Tuesday, February 24, 2009

காதலர் தின கூத்துக்கள்



இதுவரை காதலர் தினம், கொண்டாடும் அளவுக்கு சிறப்பு தினமாக இருந்ததில்லை எனக்கு. கல்லூரி நாட்களில் அதைப் பற்றிய ஆர்வமோ, ஆசையோ இருந்ததில்லை. நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து ஒவ்வொரு காதலர் தினத்திற்கும் குறைந்தது 2-3 ப்ரோபோசல்கள் வந்ததுண்டு. அப்போதெல்லாம் காதல் என்றாலே ஏதோ பெரிய தவறு என்கின்ற உணர்வு. இப்படியே வேலைக்கு வரும் வரை காதல் மேலோ, காதலர் தினத்தின் மேலோ பெரிதாக எந்த ஒரு ஈடுபாடும் இல்லை.

எங்களது திருமணம் காதல் திருமணம். திருமணத்திற்கு முன்பு வந்த இரு காதலர் தினத்திற்கும் நாங்கள் பார்த்தது கூட இல்லை. ஒவ்வொரு காதலர் தினத்தன்றும் நாங்கள் எங்கள் வேலையில் மூழ்கியிருந்தோம். வழக்கம் போல் காலையில் ஒரு ஹாய். இரவு "Hi, How was the day. Hope things are fine at your end. Ok, bye" . அவ்வளவு தான். என்னவோ, ஒரு " I love you" கூட சொல்லிக் கொள்ள தோன்றவில்லை.

இந்த வருட காதலர் தினம் எங்களது திருமணத்திற்குப் பின் வரும் முதல் காதலர் தினம். இந்த முறை நாங்கள் பெங்களூரில் இருந்ததால், மாலை இருவரும் Noodle Bar Restaurant, Ulsoor சென்றிருந்தோம். நாங்கள் போனது என்னவோ, நல்ல சாப்பாடு சாப்பிட்டு, அலுவலக வேலைகளை மறந்து, பேசலாம் என நினைத்து. ஆனால், அங்கு நடந்த கூத்து வேறு.

போனதும் ஒரு சிவப்பு உடை அணிந்த அரை நிர்வாணப் பெண் எங்களை வரவேற்றார். அவர் அங்கு பார்ட்டிக்கு வந்த பெண்களில் ஒருவர் என நான் நினைத்துக் கொண்டிருந்தேன். பின் தான் தெரிந்தது, அவர் அந்த ஹோட்டலின் பணிப்பெண் என்பது. உள்ளே நல்ல அலங்காரம். அழகான டேபிள். அதன் நடுவே ஒரு மெழுகுவர்த்தி. மனதைக் கொள்ளை கொள்ளும் நெடியில்லாத மணம். மெல்லிய இசை என்று ரம்மியமான சூழல்.

அடடா..... "What a situation" என நினைத்த பத்தாவது நிமிடம் ஆரம்பமானது, காதைக் கிழிக்கும் இசை. அங்கு கூடியிருந்த காதலர்களில் பல பேர் எழுந்து ஆடலானார்கள். ஆரம்பித்த போது நன்றாக தான் இருந்தது. அங்கிருந்த DJ குழுவினரில் ஒருவர் வந்து எங்களுக்கு இதய வடிவ பலூன் கொடுத்து ஆட வரவேற்றார். DJ மற்றும் Dance நடந்து கொண்டிருந்த ஹாலுக்குள் நுழைந்தோம். அங்கிருந்த DJ நண்பர் காதலர்களை தங்கள் நெற்றியின் நடுவே அந்த பலூனை வைத்து ஆடுமாறு அழைத்தார். முதலில் பார்க்க வேடிக்கையாக இருந்தாலும், நெற்றியிலிருந்த பலூன் மூக்கு, உதடு, கழுத்து.... என இறங்கி காதலர்களை கிறங்கடித்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த என்னவர், "இங்கே வேணாம். வா கூல்ட்ரிங்க்ஸ் சாப்பிடலாம்" என என்னை அந்த ஹாலை விட்டு வெளியே அழைத்து வந்தார்.

இரண்டு நேபாள சிறுவர்கள் தட்டில் சைவ மற்றும் அசைவ ஸ்நாக்ஸ்களை பரிமாறிக் கொண்டிருந்தனர். அதைக் கொறித்துக் கொண்டே, ஏன் திருமணத்திற்கு முன்பே எங்களுக்கு காதலர் தினம் கொண்டாட தோன்றவில்லை எனப் பேச ஆரம்பித்து, இந்த வருட டூர் ப்ளான்களை அடுக்கிக் கொண்டிருந்தோம். என்னவர் வட நாட்டுக்காரர் என்பதால், அவருக்கு கேரளா, மதுரை, சென்னை, ஊட்டி, கொடைக்கானல், திருப்பதி போன்ற இடங்களுக்கு போக வேண்டும் என்பது ஆசை. எனக்கு குளு, மணாலி, வைஷ்ணுதேவி, சிம்லா, ஜம்மு, ராஜஸ்தான் சுற்ற ஆசை. சரி, இருவரின் விருப்பப்படியும் இந்த ஆண்டு ஊர் சுற்றும் ஆண்டாக முடிவு செய்யப்பட்டது.

பேசிக் கொண்டிருந்த நேரத்தில், உள்ளிருந்து "Mauja hi mauja from Jab we met" பாடல் கேட்கவே, எனக்கு ஆட வேண்டும் போல் தோன்ற, அவரிடம் கேட்டேன். சரி என்று உள்ளே சென்று அந்த பாடலுக்கான ஆட்டத்தை போட்டுவிட்டு, அடுத்ததாய் "அப்படி போடு" பாடலுக்கு மற்றவர் ஆடுவதையும் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தோம். எங்களைப் போல் இன்னும் மூன்று திருமணமானவர்கள் வந்திருந்தனர். அவர்களில் ஒரு ஜோடி, பயங்கர குஷியாக ஆடிக் கொண்டிருந்தனர். மற்றொரு ஜோடியில் அந்த பெண் மட்டும் ஆடிக் கொண்டும், கணவர் கம்பெனிக்காக குதித்துக் கொண்டும் இருந்தார். மற்றொரு தம்பதியினரில், கணவர் Barcade ஐ ருசித்துக் கொண்டும், மனைவி அனைவரின் ஆடல்களையும் ரசித்துக் கொண்டும் இருந்தனர்.

இதற்கு நடுவே "கடந்த ஒரு மணி நேரமாய் பலூனை எடுக்காமல் நடனமாடியவர்கள் என ஒரு ஜோடிக்கு பரிசும், Best party wear என மிகக் குறைந்த ஆடைகளே அணிந்திருந்த ஒரு பெண்ணுக்குப் பரிசும் அளிக்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர்காரியாகிய நான் என்னவரிடம், "பொண்ணுங்க எப்படி இப்படியெல்லாம் டிரஸ் பண்றாங்க. வீட்ல அம்மா, அப்பா திட்ட மாட்டாங்களா" எனக் கேட்க, அவர் வழக்கம் போல், "You, my village girl" என்ற டையலாகுடன் "அவங்க அம்மாவே அப்படி டிரஸ் பண்ணிட்டு போறப்போ, பொண்ண என்ன சொல்வாங்க" என்று சொல்ல, அம்மாவுமா..... என்றேன்.

"சரி, பசிக்குது. வா சாப்பிடலாம்" என அழைத்தார். சரி என சாப்பிட போன போது தான் ஏமாற்றமே. பார்க்க அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த உணவுகள் அனைத்தும், சுவையில் மைனஸ் மார்க் வாங்கின. Cream of Tomato soup வைத்திருந்தார்கள். அதை எடுத்து சுவைத்தால், உப்பு மிக அதிகமாய், வாயில் வைக்க முடியவில்லை. பின், அதற்கடுத்ததாய் இருந்த பட்டர் நானை பாதி எடுத்துக் கொண்டு, பட்டர் பனீர் மற்றும் யெல்லோ தாலையும், கொஞ்சமாய் சாதத்தையும் எடுத்துக் கொண்டு போய் ஒரு ஓரத்து டேபிளில் அமர்ந்தோம்.

சாப்பிட முடிந்தவற்றைக் கஷ்டப்பட்டு முடித்த எங்களுக்கு, வேறு என்ன அயிட்டங்கள் இருக்கிறது என்று கூட பார்க்க தோன்றவில்லை. அப்படி இருந்தது, ஏற்கனவே சாப்பிட்ட உணவின் சுவை. பின், என்னவர் எனக்காக ரெண்டு ஸ்பூன் தயிர் சாதம் கொண்டு வந்து குடுத்தார். அந்த டின்னரில் அவருக்கு பிடித்திருந்தது அந்த தயிர் சாதம் மட்டுமே. எப்போதும் என்னை தயிர் சாதம் என்று சொல்லும் அவரை, அன்று நான் சொல்லிக் கொண்டிருந்தேன். கடைசியாக, பாவப்பட்ட குலப் ஜாமூனும், வெனிலா ஐஸ் கிரீமும் இருந்தன. அதைப் பார்த்து முறைத்து விட்டு, மீண்டும் ரெஸ்டாரண்டிலேயே அமர்ந்தோம். அப்போதும் அந்த நேபாள சிறுவர்கள், ஸ்நாக்ஸை நீட்டினர். ஆனால், அதை எடுக்க யாரும் தயாராக இல்லை. பின், அனைத்து ஜோடிகளுக்கும் ஒரு சிவப்பு ரோஜா மொட்டு கொடுக்கப்பட்டது. அன்றைய நாளில், அது காஸ்ட்லி கிப்ட் தான். அதை வாங்கிக் கொண்டு, இதற்கு மேல் இங்கிருந்தால், இன்னும் இதை வைத்து அடுத்த கேம் ஆரம்பித்து விடுவார்கள், அந்த கருமத்தையும் பார்க்க வேண்டாம் என கிளம்பினோம்.

ஒரு ரொமான்டிக் டின்னர்க்கு போய் அது கடைசியில், டெர்ரிபிக் டின்னராக முடிந்தது. அந்த இரவு, பெண்கள் கேட்ட சம உரிமை, விடுதலை எல்லாம் இப்படி அரைகுறை ஆடையில் அலையத்தானா என்ற சிந்தனையிலேயே தூங்கிப் போனேன். என்ன கலாச்சாரமோ
.

Monday, February 23, 2009

கடனாய் வேண்டும், கொஞ்சம் நேரம்!



சிலரது ப்ளாக்குகளை படிக்கையில், அப்படியே ஒரு நாள் ஓடிவிடும். அவ்வளவு சரக்கு இருக்கும் உள்ளே. ஆனால், ஏனோ என்னால் மட்டும் ஒரு மாதத்திற்கு ஒரு பதிவு மட்டுமே எழுத முடிகிறது. நான் குறைவாக எழுதினாலும், அதை வாசித்து பின்னூட்டமிடும் சிறு நண்பர்கள் வட்டம் எனக்குண்டு. ஆனால், அவர்களிடமிருந்து எனக்கு வைக்கப்பட்ட கேள்வி, "நீங்க ஏன் நிறைய எழுத மாட்டேங்குறீங்க..."

எனக்கும் எழுத வேண்டும் என்ற எண்ணம் தான். ஆனால், நேரம் இல்லை என்பது தான் உண்மை. பல பேரும் நேரம் இல்லை என சொல்வதைக் கேட்டு "எல்லாருக்கும் இருக்கறது 24மணி நேரம் தான். அதை மேனேஜ் பண்ண தெரியாமல் நேரம் இல்லை என சொல்வது தவறு" என்று அட்வைஸ் அம்புஜமாக நான் அவதாரமெடுத்தது நினைவிற்கு வருகிறது. ஆனால், இன்று அதை உண்மையாகக் உணரும் போது தான் எனக்கும் 24 மணி நேரம் போதாதது போல் தெரிகிறது.

கார்க்கியிடம் "உங்களால் எப்படி இத்தனை பதிவுகள் எழுத முடிகிறது" எனக் கேட்டிருந்தபோது, தினமும் ஒரு பதிவு என்ற கணக்கில் எழுத சொன்னார். நல்ல யோசனை தான் என்று, நானும் அவ்வாறே எழுத எண்ணிய நாள், வேலை விஷயமான ட்ரிப் வந்தது. வேலை நிமித்தமாக வெளியூர் செல்ல நேர்ந்தால், அங்கு நேரம் கிடைப்பது குதிரைக் கொம்பு. காரணம், காலையில் 9 மணிக்கு அலுவலகத்தில் நுழையும் நான், வெளியேற குறைந்தது 8 மணி ஆகிவிடும். பின் அரை மணி நேர பயணத்தில் ஹோட்டல். வந்ததும், refresh ஆகி, டின்னர் முடித்து, மணி பார்த்தால், 10 ஆகி இருக்கும். பின் தினசரிகளை அரை மணி நேரம் புரட்டி, செய்திகளையும் அதே சமயத்தில் கேட்டு கொஞ்சம் அப்டேட் செய்து விட்டு, laptop ஐ திறந்து அன்றைய User problems ஐ solve செய்து, அடுத்த நாளுக்கான பிளானை தயார் செய்து விட்டு, தூங்க ஒரு மணி ஆகிறது. காலை ஏழு மணிக்கு அலாரம் வைத்து, அதை ஆப் செய்து விட்டு, எட்டு மணிக்கு எழுந்து அரக்க பறக்க கிளம்பி, மறுபடியும் 9 மணிக்கு அலுவலகம். இதில் எப்படி தினமும் ஒரு பதிவு எழுதுவது....

இதில் சில தோழிகளின் கேள்வி, உடம்பை குறைக்க யோகா பண்ணக் கூடாதா.... பண்ண ஆசை தான். அதற்கும் நேரம் வேண்டுமே!!! எங்காவது கடனாய்க் கிடைத்தால் நல்லது.

Wednesday, February 4, 2009

இந்த வாரம் இவ்வளவு தான்

அவர் இரண்டு நாள் லூதியானாவிற்கு சின்ன டூர் அடித்திருப்பதால், வழக்கம் போல் துணைக்கு யாரையாவது அழைத்து வர வேண்டுமே. போன முறை சோனல் ஐக் கூப்பிட்டு மூன்று வேளையும் தோசையைப் போட்டு பாடாய்ப்படுத்தியதால், இந்த முறை மோனிகாவை அழைத்தேன். தினமும் ஆபிசில் என் சாப்பாட்டை சுவைத்து 'வாவ்!' சொல்பவள் அவள். அவளுக்கு திருமணம் நிச்சயம் ஆகியிருப்பதால், என்னிடம் சமையல் கற்று கொள்வேன் என்று வீட்டிற்கு வந்து அவள் செய்யும் சமையல் கூத்தில் எனக்கே சமையல் மறந்து விடும் போலிருக்கிறது. [நானே இப்போ தான் கொஞ்சம் தேறிட்டு வர்றேன்! அதுக்குள்ளே ஆப்பா.... :( ]

**************************************************
ரெண்டு நாளாய் ஆன்லைனில் முழு நேரமும் ஆனந்த் இருப்பதை பார்த்து, அவர் விடுமுறையில் இருப்பதாய் விவரமறிந்தேன். வெட்டியா ஆன்லைனில் உக்காந்து என்ன பண்றீங்கன்னு நேற்று ஒரு மணி நேரம் போனில் போட்ட மொக்கையில் இன்றைக்கு காலைலேயே மனுஷன் எங்கேயோ எஸ்கேப். போன் செய்து கேட்டதில் சாதராவிற்கு ஏதோ ஒரு வேலையை முடிக்கப் போனதாய் சொன்னார். சந்தோசம்.[நான் சொல்லி கூட கேக்க ஆள் இருக்குப்பா.... :) ]

**************************************************
"தோஸ்தானா" படத்தை அளவுக்கு அதிகமாய் சிரித்து பார்த்ததில், கடுப்பாகிப் போயிருந்தார், என்னவர். படம் பார்க்கும் போது அதில் அதிகமாய் காமெடி இருப்பதாய் நினைத்து ஓவராய் சிரித்து விட்டேன். படம் முடிந்ததும், "இதில அப்படி என்ன இருக்குன்னு இப்படி விழுந்து விழுந்து சிரிச்ச" என்று அவர் கேட்ட போது சற்றே யோசித்து "ஆமா, ஒண்ணுமே இல்ல. இதுக்கு ஏன் இவ்வளவு சிரிச்சேன்" என்றெண்ணி அவரிடம் அசடு வழிந்து தொலைந்தேன். [அடிக்கடி இந்த மாதிரி ஏதாவது கேனைத்தனங்கள் செய்வதுண்டு]

**************************************************
இரண்டு நாட்களாய் Project Manager இல்லாத கொழுப்பில், அனைத்து தமிழ் Blogகளையும் தேடி படித்து விட்டு, நாளை அவரிடம் ரிப்போர்ட் செய்வதற்காக வேலையை அவசரமாய் முடித்துக் கொண்டிருக்கிறேன். [வாங்குற சம்பளத்துக்கு கொஞ்சமாவது வேலை செய்யணுமே.]

**************************************************