Friday, October 22, 2010

என் இனிய நட்புகளுக்கு..

ஹாய் ஹாய் ஹாய்... எல்லாரும் ரொம்ப சந்தோஷமா இருக்கீங்களா ரெண்டு மாசமா நான் அதிகம் மொக்கை போடலைன்னு. குட். இதே சந்தோஷம் இன்னும் ஒரு மாசத்துக்கு உங்களுக்குத் தொடரட்டும். தீபாவளிக்கான வீட்டு வேலைகள் மட்டுமில்லாம அலுவலகத்திலும் வேலை நெருக்கடிகள் ரொம்ப ஆகிடுச்சு. அதுனால ப்ளாகுக்கு சந்தோஷமா ஒரு மாசம் லீவ் விட்டுட்டு அப்புறமா ஃப்ரெஷ்ஷா வந்து எழுதலாம்னு எண்ணம்.

இடைப்பட்ட நேரத்தில் நிறைய அலுவல்களை முடிக்க வேண்டியுள்ளது. எழுத்து, ஆர்வம் என்றில்லாமல் பாரம் எனும் நிலைக்கு சென்று விடும் நிலை வந்திடக் கூடாதென்பதாலே இவ்விடைவேளை.

ரொம்ப சந்தோஷப்பட்டுக்கிட்டவங்க எல்லாருக்கும் - ஒரே மாசம் தான். அப்புறம் வந்து வரிசையா வெரைட்டியா பதிவு போடப் போறேன். அதுக்கான ஐடியாஸெல்லாம் உள்ளே ஓடிட்டே தான் இருக்கு. ஆனா இப்போதைக்கு உக்காந்து எழுத முடியல. அதுனால இந்த இடைவேளைக்குப் பின் பட்டாசு தான்.

நண்பர்கள் எல்லாரும் மகிழ்ச்சியாக, நிறைவாக, பாதுகாப்பாக தீபாவளியைக் கொண்டாடுங்கள். இந்தத் தீபாவளியில் உங்களால் ஒருவரின் முகத்திலாவது புன்னகை ஒளியேற்ற முடிந்தால் செய்யுங்கள். இந்த தீபாவளி சிறப்புத் தீபாவளியாய் அமைய வாழ்த்துகள். சந்திப்போம்.


Tuesday, October 12, 2010

மழை மரப் பறவைகள்

அன்றைய நாளின் அத்துணை இறுக்கத்தையும் நெகிழ்த்துவதாய் ஜன்னல் வழி பூமிக்கு நிழல் நிறம் கொடுத்துக் கொண்டிருந்தது ஆகாயத்தின் துளிகள். மழை! மருதாணி கழுவிய உள்ளங்கையாய் பளிச்சென புதுசாக்கிக் கொண்டிருந்தது பெருங்குரலில்.

கூரையால் பாதுகாக்கப்பட்ட மாடித் தளத்திலிருந்து மழையைப் பார்ப்பது கொஞ்சம் பொறாமையாகத் தானிருந்தது. கீழே உற்றுப் பார்க்கும் தூரத்தில் செடியருகே ஊர்ந்து கொண்டிருந்தது ஒரு மரவட்டை. நீரைப் போலவே கரை புரளும் தாறுமாறான சிந்தனைகள். அலுமினியப் பாத்திரங்கள் வைத்துத் தொட்டி நிறைத்துத் தருவதாய் போலி சொற்களால் அனுமதி பெற்று, நீரூற்றாய்ப் பெருகி வரும் தற்காலிக மழையருவியில் ஆடிய ஆட்டங்களும், அதைத் தொடர்ந்து வரும் ஒரு ஜோடி விடுமுறை நாட்களும் நினைவில் வந்து போயின. மழையை ரசித்துத் தொடர்ந்த உரையாடல்கள், பெரு மழை நாளில் தொடர்ந்தொலித்த வானொலி மழைப்பாடல்கள், குடையையும், ரெய்ன் கோட்டையும் வேண்டுமென்றே மறந்து வைத்து விடும் குறும்பு நாட்களென ஒவ்வொரு மழை நாளும் நினைவுகளில் ஆர்ப்பாட்டமானது.

பல வருடப் பின்னோக்கிய சிந்தனைகளிலிருந்து இருந்த நிமிடத்திற்கழைத்து வந்தது மழையின் காரணமாய்க் கேட்காமலே வந்த ப்ளாக் காஃபி. மழை ஒரு ரசனையெனில் கையில் புகையெழும்பும் காஃபிக் கோப்பை அதனினும் ரசனை. கண் மூடி மழை சத்தத்தை செவிகளுக்களித்து உதடுகளுடன் ஒண்டவிருக்கும் காஃபிக் கோப்பை அதற்கும் முன்னால் தன் வாசத்தை நாசிக்குள் இழுத்து செல்வதென நொடிப் பொழுது சுகம். காஃபிக் கோப்பையைக் காலி செய்த நேரம் மழை விட்டு சேய்த்தூறல் மிச்சமிருந்தது. தனியே விளையாடும் குழந்தை பார்ப்பவர்களையெல்லாம் விளையாட உடனழைப்பதைப் போல் என் மேலும் விழுந்தழைத்தது அத்தூறல்.

அதியுற்சாகமாக உடை மாற்றிக் கிளம்பினேன். தெரியா ஊரில் தொலைந்து விட்டால் திரும்பி வர கையில் கைபேசியும், பாக்கெட்டில் சில நூறுகளையும் திணித்துக் கொண்டேன். எங்கே போகிறேனெனத் தெரியாது. தெரிந்து போகும் பயணங்களை விட இலக்கில்லாப் பயணங்கள் சுவாரசியமெனக் கேள்வி ஞானம் மட்டுமே உண்டு. அனுபவித்து மகிழ ஆயத்தமாகிவிட்டேன். உடன் யாரையும் அழைத்துக் கொள்ளவில்லை. நிலா வருவதற்கு இன்னும் கொஞ்சம் நேரமிருக்கும் மாலை.

வழியெங்கும் சகதி. திரும்பிவிடலாமா? கருமேக முகடுகளைப் பார்த்தவாறே யோசித்துக் கொண்டிருந்த வேளை, தெருவோரக் கல்லிலிருந்து எதிரேயிருந்த தண்ணீர்த் தேங்கலை நோக்கிக் குதித்தது தவளையொன்று. பறவையின் சிலும்பலிலிருந்து தெளித்த நீர் விழுந்து தலை தாழ்ந்தது அருகிலிருந்த செடியின் இலை. தெரிந்தவனைத்து ராகங்களையும் ஒலித்துக் கொண்டிருந்தன மழை ஈசல்கள். இவற்றின் துணையுடன் நடப்பது பரமசாத்தியமானதாக இருந்தது.

மணல் வழியெங்கும் மழை விட்டுச் சென்ற காகிதக் கப்பலுக்கான சிறு குளங்கள். எதிர் வரும் வாகனங்களில் பட்டுத் தெறிக்கும் தண்ணீர்த் துளிகளில் மின்கம்பங்களின் ஒளி பட்டு மிளிரும் தங்கத் துளிகள், புது முக மனிதர்கள், புரியாத பாஷை, திக்குக்கொன்றாய் பல இனங்களின் இரவுக் கூச்சலென பரவச உணர்வுகள் பூத்துச் சொரிந்திருந்த நேரம். எல்லாம் நல்லதாய் நடப்பதாகவே ஒரு தோணல்.

நடந்து நடந்து எங்கு சென்றேனெனத் தெரியவில்லை. தூரத்தில் ஒரு கடை தெரிந்தது. காஃபி ஷாப்பாக இருக்கலாம். நெருங்கிப் பார்க்கையில் தான் தெரிந்தது பேஸ்ட்ரி ஷாப்பென. எதையோ யோசித்துக் கொண்டே “ஒரு ப்ளாக்பெரி” என்றேன். அழகாய் சிரித்தவன், “ப்ளாக்ஃபாரஸ்ட்?” என்றான். ஒரு கண் மூடி நா கடித்து “யெஸ்” என்றேன். கையில் பேஸ்ட்ரியுடன் மேஜை தேடி அமர்கையில் பக்கமிருந்த மழலைகள் மூக்கிலும் தாடையிலும் அப்பிக் கொண்டு சாப்பிடுவது அவ்வளவு அழகாக இருந்தது. ஒரு செய்கையும், சேட்டையும் பிசகில்லை, மிகையில்லை. அழகான ஓவியமாக இருந்தது அக்காட்சி.

மறுபடி பிடித்துக் கொண்டது மழை. பெருமழை. அறைக்குப் போய்ச் சேரும் வழியை மறந்து விட்டேன். வெளியில் கடந்த ஆட்டோவை அழைத்து விலாசம் சொல்லி சென்றடைந்ததும் எவ்வளவெனக் கேட்க, மிகப் பரிதாபமாய் 12 ரூபாய் எனக் காட்டிய மீட்டர் பார்த்து “பந்த்ரா ருப்யா தீஜியே மேடம்” என்றார் ஆட்டோ ஓட்டுனர். அதிசயமாயிருந்தது. 1 கிமீக்கு பதினைந்து ரூபாய், அதுவும் கொட்டும் மழையில். தவிர அதைக் கேட்ட விதம் மிக பவ்யமாயிருந்தது.

ஒரு மணி நேரம் எனக்கே எனக்காய் விருப்பமாய் செலவழித்து அறை நோக்கி நடக்கையில் துடைத்து சுத்தமாக்கப்பட்ட விஸ்தார வெளியில் பறந்து கொண்டிருந்தது மனது. “பறவையின் சிறகு வாடகைக்கு கிடைத்தால் உடலுக்குள் பொருத்தி பறந்து விடு” தொலைக்காட்சியில் ஒலித்துக் கொண்டிருந்தது.