Wednesday, May 26, 2010

ப்ளாகோமேனியா



உசுரே போகுதே உசுரே போகுதே....ன்னு கார்த்திக் உருகும் போது நிஜமாவே உசுரே போகுது. ச்சே, என்ன ஃபீல் குரல்ல இந்த மனுஷனுக்கு. காலேஜ்ல இருக்கும் போது கார்த்திக்கின் குரல் மீது தீராக் காதல் கொண்டவள் நான். யாருக்குக் கார்த்திக்கை ரொம்பப் பிடிக்கும்ன்னு பொண்ணுங்களுக்குள்ள போட்டியெல்லாம் உண்டு. அவர் வேற சின்ன பையனா ஸ்மார்ட்டா இருப்பாரா.. எந்தப் பொண்ணுக்குத் தான் பிடிக்காது. எங்க ரூம் முழுக்க தினமும் சாயங்காலம் கார்த்திக் குரல் ஒலிச்சுட்டு இருக்கும். ப்ரொஃபஸர்ஸோட லெக்சர்ஸ்ல இருந்து மண்டையைக் காப்பாத்தினது கார்த்திக் தான். அவரோட நேந்துக்கிட்டேன்ல ஆரம்பிச்சு இப்போ வரைக்கும் ஒவ்வொண்ணுமே ரசனை ரகம். சரி, இப்போதைக்குக் கார்த்திக்கை விட்டுடலாம். அவரோட “உசுரே போகுதே” தான் மேட்டர். எல்லாருக்கும் இந்தப் பாட்டுப் பிடிக்கும்ன்னு தெரியும். இதைக் கேட்டவங்க இதே பாட்டை அவர் ஹிந்தில பாடிருக்குறதையும் கேளுங்களேன். ச்சே, அதே உருக்கம். தமிழ் “உசுரே போகுதே”லேயும், ஹிந்தி “பெஹனே தே”லயும் அவர் குரல்ல என்ன வித்தியாசம்ன்னு தெரிஞ்சுக்க ரெண்டையும் ஒரே நேரத்துல ப்ளே பண்ணிக் கேட்டேன். ச்சே, ஒரே மாதிரி போகுது ஏ.ஆர்.ஆர். ம்யூசிக்கும், கார்த்திக் குரலும். கார்த்திக்கைப் புகழ்ற இந்த நேரத்துல அவர் கூட சேர்ந்து போற குரலை மட்டும் விட்டுட்டா எப்படி... மொஹமத் இர்ஃபான் குரல் கார்த்திக் குரல் கூட அவ்ளோ ஆப்ட்டா பொருந்திப் போகுது. ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு நல்ல பாட்டைக் குடுத்ததுக்கு நிச்சயம் பாராட்டுகள். (என்னை மாதிரியே கார்த்திக் குரலைக் காதலிப்பவர்களின் செவிக்கு விருந்து இங்கே. என்ஜாய் மக்களே)

*************************************************************************************************************

ரொம்ப நாளாக ஃபேஸ்புக்கிற்குள் நுழையாமல் தவிர்த்து வந்தேன். நேரமின்மை அதற்கான காரணமாக இருந்திருந்திருக்கலாம்.போன வாரம் கலீக் ஒருத்தன் அதில் விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்து கேட்டேன். அவனே சொல்லிக் கொடுத்து ஆரம்பித்தும் கொடுத்தான். அன்றிலிருந்து இன்று வரை தினமும் வீட்டு ஸ்டவ்வில் என்ன இருக்கிறதென மெனக்கிடுகிறேனோ இல்லையோ, கஃபேயில் என்ன என யோசித்துக் கொண்டிருக்கிறேன்.இது தவிர ஆரம்பித்த 2 நாட்களில் காலை எழுந்ததும் அய்யோ நேத்து அடுப்புல வெச்சது பொங்கி வழிஞ்சிருக்குமே எனப் பதறி லேப்டாப்பைத் திறந்தேன். கிட்டத்தட்ட ஒரு அடிக்‌ஷன் மாதிரி ஆகிவிட்டது. இனி எது பொங்கி வழிஞ்சாலும், எத்தனை ஈ மொய்ச்சாலும் அந்தப் பக்கம் திரும்பிக் கூட பார்க்கக் கூடாதுன்னு இருக்கேன். (இந்த முறையாவது சொன்ன வாக்கைக் காப்பாத்துறேனான்னு பார்க்கலாம்)



*************************************************************************************************************

நேற்றைய பேப்பரில் வாசித்த செய்தி ஒன்று. தொலைபேசி, கைபேசி, இண்டெர்னெட் என எல்லாம் கண்டுபிடிக்கக் கூடிய தகவல் தொடர்பென்பதால் தீவிரவாதிகள் வண்ணமிட்ட புறாக்களைப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் புறாக்களின் வாலிலும், இறகுகளிலும் செய்திகளை எழுதிப் பரிமாறிக் கொள்வதாக மும்பை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அனைத்துப் புறாக்களையும் பிடித்து சோதனை நடத்தப்படுகிறது. பாவம் போலீஸ். இப்படிப் புறா பிடிக்க ஆரம்பிச்சுட்டாங்களே. (இனி காவல் துறை ட்ரெய்னிங்கில் புறா பிடிக்கும் பயிற்சியும் சேர்ப்பாங்களோ!)


*************************************************************************************************************

வோடஃபோனின் சர்வீஸ்களில் தற்போது மிகவும் பயனுள்ள, குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு உபயோகமாக இருப்பது வோடஃபோன் ட்யூஸ்டே ஆஃபர்ஸ். ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் TUESDAY M (For Movie) அல்லது TUESDAY F (for Food) என 56789 என்ற எண்ணுக்கு எஸ்ஸெமஸ்ஸினால் நமக்கு ஒரு கோட் கிடைக்கிறது. அதைக் கொண்டு குறிப்பிட்ட சினிமா தியேட்டர்களிலும், ரெஸ்டாரண்ட்களிலும் 1+1 ஆஃபர் செல்கிறது. இது கிட்டத்தட்ட ஒரு வருடமாக சென்று கொண்டிருந்தாலும் இந்த மாதம்தான் அதை உபயோகிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 150 ரூபாய்க்கு இரண்டு சினிமா டிக்கெட்டுகளும், 350 ரூபாய்க்கு 2 பீட்சாக்களும் குறைவில்லை தானே. முயற்சித்துப் பாருங்களேன். இந்த ஆஃபரின் கீழ் வரும் ரெஸ்டாரண்ட்களும் மூவி ஹால்களும் இங்கே. (பல தோழிகளை வைத்துக் கொண்டு பர்ஸ் வெயிட்டை யோசித்துக் கொண்டிருக்கும் சகாக்கள் செவ்வாய்க் கிழமைகளில் பட்டையைக் கிளப்பலாம்)

*************************************************************************************************************

வர வர ப்ளாகோமேனியா முத்திப் போய் அலையுறேன். எப்போது எதைப் பார்த்தாலும் அதை எப்படி எழுத்து நடையில் கொண்டு வருவது என்ற யோசனையாகவே உள்ளது. பதிவெழுதுவதற்காகவே புது ரெஸ்டாரண்ட்களையும், புது ரக உணவுகளையும் முயற்சிக்கத் தோன்றுகிறது. எப்போதும் யோகியிடம் “யோகி இந்த டாபிக் வெச்சு எப்படி எழுதலாம்” என ஆலோசனை கேட்கிறேன். ஏதாச்சும் கான்செப்ட் கிடைச்சா நைட்டெல்லாம் யோசிச்சுட்டே தூங்கிப் போய் பதிவு கனவுலேயே பில்டப் ஆகிடுது. யார்கிட்டே பேசினாலும் புத்தகங்களையோ, எழுத்துகளைப் பத்தியோ பேசத் தோணுது. யோகி பாவம். என்னை வெச்சுக்கிட்டு ரொம்பக் கஷ்டம் தான். (ஓவரா முத்திப் போய் ரோடுல திரியாம இருந்தா சரி தான்)

*************************************************************************************************************

சில நாட்களுக்கு முன்பு ராவண் படம் பற்றிய தொகுப்பு ஹிந்தி செய்தி சேனல் ஒன்றில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.அதில் வந்த நடனக் காட்சி ஒன்றில் அபிஷேக் பச்சன் ஆடிக் கொண்டிருந்தார். என்னுடனிருந்த சக நண்பர்கள் அதை “ஆ”வெனப் பார்த்துக் கொண்டிருந்தனர். நிகழ்ச்சி முடிந்ததும் ஒருவர் சொன்னார். “அபிஷேக் பச்சன் இதுவரைக்கும் எந்த படத்துலையாச்சும் ஆடிருக்காரா... அவரையும் ஆட வைக்க மணிரத்னமாலத்தான் முடியும். மணிரத்னம் க்ரேட்யா” உண்மையா? (தமிழனை இவங்க புகழ்றதுலேயும் குறைச்சலிருக்காது. அவன் கிட்ட வேலையைப் பிழியறதுலேயும் குறையிருக்காது)

*************************************************************************************************************

யோகி டைம்ஸ்

போன வாரம் நாங்க உக்காந்து படம் பார்த்துட்டு இருந்தப்போ டேபிள்ல என் கை லேசா இடிச்சிடுச்சு. “ஆ”ன்னு ஒரு சவுண்ட் குடுத்ததும் யோகி என் கையில தடவிக் குடுத்துட்டு டேபிளை லேசா அடிச்சிட்டு சொன்னார். “இது தான் கல்யாணமாகி 2 வருஷத்துல இருக்குற எஃபெக்ட். 20 வருஷமாச்சுன்னா, இடிச்ச டேபிளைத் தடவிக் குடுத்து, என்னால தான் முடில இதாச்சும் தைரியமா உன்னை அடிக்குதேன்னு சந்தோஷப்பட்டுட்டு, உன்னை பார்த்து உக்கார மாட்டியான்னு திட்டிட்டுப் போயிடுவேன்”. ஙே! (20 வருஷத்துக்கப்புறம் நான் எப்படி இருப்பேன்னு தெரியாமப் பேசுறார். அப்பிராணி.)

Wednesday, May 19, 2010

House Full - Hindi Film Review


பொழுது போக்கு படங்களுக்கு பாலிவுட்டில் பெயர் போனவர் அக்‌ஷய் குமார். அவரின் கேனைத் தனமான நடிப்பும், குரலும் அவ்வளவு பிரபலம். இந்த கோடையில் அக்‌ஷய் குமார் அளித்திருக்கும் விருந்து HOUSE FULL.

அக்‌ஷய் குமார், தீபிகா படுகோன், ரிதேஷ் தேஷ்முக், லாரா தத்தா, அர்ஜூன் ராம்பால் என நல்ல கூட்டணி. சஜித் கான் இயக்கம். ரொம்ப நாளாய் எந்த நல்ல படமும் வராமல் எதிர்பார்த்துக் காத்திருந்து போன படம். ஆனால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகவில்லை.


ஆருஷ் (அக்‌ஷய் குமார்) துரதிருஷ்டங்கள் நிறைந்த இளைஞர். அவருக்கு அதிர்ஷ்டம் வர வேண்டுமெனில் அவர் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். முதலில் அவர் ஒரு பெண்ணைக் காதலிக்க அந்தப் பெண்ணின் அண்ணனிடம் அடி வாங்கி “லூஸர்” ஆகிறார். அடுத்ததாக நண்பன் பாபை (ரிதேஷ்) தேடி அவர் வீட்டிற்கு வருகிறார். அவரின் மனைவி ஹேத்தல் (லாரா தத்தா). இருவரும் எந்நேரமும் ரொமான்ஸில் இருக்கும் காதல் தம்பதி. இவர்களிருவரும் சேர்ந்து ஆருஷிற்கு தங்கள் முதலாளியின் மகள் ஜியா கானைத் திருமணம் செய்து வைக்கின்றன்ர். திருமணம் முடிந்து இடாலியில் தேனிலவுக்கு செல்லும் ஆருஷிற்குக் காத்திருக்கிறது அதிர்ச்சி. ஜியா கானிற்கு வேறொருவருடன் காதல் இருப்பதாகவும், அதற்கு அவள் அப்பாவின் எதிர்ப்பை சமாளித்து, அவரின் சொத்தைப் பெறவே ஆருஷைத் திருமணம் செய்து கொண்டதாகவும் கூற விரக்தியில் கடலில் விழுகிறான் ஆருஷ்.


ஆருஷைக் காக்கும் அழகு தேவதை சேண்டி (தீபிகா படுகோன்). உடனே அவள் மீது காதலில் விழுகிறான் ஆருஷ். இவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலின் உரிமையாளர் ஆகுரி பாஸ்தா. “மம்ம மீயா” என்ற வசனத்தால் சில சமயம் சிரிப்பையும், பல சமயம் வெறுப்பையும் வர வைக்கிறார். அவன் சேண்டியிடம் ஆருஷின் மனைவி இறந்து விட்டதாகக் கூற ஆருஷின் மீது பரிதாபமும் தொடர்ந்து காரணமே இல்லாத காதலும் வருகிறது சேண்டிக்கு. இதனிடையே ஜியாகான்-ஆருஷின் திருமண உடைப்பை அறிந்து அங்கு வருகிறது பாப்-ஹேத்தல் ஜோடி.

இந்நால்வர் கூட்டணியும் சேர்ந்திருக்கும் நேரம் ஆரம்பமாகிறது அனைத்துக் குழப்பங்களும். ஹேத்தலின் காதலினால் கோபத்திலிருக்கும் அவள் அப்பாவை சமாதனப்படுத்த ஹேத்தல் தனக்குக் குழந்தை இருப்பதாகப் பொய் சொல்ல, உடனே கிளம்பி லண்டன் வருகிறார். இதனிடையே சேண்டியின் காதலான ஆருஷைப் பார்க்கவும், அலுவ வேலையின் காரணமாகவும் லண்டன் வருகிறார் இந்திய ராணுவ தலைமைப் பொறுப்பிலிருக்கும் சேண்டியின் அண்ணா. ஹேத்தல் அப்பாவுடன் இணைவதற்காக தான் வசதியாக இருப்பதாக சொல்லவும், சேண்டி தன் காதலன் மிகப் பெரிய பணக்காரன் எனத் தன் அண்ணனிடம் காட்டவும் ஒரு பங்களாவை வாடகைக்கு எடுக்கின்றனர். அங்கு ஏற்படும் குழப்பத்தில் ஜோடி மாறி ஹேத்தல்-ஆருஷ் கணவன் மனைவி எனவும், பாப் சமையல்காரனாகவும், சேண்டி குழந்தையைப் பார்க்கும் ஆயாவாகவும், குழந்தை ஒரு ஆப்பிரிக்கக் குழந்தையாகவும் என ஏகப்பட்ட குழப்பங்கள்.


சேண்டியின் அண்ணா வருகையின் போது மறுபடியும் ஜோடி மாறி சொதப்புகிறது. இதைத் தொடர்ந்து படம் முழுக்க சொதப்பல். நிஜமாகவே 150 ரூபாய் டிக்கெட்டுக்கு செலவளித்திருக்க வேண்டாம். உட்கார முடியவில்லை திரையரங்கில். “முடிங்கடா போதும்”ன்னு சொல்ல வெச்சுட்டாங்க.

ஆகுரி பாஸ்தாவின் ஹிந்தி, லாராதத்தாவின் அலட்டல் வாயசைக்கும் கோணல்கள், ரிதேஷின் ஓவர் ஆக்டிங் என ஒவ்வொன்றும் நம்மைத் “தியேட்டரை விட்டு எழுந்து போங்கள்” என சொல்லும்படி இருந்தது. படத்தின் ஒரே ஆறுதல் தீபிகா. வசீகரப் புன்னகையாலும், முகம் சுளிக்க வைக்காத நடிப்பாலும், நடன அசைவுகளாலும் கொஞ்சம் நம்மைக் காப்பாற்றினார். லாரா தத்தா டான்ஸுன்னா என்னன்னு கேக்கும் போல.


நம்மூரில் 10 வருடங்களுக்கு முன்பு கமலஹாசன் - பிரபுதேவா நடித்து வந்த “காதலா காதலா” படத்தின் ஹிந்தி ரீமேக். பாலிவுட் என்பதால் அதற்கான ஆடம்பரங்களுக்கும், பிரம்மாண்டங்களுக்கும் கூடவே குழப்பங்களுக்கும் குறைவில்லை. படம் முழுக்க வெளிநாட்டில் எடுக்கப்பட்டுள்ளது. கனடா, லண்டன், இடாலி என ஹெவி பட்ஜெட் படம். உடையைப் பற்றி சொல்லவே வேண்டாம். போட்டிருந்தால் தானே சொல்ல. நிச்சயம் பசங்களின் கண்களுக்கு விருந்தாக அமையும்.


ஷங்கர் மஹாதேவனின் இசையிலும், குரலிலும் பாடல்கள் ஓரளவு திருப்தி. பாடலில் வரும் இடங்களும் வாவ் ரகம். அசத்தலான ஒளிப்பதிவு. ஃப்ரீ டி.வி.டி கிடைத்தாலும் பார்க்க வேண்டிய அவசியமில்லை. கண்டிப்பாக தலைவலிக்கு உத்தரவாதம் தரும் படம்.

இவ்வளவு செலவு செய்து பல விஷயங்களுக்கு மெனக்கெட்டிருப்பவர்கள் கொஞ்சம் கதைக்கும் மெனக்கெட்டிருக்கலாம். தேவையில்லாத குழப்பங்களைத் தவிர்த்து அப்படியே தமிழ்க் கதையை ரீமேக்கியிருந்தால் பெட்டராக வந்திருக்கும்.

ஹவுஸ் ஃபுல் - ஒரு காட்சியில் கூட இல்லை எனத் திரையரங்கு உரிமையாளர்கள் வருத்தம்.

Friday, May 14, 2010

என் உள்ளம் கவர் கள்வனுக்கு...

கல்லூரிப் படிப்பு முடிந்து வேலை கிடைத்து விட்டது. என் முதல் வேலை, அதுவும் கல்லூரியிலேயே வந்து செலக்ட் செய்து கொண்டு போன வேலை. நிறைய உற்சாகத்துடனும் கொஞ்சம் பதற்றத்துடனும் ஆரம்பித்தேன். கோவை எனும் அழகிய சொர்க்க நகரத்தில் வேலை பார்க்க யாருக்குத் தான் பிடிக்காது, அதுவும் தேவையை விட அதிகமாய் சம்பளமும் கொடுத்து. வேலைக்கு சேர்ந்த முதல் மாதத்தில் என் பாஸ் என்னிடம் சொன்னார் “விக்னேஷ்வரி, ஹெட் ஆஃபிஸ்ல இருந்து இங்கே ஒருத்தர் ப்ராஜெக்ட்டுக்காக வர்றார். அவருக்குத் தமிழ் தெரியது. நீதான் அஸிஸ்ட் பண்ணனும். ஆஃபிஸ் வேலை முடிஞ்சதும் சாயங்கால நேரங்களில் உனக்கு ட்ரெய்னிங் இருக்கும். குட் லக் ஃபார் த ஆன் ஜாப் ட்ரெய்னிங்”
“சரி சார் அவர் பேர்”
“யோகேஷ்”
“லோகேஷ்?”
“இல்ல, யோகேஷ். யோகேஷ் கண்ணா”
பெயர் மறந்து விடாமலிருக்க கையிலிருந்த நோட்டின் ஒரு மூலையில் எழுதிக் கொண்டேன்

ஹெட் ஆஃபிஸிலிருந்து வந்திருக்கும் ட்ரெய்னரைப் பார்க்கப் போகிறேன். எப்படிப் பேசுவார். அவர் எம்.டெக்காம். கொஞ்சம் ஹை ப்ரோஃபைல். பழகுவது கடினம் தான். எப்படிப் பேசப் போகிறேன். என் ஆங்கிலம் அவ்வளவு தேறியதா.. எப்படி என் கம்பெனியில் என்னை அவருக்கு அசிஸ்டெண்ட்டாகவும், ட்ரான்ஸ்லேட்டராகவும் நியமித்தார்கள். வந்தவர் ஏன் என் ட்ரெய்னிங் விட்டு விட்டு அவர் வேலைக்கு உதவிக்கழைக்கிறார். இப்படியே யோசித்துக் கொண்டிருந்த போது பெருந்துறை வந்து விட்டது.

ஆஃபீஸுக்குள் நுழைந்து “லோகேஷ்.. ஸாரி யோகேஷ் ஃப்ரம் நியூடெல்லி?” என்றேன்.
“ஓ, யூ ஆர் ஃப்ரம் ஹிஸ் கம்பெனி... வெல்கம்” என மரியாதையுடன் அழைத்துப் பெட்டியை கெஸ்ட் ஹவுஸில் வைக்கும் படி அங்கிருந்தவரை சொல்லிவிட்டு என்னைக் கம்பெனிக்குள் அழைத்து சென்றார் மேனேஜர்.
“ஹீ இஸ் யோகேஷ்” சொல்லிவிட்டு மேனேஜர் சென்று விட்டார்.
“ஹாய் யோகேஷ். திஸ் இஸ் விக்னேஷ்வரி” கையை நீட்டினேன். “ஹாய்” என ஒரு அசட்டைப் பார்வையுடன் கை குலுக்கி விட்டு வேலையைப் பார்க்கப் போய் விட்டார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஐ.டி. டீம் முழுக்க உட்கார்ந்து கொண்டு சர்வர், இன்ஸ்டலேஷன், டேடாபேஸ், ப்ரொக்ராமிங் என என்னென்னவோ பேசிக் கொண்டிருக்க, நான் “ஙே” என மிரட்சியுடன் முழித்துக் கொண்டிருந்தேன்.

மாலை இருவரும் ஒன்றாக கெஸ்ட் ஹவுஸ் திரும்பினோம். இருவருக்கும் எதிரெதிர் ஃப்ளாட்டுகள். ஒவ்வொரு ஃப்ளாட்டும் 2BHK. மணி 8. நன்றாகவே இருட்டியிருந்தது. என் ஃப்ளாட்டைத் திறக்காமல் அவருடன் போய் நின்று கொண்டு, “வில் யூ ப்ளீஸ் கம் வித் மீ” என்றேன்.
ஒரு வித்தியாசப் பார்வையோடு “வாட்” என்றார்.
“ஐ ஆம் ஸ்கேர்ட் ஆஃப் டார்க்னெஸ். வில் யூ ப்ளீஸ்....”
“வொய்?”
“ப்ளீஸ்”
“வாட் இஸ் யுவர் ப்ராப்ளம். ஃபார் வாட் டு யூ கால் மீ?” என்றார் இன்னும் கடுமையாக.
கொஞ்சம் எரிச்சலுடனும் நிறைய பயத்துடனும் வழக்கம் போல் அதே அசட்டு சிரிப்புடனும் “ச்சும்மா” என்றேன்.
நொடியில் மாறிய அவர் முகம் கேவலமாய் “வாட்....?”டை உதிர்த்தன இதழ்கள்.
மிகுந்த கோபத்தில் “நத்திங்” என் என் ஃப்ளாட்டிற்குள் நடுங்கிக் கொண்டே நுழைந்து லைட்டைத் தேடிப் போட்டு சமாளித்து விட்டேன்.

“என்ன ஆளு இவர். ஹாய் சொல்லிக் கை குடுத்தா தலையெழுத்தேன்னு கை குடுக்குறார். ஆஃபிஸ்ல முழு நேரமும் ஏதோ வேலை செய்து கொண்டே இருந்தார். நம்மை ஒரு முறை கூட மதிச்சுப் பார்த்ததா தெரியல. வந்து கதவைத் திறக்கத் துணைக்கழைத்தால் கத்துகிறார். சே, சரி ஆள் கிட்ட மாட்டிக்கிட்டோம். 15 நாள் எப்படி போகப் போகுது” எனத் தலையில் கை வைத்து உட்கார்ந்திருந்த போது மொபைலில் அழைத்தார்.
“ஃபினிஷ் யுவர் டின்னர் அண்ட் கம் டு த காமன் ட்ராயிங் ஹால் ஃபார் ட்ரெய்னிங் அட் 9” என சொல்லி என் பதிலை எதிர்பார்க்காது ஃபோனை வைத்து விட்டார். கிர்ரென்றது.

அன்றிலிருந்து தினமும் இரவு 9 மணி முதல் 11 மணி வரை. அதே ட்ராயிங் ஹால். அதே ட்ரெய்னிங். தூக்கம் சொக்கும் எனக்கு. அவரோ ரொம்ப சீரியஸான ப்ரசெண்டேஷன்களை விளக்கிக் கொண்டிருப்பார். வெளியில் எங்கள் ஹாலைக் கடந்து வாக்கிங் போபவர்கள் ஒரு பாவப் பார்வையுடன் என்னைப் பார்த்து செல்வார்கள். மறுநாள் காலை ஆஃபிஸிலும் ஒரு நிமிட இடைவெளியில்லாது வேலை செய்வார். எனக்கும் டன்னளவு வேலை கொடுப்பார். அவருடன் ஃபாக்டரி முழுக்க சுற்றினேன். இவருக்கும், லேபர்மென்னுக்கும் ட்ரான்ஸ்லேட்டராய் இருந்தேன். இரண்டு நாட்களில் அவர் உழைப்பு பார்த்த பின் ஒரு மரியாதை வந்தது. அடுத்த வாரத்திலிருந்து நானும் சீரியஸாய் வேலை செய்ய ஆரம்பித்தேன். அவருக்கும் மகிழ்ச்சியாய் இருந்தது. பல இரவுகள் 2,3 மணி வரை ஃபாக்டரியில் அவர், ஃபாக்டரி மேனேஜர், யூஸர்ஸ், நான் என வேலை செய்திருக்கிறோம். இதனால் எங்களை மனசுக்குள்ளேயே திட்டிக் கொண்ட யூஸர்ஸ் அதிகம். இருவரும் சேர்ந்து பகலிரவு பாராமல் வேலையை முடித்தோம்.

அவர் கிளம்பினார். டெல்லி சென்று சேர்ந்தவரை அழைத்தேன். “ரீச்ட் சேஃப்லி?” என்றேன். “ம்....” என்றார். அவருக்கு விமானப் பயணம் வாரத்திற்கொரு முறை. எனக்கோ இவ்வளவு தூரம் சென்றாரே, பத்திரமாக சென்றாரா என்ற விசாரிப்பு. அவ்வளவு தான். மறுபடியும் ப்ராஜெக்ட், வேலை, என் டெல்லி பயணம், மறுபடியும் ஹெட் ஆஃபிஸில் இவரிடமிருந்து ட்ரெய்னிங் எனத் தொடர்ந்தது. யாரையும் தெரியாத டெல்லியில் எங்கோ ஒரு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்தேன். அலுவலகத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் ஹோட்டல். ஹிந்தியில் “மே ஹிந்தி நஹின் மாலும் ஹை” என்ற தப்பான ஒரு வாக்கியம் தவிர வேறெதுவும் தெரியாது. அவர் தான் தினமும் பிக்கப், ட்ராப். வாரயிறுதிகளில் டெல்லியைக் காண்பித்தார்.

ஒரு வருடத்தில் டெல்லிக்கே ட்ரான்ஸ்ஃபரும் ஆனது. இப்போது டெல்லி போக பயமில்லை. அவரிருக்கும் தைரியம். நல்ல நண்பராகிப் போனார். அதன் பின் ஒரு நாள் சொன்னார் அவர் புரிந்து கொண்ட முதல் நாள் மாலையின் “ச்சும்மா”வை. ஹிந்தியில் “ச்சும்மா” என்றால் என்ன எனத் தெரிந்து கொள்ளுங்கள். எங்கும் சொல்லி அடி வாங்கி வைக்காதீர்கள்.

எல்லாம் நன்றாகப் போய்க் கொண்டிருக்கும் வேளையில் அவர் கெட்ட நேரம் இருவருக்கும் காதல் பற்றிக் கொண்டது. சரியா தவறா, ஒத்து வருமா வராதா, வீட்டை எப்படி சமாளிக்க, சம்மதிக்க வைக்க என்றெண்ணியே காதல் நாட்கள் கழிந்தன. எல்லாப் பிரச்சனைகளையும் ஒரே ஆளாய் எதிர்த்து நின்று எல்லாரின் சம்மதத்தையும் பெற்று கோலாகலமாக என்னைக் கைப்பிடித்தார்.

அவரின் உழைப்பு, உண்மை, அன்பு, காதல், பொறுப்பு, அக்கறை எல்லாவற்றிலும் சுகமாகவே கழிகின்றன நாட்கள். இதே சுகம் வாழ்நாள் முழுக்க வேண்டும். Happy Birthday Yogi. I love you.

Thursday, May 13, 2010

சிமிழ் திறந்து சீர் பெருக...

“இவன் என் நண்பன்” எனச் சொல்லுவதில் ஒரு கர்வமுண்டு தானே. அந்தக் கர்வம் உண்டு இவரிடம் எனக்கு. நான் மிகவும் மதிக்கும் நபர்களில் / நண்பர்களில் இவர் முக்கியமானவர்.

தனியே நடக்க ஆசைப்பட்டு, விழுந்து அழும் குழந்தை தேடும் தாயின் கரம், இவரது நட்பெனக்கு. நான் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் என் நண்பர். இவருடனான அரிதான தொலைபேசி உரையாடல்களும் ஏதாவதொரு கோபமின்றி, ஒரு எரிச்சலின்றி முடிந்ததில்லை. ஏனெனில் அவ்வளவு வித்தியாசக் கருத்துடையவர்கள் நாங்கள்.

இவரின் சாதாரண நடையிலான எழுத்து, அவரின் எழுத்துகளுடன் ஒரு அன்யோன்யத்தை ஏற்படுத்தியது. பலருக்கும் எழுத இவர் கொடுத்த ஊக்கம் கண்டு பொறாமையில்லாத இவர் குணத்தை வியந்திருக்கிறேன். ஒரு ஆச்சரியத்துடனும், மரியாதையுடனும் இவர் எழுத்துகளைத் தொடர்ந்ததாலேயே இவருக்கு மெயிலனுப்பவோ, சாட்டிப் பேசவோ ஒரு போதும் தோன்றவில்லை.

முதல் முறை இவரை சந்தித்த போது ரொம்ப இயல்பாகவே பேசினார். “பிரபலம்” என்ற பிம்பத்தை உடைத்தார். தொடர்ந்து என் வேலை, அதிலுள்ள விஷயங்கள் பற்றிப் பேசினார். எளிமையான, இயல்பான பேச்சிற்கு சொந்தக்காரர். இசை ரசிகன். நல்ல கலைஞன். ஆணவம், போலித்தனம், பொறாமை இல்லாதவர்.

முதல் சந்திப்பிற்குப் பின் பேச இருவருக்கும் நேரம் அமையவில்லை. ஒரு முறை ஒரு உதவிக்காகப் பேசினேன். எதிர்பார்த்ததை விட அதிகம் உதவினார், எந்த எதிர்பார்ப்புமின்றி. மகிழ்ச்சியாய் இருந்தது. பல நல்ல புத்தகங்களை வாங்கித் தந்தார். சிந்தை தெளிவுற உதவினார். அதன் பிறகு மறுபடியும் வேலைகள், வீடு... இருவரும் பேச முடியவில்லை.

அவரின் முதல் உதவிக்குப் பின், எப்போது என்னவொரு கஷ்டம் / குழப்பம் வந்தாலும் அழைப்பது அவரைத் தான். தெளிவாக “நீ செய்வது தவறு” என சொல்ல எப்போதும் தயங்காதவர். பெரும்பாலும் பிஸியாக இருந்தாலும் தேவையான நேரங்களில் தோள் கொடுக்கத் தவறியதில்லை. வேண்டும் நேரங்களில் தவறாமல் நட்பு அங்கிருக்கும் என அறிந்தேன் இவர் மூலம்.

கொஞ்சம் முற்போக்கு சிந்தனையாளர். ரொம்பவே கோபப்படுபவர் (நான் தான் கோபப்படுத்துறேனான்னு தெரில). கோபத்தை வார்த்தையிலும் வீசத் தெரிந்தவர். கொஞ்ச நேரத்திலேயே அதை உணர்ந்து மன்னிப்பும் கேட்பார். குடும்பத்தை நேசிப்பவர். மனைவியை சுவாசிப்பவர். நாங்களிருவருமே கோபத்தில் குறைந்தவர்களல்லர். பேசாமலே உர்ரென்று இருந்துவிட்டு அதற்கான காரணம் மறந்து மறுபடியும் பேசி சண்டையிட்டுக் கொள்வோம்.

நண்பனெனில் குறைகளும் உண்டு தானே. அனைவருக்கும் நல்லவர். ரொம்ப நல்லவர். எல்லாரையும் நம்புபவர். யாருக்கும் எந்த உதவியும் செய்யக் கூடியவர். “இப்படியெல்லாம் இருந்தா உங்களை ஏமாளின்னு சொல்லுவாங்க. வேண்டாம்ப்பா” என்றால் ஒரு சிரிப்பைப் பதிலாய் உதிர்ப்பவர்.

கொஞ்சம் டென்ஷனைக் குறைச்சுக்கோங்க நண்பா. ஆஃபிஸ் வேலைகள் அதிகம் தான். ஆனா வாழ்க்கையை விட்டுடாதீங்க. கொஞ்சமாவது வாழுங்கள். இயந்திரம் போல் ஓடாதீங்க. இன்னிக்கு ஜாலியா அம்மணியையும், குட்டீஸையும் கூட்டிட்டு ஜமாய்ங்க. பிறந்த நாள் வாழ்த்துகள். இன்று போல் என்றும் என் நண்பனாயிருக்க வேண்டுகோளும்.

(கிருஷ்ண குமார் என்ற பரிசல்காரனுக்கு.)

Wednesday, May 12, 2010

நினைவுகளின் ஈரம்

கிட்டத்தட்ட 8 வருடங்களாகத் தேடிய குரலை, முகத்தைத் திடீரென ஒரு நாள் திருவிழாக் கூட்டத்தில் பார்த்தால் எப்படி இருக்கும்... அப்படி இருந்தது எனக்கு நேற்று.

ஜெயா. என் பள்ளித் தோழி. 11,12 ஆம் வகுப்புக் குறும்புகளினூடே எப்போதும் படிப்பை மட்டுமே எங்களுக்கு நினைவூட்டும் எங்கள் நால்வர் கூட்டத்தில் ஒருத்தி. என் அம்மாவின் பெயர் கொண்டவளென்பதால் எனக்குக் கொஞ்சம் அதிகமாகவே பிடித்தவள். தினமும் டியூஷன் செல்ல என்னை வீட்டிற்கு வந்து அழைத்துச் சென்றவள். மிகவும் அமைதியான, கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்ட அழகுப் பிசாசு.

11 ஆம் வகுப்பில் பாசானால் போதும் எனப் படித்துக் கொண்டிருந்தோம். 12 ஆம் வகுப்பில் அப்படி முடியவில்லை. கெமிஸ்ட்ரி எனக்குப் பிடித்த சப்ஜெக்ட் என்றாலும், எப்போதும் திட்டிக் கொண்டே பாடம் நடத்தும் கெமிஸ்ட்ரி மேடத்தைப் பிடிக்காததால் டியூஷன் செல்ல வேண்டி வந்தது. ஜெயாவுக்கு கெமிஸ்ட்ரி என்றாலே உதறும் அப்போது. அதனால் இருவரும் ஒன்றாய் போனோம். சயின்ஸ் குரூப் என்றாலே எல்லாப் பாடத்திற்கும் டியூஷன் போகும் வழக்கம் இருந்த நேரமது. காலை 5.30க்கு ஆரம்பிக்கும் டியூஷன்கள் பள்ளி நேரம் வரை தொடரும். பள்ளியின் மாலை நேர சிறப்பு வகுப்புகளுக்குப் பின் இரவு 9 மணி வரை ஏதாவது டியூஷனில் இருப்போம்.

தேர்வு நேரங்களில் இனி டியூஷன்ஸ் வேண்டாம் என முடிவு செய்து கடைசி 3 மாதங்கள் நாங்கள் நால்வரும் ஒன்றாய் சேர்ந்து படிக்க ஆரம்பித்தோம். எங்களில் எப்போதும் டென்ஷனாய் இருப்பாள் விஜி. சரியான படிப்ஸ். படிப்போடு வேறு கதைகளையும் அரைத்துக் கொண்டிருப்போம் கோதையும் நானும். விஜியின் டென்ஷனை சாந்தப்படுத்தி, கோதையையும் என்னையும் கெஞ்சி அழைத்துப் படிக்க வைப்பாள் ஜெயா. ரொம்ப நல்லவள். ஒவ்வொரு நாள் ஒவ்வொருத்தர் வீட்டில் படிப்போம். அம்மாக்களும் பிள்ளைகள் படிப்பதால் என்னென்னவோ சமைத்து ஸ்பெஷல் கவனிப்பு நடத்துவார்கள்.

ஜெயாவிற்கு அப்போது சைக்கிள் ஓட்டக் கூடப் பயம். நான் தான் சொல்லிக் கொடுத்து பள்ளிக்கு என்னுடனே அழைத்து செல்வேன். எதிரில் பஸ் வந்தால் உடனே சைக்கிளிலிருந்து இறங்கி விடுவாள். நான் அவளைக் கடந்து போய் பின் திரும்பி வந்து அழைத்து செல்வேன். ரோட்டில் பசங்கள் இருந்தால் பார்க்கக் கூடாதென்பாள். யாராவது கேலி செய்தால் “கண்டுக்காதே விக்கி. விட்டுடு” என நடுங்குவாள். அவளின் இப்படிப்பட்ட குணங்களால் என் அம்மாவிடம் “நல்ல பொண்ணு, அமைதியான பொண்ணு” என சர்டிஃபிகேட் வாங்கினாள். அம்மா எங்களிடம் தோழி போலிருந்ததால் அவளுக்கும் அம்மாவை மிகவும் பிடிக்கும். எனக்கு அம்மாவையும், அவளையும் பார்த்தால் சிரிப்பாய் வரும். அவ்ளோ பாசம் ரெண்டு பேரும்.

ஜெயாவின் அம்மா ரொம்ப நல்லவர். எங்களைக் கவனித்த அம்மாக்களில் முதலிடம் இவருக்குத் தான். பெரும்பாலான வார இறுதி நாட்களில் நாங்கள் படித்தது அவள் வீட்டில் தான். காரணம் அம்மாவின் சமையல். அவரே எனக்கு ஃபோன் செய்து அழைப்பார். “விக்கி இன்னிக்கு இங்கே வந்து படிங்கப்பா. அம்மா உங்களுக்காக சமைச்சு வைக்கிறேன்”. “சரிம்மா”வைத் தவிர வேறு வார்த்தையில்லை.

கெமிஸ்ட்ரி வகுப்பில் மேடம் கேள்வி கேட்டால் ஜெயாவுக்கு நான் சொல்லித் தருவேன். ஃபிசிக்ஸ் புயல் அவள். “ஜெயா பெண்டுலம்ல 10 ரீடிங்ஸ் எடுக்கணுமாம். கொஞ்சம் எடுத்துத் தாயேன்” இப்படிப் பெரும்பாலான ப்ராக்டிகல் வகுப்புகள் அவள் உதவியுடனே கடந்தன.

பள்ளி நாட்களுக்குப் பின் அனைவரும் அறிவியல் பட்டப் படிப்பிற்குச் செல்ல நான் மட்டும் வேறு திசையில் பயணமானேன். எல்லாரும் ஹாஸ்டல் சிறையில் அடைபட்டதால் தொடர்ந்து காண்டாக்டில் இருக்க முடியவில்லை. கல்லூரி இரண்டாம் வருடத்தில் கோதையின் திருமணம் ஏற்பாடானது. அதற்கும் ஜெயாவால் வர முடியவில்லை. ஜெயாவின் அம்மாவை மட்டுமே பார்க்க முடிந்தது. “வீட்டுக்கு வாப்பா” என்றார்கள். “கண்டிப்பாம்மா” என்றேன். ஆனால் அதை முற்றிலும் பொய்யாக்கியது கல்லூரி நாட்கள். சில வருடங்களுக்குப் பின் அவளின் வீட்டு எண்ணிற்கு முயற்சித்தேன். மாற்றியிருந்தார்கள்.

என் திருமணம் நிச்சயமாயிருந்த பொழுது அவளைத் தொடர்பு கொள்ள மிகவும் முயற்சித்தேன். முடியவில்லை. அவள் வீட்டிற்கு செல்லும் வழியையும் மறந்திருந்தேன். மிகுந்த ஏமாற்றமாய் இருந்தது. பல மாதங்களாய் கோதையிடம் சொல்லி அவள் எண்ணை அறிந்து சொல்லும்படி கேட்டேன். அவளும் பலரைக் கேட்டறிந்து நேற்று கொடுத்தாள். 8 வருடங்களுக்குப் பிறகு பேசப் போகிறோம். கொஞ்சம் கலாய்க்கலாம் என நினைத்து “ஹலோ ஜெயாங்களா?” என்றேன். “ஹேய், விக்கி......” என்றாள். மிகுந்த ஆச்சரியமாயிருந்தது. அவள் குரலைக் கேட்டு 7,8 வருடங்களிருக்கும். என் அழைப்பை எதிர்பார்த்திருக்கவில்லையெனினும் குரல் கேட்ட அடுத்த நொடியே அடையாளம் கண்டு கொள்ள முடிந்த அவளின் நட்பை நினைத்துக் கலங்கிவிட்டேன். வார்த்தைகள் வரவில்லை. அப்புறம் பேச ஆரம்பித்தோம். பேசிக் கொண்டே..... இருந்தோம். நேற்று வெளியில் செல்ல வேண்டிய வேலை இருந்ததால் வைக்க மனமின்றி 1 மணி நேரத்திற்குப் பிறகு ரிசீவரை வைத்தேன், இன்று மறுபடியும் அழைப்பதாய் உறுதியளித்து.

புகைப்படங்களை மெயிலில் பரிமாறினோம். ஒவ்வொருவருக்கும் காலம் கொடுத்த மாற்றங்களை எண்ணி வியந்தோம். அவள் இப்போது ஒரு உயர்நிலைப் பள்ளி ஆசிரியை. வகுப்பில் நடுங்கிக் கொண்டிருந்தவள் இன்று மாணவர்களை மிரட்டிக் கொண்டிருக்கிறாள். தமிழ்ப் பிரியையான நான் பஞ்சாபி மருமகள். கணிதப் புலியான கோதை கரண்டியுடன் கணவரையும், பையனையும் மிரட்டிக் கொண்டுள்ளாள். படிப்ஸ் விஜி வேலை பார்த்துக் கொண்டே இன்னும் ஏதேதோ படித்துக் கொண்டே இருக்கிறாள். அனைவருக்கும் எதிர்பார்க்காத வாழ்க்கை. ஆனால், மகிழ்ச்சியாய்.

அம்மாவுக்கு ஃபோன் செய்து மகிழ்ச்சியைப் பரிமாறினேன். யோகியிடம் அவர் காது வலிக்க எங்கள் கதைகளை சொல்லிக் கொண்டிருந்தேன். கொஞ்ச நேரம் கழித்து சொன்னார், “அம்மா ஸ்கூல் டைம்ல உன்னைப் படிக்க சொல்லாம நல்லா ஃப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து ஏன் சுத்த விட்டாங்க. இப்போ பாரு அதுனால ஃபோன் பில் கூடுது. என் காதும் வலிக்குது”. இதுக்கு மேலேயும் நான் சமைச்சிருப்பேன்? நேற்றிரவு பீட்ஸா ஹட்டில் ட்ரீட், தோழி திரும்பக் கிடைத்ததற்காக.

Monday, May 10, 2010

நம் தாய்த்திரு நாடு இந்தியா

அஜ்மல் கசாப் - கடந்த 10 நாட்களாக செய்தித் தாள்களின் தலைப்புச் செய்தியில் இடம் பெற்றிருக்கும் பெயர்.

இவர் யார், இவர் செய்த குற்றமென்ன என்பது எந்தவொரு இந்தியருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நவம்பர் 26, 2008 இல் இந்தியாவையே உலுக்கிப் போட்ட தீவிரவாத சதியில் மும்பையில் கிட்டத்தட்ட 100 பேர் உயிரிழந்தனர். 200 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். அந்த நாள் மும்பையின்/இந்தியாவின் வரலாற்றில் பெரும் சோக முத்திரையைக் குத்திச் சென்றுள்ளது.

போன வாரம் இக்குற்றவாளியின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் படி மனு தாக்கல் செய்துள்ளார் அவர் தரப்பு வக்கீல். இவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கக் கூடாதென்றும், அவர் வயதைக் கருத்தில் கொண்டும், மனித நேயத்துடனும் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியமைக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அஜ்மல் கசாப் தனது முதல் நீதிமன்ற ஆஜரில் சொன்னதை எத்தனை பேர் அறிவரோ. அவர் சொன்னது: “நான் நடந்தவற்றிற்கு மிக வருந்துகிறேன். என்னால் இன்னும் பலரைக் கொன்றிருக்க முடியும். ஆனால் அதற்குள் போலீஸ் வந்து எங்களுக்குத் தொந்தரவு செய்து விட்டனர். இன்னும் என் மனதுள் இருக்கும் நீங்கா வருத்தம் என்னால் இன்னும் பல இந்தியர்களைக் கொல்ல முடியாமல் போனது தான்”. இதற்கு மேலும் ஒரு இந்திய வக்கீல் பணத்திற்காக அவரைக் காக்கத் துடிக்கிறார் என்றால் தலையில் அடித்துக் கொள்ள வேண்டியுள்ளது.

இப்பிரச்சனையைப் பற்றி நண்பரொருவரிடம் சேட்டிக் கொண்டிருக்கையில் சொன்னார், “சண்டியர்ல கமலஹாசன் மட்டும் தூக்குத் தண்டனை கூடாதுன்னு சொன்னா ரசிச்சுப் பார்க்குறீங்க. நிஜத்துல ஒரு உயிரின் மதிப்பு உங்களுக்குத் தெரியவில்லையே!” இது அடுத்த அவலம். இந்தியப் படங்கள் பார்த்து நம்ம மக்கள் ரொம்பக் கெட்டுப் போயிருக்காங்க. இப்படிக் கமலஹாசன் சொன்ன பேச்செல்லாம் கேக்கணும்னா அடுத்ததா ஒரு லேப்டாப்பை எடுத்துக்கிட்டு ஒரு மொட்டை மாடில உக்காந்து தீவிரவாதிகளை அழிக்க சதி பண்ணனுமா.. என்ன இது சின்னப் புள்ளத் தனமா...

நிச்சயம் ஒருவர் உயிரைக் கொல்லும் உரிமை மற்றவருக்கில்லை என்பதை நான் ஏற்கிறேன். அதே நேரத்தில் இந்திய நாட்டில் வாழும் நம்மைக் காக்கும் உரிமை நம் அரசுக்கு உண்டென்பதால் தூக்கு என்பதே சரியான தீர்ப்பாக அமையும். படம் எடுத்து உங்களைக் கொல்ல வரும் பாம்பிற்கு முன் மண்டியிட்டு “வேண்டாம் பாம்பே. என்னை விட்டுடு. நான் உன்னை அடிச்சா உனக்கு வலிக்கும். அதுனால நீயும் இங்கேயிருந்து போயிடு” என சமரசம் பேசிக் கொண்டிருப்பீர்களா? இல்லை தானே. அதே போல இவரும் இல்லை இதுவும் ஒரு விஷக் கிருமி. இதை நம் நாட்டில் இத்தனை நாட்கள் வைத்திருந்ததே பாவத்திற்குரிய செயல். சீக்கிரமே தூக்கிலிடுவதே முறை.

இவரை சிறையில் வைக்க இந்திய அரசு நாளொன்றுக்கு லட்சக் கணக்கில் செலவிட்டு வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இவருக்காக செலவழிக்கப்பட்ட காவல் துறையினர், பொருட்செலவு, இவருக்கான பந்தோபஸ்துப் பணிகள் என நம் மக்களின் வரிப்பணம் அல்லோலகல்லோலப்பட்டுள்ளது. இவருக்கு ஆயுள் தண்டனை வழங்கும் படி பரிந்துரை செய்யும் நல்லவருக்கு ஒரு விஷயம் “நாளை நீங்களோ உங்கள் உறவினரோ பயணப்படும் விமானத்தை ஹை-ஜாக் செய்து இந்தத் தியாகியை விடுதலை செய்யச் சொல்லி வரும் மிரட்டலுக்குத் தயார் என்றால் இவரைக் காப்பாற்றுங்கள்”. ஏனெனில் இது தானே எப்போதும் இவர்களால் நமக்குக் கிடைக்கும் நன்மை. நடு வான் சாகசத்தில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஒரு மரணப் போராட்டத்திற்குத் தயாராவோம் காமன் மென்.

அழகான அரண்மனையில் நால்வரைக் கொன்ற பாம்பைக் கண்டால் சமாதானம் பேச மாட்டோம். அடித்துக் கொன்று விடுவோம். ஆனால் அது மனிதன் எனும் போது மட்டும் இத்தனை அவலங்கள். இதெல்லாம் அரேபிய நாடுகளில் நடக்குமா... நம் நாட்டில் மட்டும் தான். ஏனெனில் நம் தாய்த்திரு நாடு இந்தியா.

Wednesday, May 5, 2010

டெல்லி டு கோலாப்பூர் - 1 - டெல்லி விமான நிலையம்


பதினைந்து நாட்கள் வீட்டிலிருந்து விடுதலை. கோலாப்பூருக்கு வேலை விஷயமாகப் பயணம். இந்தப் பயணக் கட்டுரையை வித்தியாசமா வீட்டிலிருந்து கிளம்பினதுல இருந்து ஆரம்பிக்கலாம்.

காலைல ஒன்பதரைக்கு ஃப்ளைட். எட்டரைக்கு ஏர்போர்ட்ல இருந்தாப் போதும். ரிலாக்ஸ்டா ஆறரைக்கு வீட்ல இருந்து கிளம்பி ஏழரைக்கெல்லாம் ஏர்போர்ட் போயாச்சு. டெல்லி ஏர்போர்ட் எவ்ளோ மாறிடுச்சு. மாசத்துக்கு குறைஞ்சது நாலு முறையாச்சும் அங்கே போனாலும் எப்போவும் சரியான நேரத்துக்குப் போறதால அங்கே இருக்குற விஷயங்களை சரியா பார்க்கவும், அதைப் பத்தி சிந்திக்கவும் முடியறதில்ல. இந்த முறை நல்லா நேரம் கிடைச்சது.

2-3 வருஷத்துக்கு முன்னாடி காலை ஃப்ளைட்னாலே வேண்டாம்னு கேன்சல் பண்ணி மதிய நேரமா பயணிப்பேன். காரணம் என்னன்னா காலை 5 மணியிலேருந்து 10 மணி வரைக்கும் டெல்லி சப்ஜி மண்டியை விட ஏர்போர்ட்ல தான் கரைச்சல் அதிகமா இருக்கும். அந்த கூட்டத்தைப் பார்த்தா நம்மூர் சிட்டி பஸ்ல துண்டு போட்டு இடம் போட்டுட்டு அந்த இடத்துல யாரும் உக்கார்ந்திடாம இருக்க முண்டியடிச்சிக்கிட்டு ஏறுர மக்கள் நினைவு வரும். எப்படியோ சில பல காலை நேர அனுபவங்கள் கொடுமையா இருந்திருக்கு. இதுக்கு நடுவுல பெங்களூர்ல புது ஏர்போர்ட் ரெடியானப்போ, அஹமதாபாத்தோட கூட்டமில்லாத ஏர்போர்ட் பார்க்குறப்பவெல்லாம் டெல்லியும் இப்படி இருக்கக் கூடாதான்னு தோணும். ஆனா நிஜமாவே இப்போ சூப்பரா இருக்கு.

காமன்வெல்த் கேம்ஸுகளுக்கு ஒரு நன்றியைக் கட்டாயம் சொல்லியே ஆகணும். அது டெல்லில நடக்குறதால டெல்லில எவ்வளவு மாற்றங்கள்... விமான நிலையம் போகற வழில டக்கரா ஃப்ளை ஓவர் கட்டிட்டாங்க. நல்ல ஸ்பேஸ் விமான நிலையத்துக்கு முன்னாடி. புதுப்பிக்கப்பட்ட டெர்மினல்கள், கூட்டமே தெரியாத அளவுக்கு விரிவாக்கப்பட்ட கவுண்ட்டர்கள், காத்திருக்க விசாலமான இடம், ஏகப்பட்ட கடைகள்ன்னு ரொம்ப நல்லாப் பண்ணிட்டாங்க. ஆனாலும் டெல்லி ஏர்போர்ட்டில் மாறாத ஒரே விஷயம் ட்ராஃபிக். எப்போவுமே லேண்டிங் 10 நிமிஷமாவது டிலே ஆகுறதுண்டு. காரணம் 5 நிமிஷத்துக்கு ஒரு ஃப்ளைட் லேண்டாகுற பிஸியான ஏர்போர்ட் இது.


அடுத்ததா ஏர்போர்ட் போறதுக்கான சாலைகள். புதுசா கட்டின ஃபளை ஓவரால ட்ராஃபிக் ஜாம் நல்லாவே குறைஞ்சுடுச்சு.


சரி, நாம மறுபடியும் ஏர்போர்ட்டுக்குள்ள வரலாம். உள்ளே சாப்பாட்டுக் கடையும், புத்தகக் கடையும் தவிர வேறெந்த கடையிலும் மக்கள் கூட்டத்தைப் பார்க்க முடியல. அங்கங்கே இருக்குற ட்ரெஸ் கடைலேயும், கிஃப்ட் கடைகளிலேயும் ஒரு ரெண்டு பேர் சும்மா சுத்திப் பார்த்திட்டு இருந்தாங்க. இந்தக் கடைகளில் வியாபரமே இல்லையே பின்ன ஏன் இங்கே கடை வெக்குறாங்கன்னு யோசிச்சப்போ தான் தெரிஞ்சது “இதுவும் ஒரு வியாபார விளம்பரம்”ன்னு. இங்கே யாரும் வாங்கலைன்னாலும் இந்தக் கடைகளின் ப்ராண்டுகள் வெளியூர் / வெளிநாட்டுப் பயணிகளின் மனதில் பதிஞ்சிடுது. இங்கே வாங்க முடிஞ்சவங்க இங்கேயும், வாங்க முடியாதவங்க இதே கடைகளில் வெளியேயும் வாங்கிக்கலாம். ப்ராண்ட் நேமை எப்படியோ நம்ம மண்டைக்குள்ள கொண்டு வந்துட்டாங்க. ம், ஓகே.

நம்மூர் விமான நிலையங்களில் எனக்குப் பிடிச்ச கடைகள் புத்தகக் கடைகள். எல்லா வகையான புத்தகங்களும் கிடைக்கும். ரொம்ப நாள் கழிச்சு யாரையாவது பார்க்கப் போறவங்களுக்கு அவங்களுக்கு ஏத்த மாதிரியான புத்தகங்கள் வாங்கிட்டுப் போக வசதியா இருக்கு. சின்னக் குழந்தைகளோட ட்ராயிங், க்விஸ் புக்லேயிருந்து மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்கள், வீட்டுல இருக்குற அம்மணிகளுக்கு உபயோகமாகுற புத்தகங்கள், பிஸினஸ், மேனேஜ்மெண்ட் புத்தகங்கள், அனைத்து வகை நாவல்கள், பாட்டி, தாத்தா வாசிக்க ஆன்மீகம், மருத்துவம், கதைப் புத்தகங்கள்ன்னு எல்லாமே இருக்கு. ஆனா எல்லாமே இந்திய மொழிகள் எதுலேயுமே இல்லாம ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும். ஏன்னா நம் தாய்த் திரு நாடு “இந்தியா”.

அடுத்தது சாப்பாட்டுக் கடைகள். டெல்லி முழுக்கவே சாப்பாட்டுக் கடைகள் விலை அதிகம்தான்னாலும் இங்கே இன்னும் அதிகம். ரெண்டு ப்ரட்டுக்குள்ள அழுகிப் போன காய்கறிகளை ஒளிச்சு வெச்சிட்டு 200 ரூபாய் வாங்கிடுறாங்க. நம்மூர்ல நல்லா ஸ்டீல் க்ளாஸை வெந்நீர்ல கழுவி ப்ரூ காபி போட்டு நுரை பொங்க ஆத்திக் கூடவே டபராவும் குடுத்து 5 ரூபாய்க்குக் குடிச்ச காஃபியோட சுவையும், மணமும் இங்கே மெஷின்ல இருந்து எடுத்து பேப்பர் டம்ளர்ல குடுக்குற 100 ரூபாய்க் கேப்பசினோல இல்ல. ஆனாலும் வேற வழியில்லாம அதைத் தானே வாங்கிக் குடிக்க வேண்டியிருக்கு. இங்கே விட்டுட்டா அடுத்து ஃப்ளைட்ல அக்கா வந்து வெந்நீர், பால் பவுடர், காஃபி பவுடர், சீனியெல்லாம் குடுத்து நம்மளையே காஃபி கலந்து குடிக்க சொல்லும். அந்த நேரத்துல தான் ஃப்ளைட் ஜெர்க் ஆகி காஃபி நம்ம மேலயும், நம்ம பக்கத்துல தூங்கிட்டிருக்குற அங்கிள் மேலேயும் கொட்டும். தூங்கிட்டிருக்குறவர் எழுந்து முறைக்கும் போது நாம வழக்கம் போல அசடா சிரிக்க வேண்டியிருக்கும். இதை விட பெட்டர் இங்கன 100 ரூபாய்க்குக் காஃபி குடிக்குறது.

செக்கிங் முடிச்சு உள்ளே போனதும் நேரா புத்தகக் கடைக்குள்ள போய் என் ரெகுலர் புத்தகமான இண்டீரியர் மேகஸின் வாங்கிட்டு, அப்படியே ஒரு கேப்பசினோவையும் கையில் ஏந்திக்கிட்டு வந்து உக்காந்தேன். காதுல வைரமுத்து வரிகளுக்கு ரஹ்மான் தாலாட்டு, கைல இண்டீரியர் மேகஸின், குளுகுளு ஏசி ஹால், இதமா தொண்டை நனைக்குற காஃபி.... இப்படியே 24*7 இருக்க சொன்னாலும் இருப்பேன் நான். ஒண்ணரை மணி நேரம் சட்டுன்னு போயிடுச்சு.

ஒன்பது மணிக்கு ஃப்ளைட்டுக்குப் போக கேட் நோக்கிப் போனா எவ்ளோ பெரிய க்யூ. ரீசஷன் முடிஞ்சதுன்னு தெரிஞ்சது. க்யூவெல்லாம் குறைஞ்சதும் அங்கே இருக்குற பஸ்ல (அட, கூகுள் பஸ் இல்லைங்க) போய், ஏர்க்ராஃப்ட்டுக்குள்ளேயும் போயாச்சு. ஐ.பி.எல்.ல விஜய் மால்யா எவ்ளோ லாஸாகிருக்காருங்குறது கிங் ஃபிஷர் சர்வீஸ்லேயே தெரிஞ்சது. அதை அடுத்த பதிவில் தொடர்றேன். இப்போதைக்கு டாட்டா சொல்லுங்க. ஃப்ளைட் கிளம்பப் போகுது.