழுந்து பதிவெழுதும் பொறுப்புள்ள பதிவர்கள் இது போன்ற சிறுபிள்ளைத் தனமான செயலைச் செய்யலாமா...

*************************************************************************************************************

டெல்லிக் குளிருக்கும், அதனால் பரிசளிக்கப்பட்ட வைரல் காய்ச்சலுக்கும் நன்றி. அலமாரியில் எத்தனை புத்தகங்கள் உள்ளன, முடித்தவை எத்தனை, பாதியில் தொக்கி நிற்பவை எத்தனை, புத்தக வாசமே போகாமல் விரல் படாமலிருக்கும் புத்தகங்கள் எத்தனையென சென்செஸ் எடுத்து ஒவ்வொன்றாக நிதானமாய் வாசிக்க நேரம் கிடைத்தது. வாசிக்க வாசிக்க “என்னை இவ்வளவு நாளாய் உள்ளே பூட்டி வைத்த துரோகி”யெனப் புத்தகங்களெல்லாம் என்னை ஏசுவதாய் உணர்கிறேன். சோம்பேறித்தனத்தின் குற்ற உணர்ச்சி மேலிட தினமும் குறைந்தது 20 பக்கங்கள் வாசிக்க வேண்டுமெனத் தீர்மானமெடுத்துள்ளேன். கொஞ்சம் கொஞ்சமாக பக்கங்களைக் கூட்டிக் கொள்ளலாம். (அதே தான்... இனி மாசம் ஒரு புத்தக அறிமுகம் தான்.)

*************************************************************************************************************

இரண்டு புத்தகங்கள் வாசித்துக் கொண்டிருக்கிறேன். இரண்டுமே நண்பர்களின் பரிந்துரைகள். ஒன்று நாஞ்சில் நாடனின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்; மற்றொன்று அய்யனாரின் நானிலும் நுழையும் வெளிச்சம்.

நண்பனுக்காக அவனுக்கு வேண்டிய புத்தகமொன்றைப் புத்தகக் கண்காட்சியில் வாங்கப் போனபோது அங்கிருந்த புத்தக விற்பனையாளர், “இப்புத்தகம் எழுதியவர் இங்கு தானிருக்கிறார். கையெழுத்து வாங்கித் தரவா” என்றார். சரியென அவர் கையெழுத்துடனான புத்தகத்தை நண்பனுக்குப் பரிசளித்துவிட்டுத் திரும்பினேன். புத்தகத்தைத் திறந்து பார்த்தவன், அலாரமென அலறி என்னையழைத்துத் திட்டித் தீர்த்தான். “அவர் அங்கே ஸ்டால்ல இருந்தார்ன்னு ஏன் சொல்லல...” மெல்ல திட்டு வாங்கி ஃபோனை வைத்த பின் தான் அந்த எழுத்தாளரைப் பற்றியறியும் ஆர்வமும் அவரெழுத்துகளைத் தொடரும் வேகமும் வந்தன. தொடர்ந்து அவரின் இணையத்தில் வாசித்து வந்தாலும் அவரது புத்தகங்களை வாசிக்கும் தகுதியிருக்கிறதா எனத் தெரியாததால் இன்னும் அவ்ரெழுத்துகளை வாசிக்க ஆரம்பிக்கவில்லை. என் பெருமதிப்பிற்குரிய நாஞ்சில் நாடனின் கட்டுரைகளில் வசியமான மனது அவரின் சிறுகதைகளில் ஒன்றாது போனது என் துரதிருஷ்ட்மே. சீக்கிரமே அவரின் சிறுகதைகளை உள்வாங்கும் வாசிப்பிற்கு என்னைத் தயார்படுத்திக் கொள்கிறேன்.

அய்யனாரின் நானிலும் நுழையும் வெளிச்சம். அய்யனாரின் எழுத்துகளை மோகிக்கும் நண்பனின் பரிந்துரை. புத்தகத்தின் பெயரே மிகப் பிடித்தமாயிருக்கிறது. இப்புத்தகத்தைப் பற்றித் தனியே எழுத வேண்டுமென்பதால் இங்கே ஒரு முற்றுப்புள்ளி. (தனிப் பதிவெழுதாம விடமாட்டியே!)

*************************************************************************************************************

கோலாப்பூரில் ஒரு மல்டிகுஸின் ரெஸ்டாரண்ட்டை சக ஊழியரின் பரிந்துரையின் பேரில் முயற்சித்தேன். அபார ருசி. வாயிலேயே நுழையாத பெயர்கள். முதல் நாள் சாப்பாடு நன்றாக இருந்ததால் அடுத்த நாள் மறுபடி போனோம். விரைவிலேயே உங்கள் வயிறெரியப் படங்களுடன் பதிவு வரும். (நோ நோ... நோ பேட் வேர்ட்ஸ்)

*************************************************************************************************************

யோகி டைம்ஸ்
முன்பெல்லாம் ஏதாவது கோபம் வந்தால் நான் பல்லைக் கடிச்சிக்கிட்டு ஏதாச்சும் தமிழ்ல சொல்லிப்பேன். ஆனா இப்போல்லாம் முடியறதில்லை. அதிகம் என்னைக் கவனிக்கிறார் என்னவர். அப்படிக் கவனித்து அவராகவே கற்றுக் கொண்டு இப்போதெல்லாம் அடிக்கடி உபயோகிக்கறது... “அய்யோ, கடவுளே, கடவுளே.. கிடே வில்லே”
நான் ஏதாச்சும் தப்பு பண்ணாலோ இல்ல லூசுத்தனம் செஞ்சுட்டாலோ இது தான் அவர் டயலாக். “அய்யோ கடவுளே, கடவுளே” இது என்கிட்ட இருந்து கத்துக்கிட்டது. இதைத் தொடர்ந்து வரும் “கிடே வில்லே” பஞ்சாபி வார்த்தை. “எந்த நேரம்” எனப் பொருள். என் பேக்குத்தனங்களுக்கு அவர் சொல்ல வரும் அர்த்தம் இது தான்.
“அய்யோ கடவுளே, கடவுளே, எந்த நேரத்துல இவளை எனக்குக் குடுத்த...”
(ஙே!)

Tuesday, December 21, 2010

இனிது இனிது காதல் இனிது


இந்தப் புத்தகத்தைப் பற்றி இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு நான் எழுதினால் எழுத்தாளர்களும், இலக்கியவாதிகளும் என் பின்மண்டையில் அடிக்கக் கூடும். இருந்தாலும் என்னைப் போன்ற ஆரம்ப நிலை வாசிப்பாளர்களுக்காக பெரியவர்களிடம் அடி வாங்கிக் கொண்டு இக்காதல் பொக்கிஷம் பற்றி.

காதலின் இனிமையை, காதலின் வலியை, காதல் தரும் நிதானத்தை, காதல் தரும் உறுதியை, காதல் தரும் தெய்வீகத்தை, காதலுக்கும் காமத்திற்குமான வித்தியாசத்தை, இடைவெளியை எளிதாய், அருகிலேயே அமர்ந்து தோள் பற்றி நண்பன் சொல்வதற்கு நிகராய் சொல்கிறார் பாலகுமாரன்.

காதலில் எத்தனை வகை, எப்படியெல்லாம் காதல் வரும், எதையெல்லாம் காதலெனலாம், காதலில் வெற்றி எது, காதலில் தோல்வியுண்டா... என காதலைப் பற்றிய எல்லாக் கேள்விகளையும் தெளிவாய், பொறுமையாய் அவர் சந்தித்தக் காதல் அனுபவங்கள் கொண்டு அழகாய் விளக்கியுள்ளார். எங்குமே யாருக்குமே அறிவுரை கூற அவர் எத்தனிக்கவில்லை. முழுக்க முழுக்க வாழ்க்கைப் பாடங்களை புத்தக வரிகளாய்க் கொடுத்துள்ளார்.

அர்த்தமில்லாத வார்த்தைகளைக் கோர்வையின்றி மடித்து மடித்தெழுதி, சினிமாத்தனமான காதலை இந்தத் தலைமுறைக்குத் திணிக்கும் சில காதல் கவிஞர்களென அழைக்கபடுகிறவர்கள் மத்தியில் காதலின் உண்மையை, உன்னதத்தைத் தெரிவிக்கும் இந்நூலை ஒரு வருடமாக என் வீட்டுப் புத்தக அலமாரியில் வைத்துப் பூட்டிய பாவியானேன். மிஞ்சிப் போனால் நான்கே நாட்களில் இரண்டு பாகங்களையும் முடித்து விடுமளவு எளிமையான மொழி. வாழ்க்கையின் அர்த்தத்தைத் அறிவித்துப் போகிறது.

புத்தகத்தில் அடிக்கோடிட வேண்டிய வரிகள் என்றில்லாது மொத்தப் புத்தகமுமே சம்பவங்களாக, காட்சிகளாக மனத்திரையில் வந்து வந்து போகிறது. நிச்சயம் நம் வாழ்வில் கடந்து வந்த ஏதோவொரு காதல் ஜோடியையோ, ஏதோவொரு காதல் அனுபவத்தையோ மீட்டெடுத்து வரும் வாசிப்பானந்தம்.

பாலகுமாரன் பெண்களின் மனதை நன்கு புரிந்து வைத்திருப்பவர் என அம்மாவில் ஆரம்பித்து அனேகமாய் அவரை வாசித்தவர்கள் அனைவரும் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். பெண்களின் மனதை மட்டுமல்ல. மனித மனதை, மனித மனத்தின் உணர்வுகளை நன்கு புரிந்தவரென்பதை இப்புத்தகத்திலும் காட்டியுள்ளார்.

காதலிப்பவர்கள், காதலை வெறுப்பவர்கள், காதலைத் தூற்றுபவர்கள், போற்றுபவகள், கொண்டாடுபவர்கள், காதலில் திளைப்பவர்கள், காதலைக் கடந்தவர்கள் என எல்லாராலும் விரும்பப்படும் புத்தகமிதென்பதில் சந்தேகமில்லை. உங்கள் நண்பருக்கோ / காதலருக்கோ என்ன பரிசு வாங்கவென யோசித்துக் கொண்டிருந்தால் நிச்சயம் இந்தப் புத்தகத்தைப் பரிசளிக்க நான் பரிந்துரைப்பேன். ஏனெனில் இது காதலருக்கான புத்தகமல்ல. காதலின் புத்தகம்.

பெரும்பாலும் எல்லோராலும் வாசிக்கப்பட்டிருந்தாலும் என்னைப் போல் யாராவது வாசிக்கத் தவறவிட்டிருந்தால் உடனடியாக வாசியுங்கள். நிச்சயம் வாசித்தலின் த்ருப்தி கிடைக்கும்.

புத்தகம் - இனிது இனிது காதல் இனிது (பாகம் 1, பாகம்2)
ஆசிரியர் - பாலகுமாரன்.
வெளியீடு - விசா பதிப்பகம்.
விலை - ரூ. 75 + ரூ. 68/-
முதற்பதிப்பு - ஆகஸ்ட் 1991.