Tuesday, December 23, 2008

டிப்ஸ்.....

தற்போதெல்லாம் வேலை கொஞ்சம் இழுபறியாகவே செல்கிறது.எனக்கும், அமெரிக்காவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற போதிலும், அங்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி, என் பர்சையும் பதம் பார்க்கிறது.
ஆள்குறைப்பு, சம்பளகுறைப்பு போன்றவை அதிகமாய் எல்லா இடத்திலும் அரங்கேறிக் கொண்டிருக்க, அந்த நெருக்கடி எதுவும் இல்லை எனினும், சம்பளம் வருவதே பெரும் பாடாய் உள்ளது. இந்த நேரத்தில், என் அலுவலக தோழி என்னிடத்தில் வந்து அழ, அவளுக்கு கொடுத்த டிப்ஸ் அனைவருக்கும் உபயோகமாகும் என நினைக்கிறேன்.

வெளியில் சாப்பிடுவதை தவிர்த்து, ரூமில் பருப்பு சாதம் செய்தோ அல்லது ரொட்டி சப்ஜி செய்தோ சாப்பிடு.

புதிதாக எந்த ஆடை, அலங்காரப் பொருளிலும் செலவிட வேண்டாம்.

ரிக்ஷாவிற்கு பத்து ரூபாய் செலவு செய்வதை விட்டு, உடன் வேலை பார்க்கும் நண்பர்களுடன் பஸ் ஸ்டாண்ட் வரை நடந்து செல்.

போனில் யாருடன் இரண்டு நிமிடத்திற்கு மேல் பேசுவதை தவிர் (நீ அழைத்திருந்தால்)

என்ன மெயில் அனுப்புவதாக இருந்தாலும், அதை ஆபிசிலேயே முடித்து விடு. வீட்டில் போய் இன்டர்நெட் உபயோகிக்காதே

வேலைக்காரியையும், ஜிம் போவதையும் நிறுத்து. ஜிம் போவதாக நினைத்து, அந்த நேரத்தில் வீட்டு வேலைகளை செய்ய பழகு.

தீபாவளி தள்ளுபடி, புத்தாண்டு சிறப்பு தள்ளுபடி விளம்பரங்களில் மயங்காதே

பேப்பர் வாங்குவதை தவிர்த்து, ஆன்லைனில் பேப்பர் படிக்க பழகு. (அதுவும் அலுவலக இடைவெளி நேரத்தில்)

பார்லர் போவதை குறைத்துக் கொள்.

மாதத்திற்குள் ஒரு முறை மட்டுமே திரையரங்கு செல்வது என பழகு

சம்பள டென்சனை வேலையில் காட்டாதே. அன்றன்றைய அலுவல் வேலைகளை அன்றே முடித்து விடு. அப்போது தான் வேலையாவது நிலைக்கும்.

ஆபிசில் கிடைக்கும் மட்டமான டீ பிடிக்கவில்லை எனில், நீயே வீட்டிலிருந்து தயாரித்து எடுத்து வா. வெளியில் ஒரு டீ பதினைந்து ரூபாய்க்கு வாங்கி குடிக்காதே.

எப்போதும் பர்சில் இருக்கும் பாக்கி சில்லரையை உண்டியலில் போட்டு பழகு
எல்லாவற்றிற்கும் மேலாக ஆறு மாத சம்பளத்தை எப்போதும் ரிசர்வில் வைத்திரு.

Saturday, October 25, 2008

பாவம் தமிழ்

நேற்று மாலை பெங்களூருவில் மழை தூறிக் கொண்டிருந்தது. எப்போதும் எட்டு மணிக்கு மேல் அறைக்கு செல்லும் நான், மழையின் காரணமாக, ஏழு மணிக்கே சென்று விட்டேன். அலுவல் வேலையாக செல்லும் போது, உடன் புத்தகங்கள் எடுத்து செல்லும் வழக்கமில்லாததால் பொழுதைப் போக்குவதற்காக தொலைக்காட்சியை ஆன் செய்தேன். சேனல்களை மாற்றிக் கொண்டே வந்த நான், ஒரு அழகான தமிழ்ப் பாடலைக் கேட்டு, ரிமோட்டைக் கீழே வைத்து விட்டு, பாடலை ரசித்துக் கொண்டிருந்தேன்.

பாடல் முடிந்து திரையில் தோன்றிய பெண் வித்தியாசமான உடைகளை அணிந்து, விசித்திரமாய் காட்சியளித்தார். சரி, நான் தான் வேறு ஏதோ மொழி சேனலில் தமிழ்ப் பாடலைப் பார்த்து விட்டேன் போலும் என நினைத்து மாற்றப் போகும் போது "ஹலோ, சொல்ங்க" என்ற அவரது குரல் தமிழ் தான் என்ற லேசான நம்பிக்கையைக் கொடுத்தது. அவர் கீழே என்ன உடை உடுத்தி இருந்தார் என தெரியவில்லை. மேலே ஒரு சிறு குழந்தையின் சட்டையை வாங்கிப் போட்டிருந்தார். எங்கே கிழிந்து விடுமோ என்கிற பயம் நிகழ்ச்சி பார்த்த அனைவருக்குமே வந்திருக்கும். ஒரு கை முழுவதுமாகவும், மற்றொரு கை இல்லாமலும் அந்த ஆடை வடிவமைக்கப் பட்டிருந்தது. நல்ல வடிவமைப்பு தான் என்றாலும், தமிழ்த் தொலைக்காட்சியில், தமிழர்களுடன் அழகான தமிழில் பேசுவதற்கு அது தேவை தானா என்ற கேள்வியுடன், அதை பார்த்துக் கொண்டிருந்தேன்.

காதில் இருந்த கை வளையல்கள், நூடுல்ஸ் போன்ற தலை முடி, மூக்கிலிருந்த மற்றொரு வளையம், கழுத்திலிருந்த பாசி மணிகள், தப்புத் தப்பான தமிழ் இவை எல்லாம், ஒரு குறிப்பிட்ட இனத்தவரை எனக்கு நினைவூட்டவே, "பரவாயில்லையே! இவர்களுக்கு நிகழ்ச்சி தொகுப்பாளர்களாகவும் இட ஒதுக்கீடு தரப்பட்டுள்ளதே" என்ற ஒரு திருப்தி. ஆனால், அவர் பேசிய தமிழ் தான், அவர் எந்த இனத்தவர் என கண்டு கொள்ள சற்று சிரமமாய் இருந்தது. ஏனெனில், நன்கு படித்த மேதைகளும் சரி, நாடோடிக் கலைஞர்களும் சரி அவர்களுக்கென ஒரு மொழி வைத்துக் கொண்டு அதை சரியாக பேசி வருகிறார்கள். அப்படி இருக்க இவர் பேசியது எந்த இனத்தவரை சேர்ந்தது என்ற ஐயத்துடன் என் தோழியை தொலை பேசியில் அழைத்துக் கேட்டேன்.

"வித்யா, டிவியில் ஒரு நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருக்கிறேன். உன் வீட்டு டிவியையும் கொஞ்சம் ஆன் செய்து, அந்த வர்ணனையாளர் பேசுவது எந்த வட்டார மொழி என கேட்டு சொல்லேன்" என்றேன். அவளது ஊரில், நான் குறிப்பிட்ட அந்த சேனல் ஒளிபரப்பாவதில்லையாம். வேறு வழியே இல்லை, அது எந்த வட்டார மொழி என தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்ற ஆவலில் நானே அவளிடம் அந்த உரையாடலை வர்ணனையாளர் மற்றும் அழைப்பாளர் போல் பேசிக் காண்பித்தேன்.

"ஹலோ, சொல்லுங்க. யார் பேஸ்ரிங்க. "

"வணக்கம்ங்க, நான் முனியாண்டி நாகர் கோவில்ல இருந்து பேசறேன் மேடம்"

"ஹையோ, மெடம்நெல்லாம் சொள்ளாதிங்க. என் பேரு ஷாலினி. நீங்க அப்படியே குப்பிடுங்க"

"சரி ஷாலினி, நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க."

"ஒஹ், தேங்க் யூ. எள்றும் அப்டி தன் சொல்ரங்க. சொல்ங்க, முன்யண்டி, உங்கள்கு என்ன பிடிகும்"

"எனக்கு உங்களனா ரொம்ப பிடிக்கும் ஷாலினி. ரெண்டு வருஷமா உங்க தொலைக்காட்சிக்கு போன் போட்டு பேசுறேன். ஆனா, உங்க கிட்ட இன்னிக்கு தான் பேச முடிஞ்சது."

"ஒ, ஸ்வீட். உங்க கிட்ட பெஸ்நதுல ரொம்ப ஹேப்பி. இப்டியே எங்கலுக்கு தொடர்ந்து கால் பண்ங்க. அப்றம் ஷோல்ங்க, உங்க வைப் நள்ளா இருகங்க்லா"........

இவ்வாறாக தொடர்ந்தது அந்த உரையாடல்.

இதை என் தோழியிடம் சொல்லி முடித்த போது, அவள் இது தான் தொலைகாட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் தமிழ் என சொன்னாள். எனக்கு தலையே பிய்த்து விடும் போல் இருந்தது. பஞ்சாபியான என்னவரின் தமிழ் எவ்வளவோ நன்றாக உள்ளது என எண்ணி மகிழ்ந்தேன்.

தமிழுக்கு தான் எத்தனை கால மாற்றங்கள். இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என்பது போய் சென்னைத் தமிழ், மதுரை தமிழ், கோவைத் தமிழ் வந்தது. இப்போது தொலைக்காட்சித் தமிழ், வானொலித் தமிழ் மற்றும் நடிகைத் தமிழ் என அதுவும் உருமாறிப் போனதை எண்ணி வருந்த மட்டுமே முடிகிறது.

தொலைக் காட்சி வாயிலாக தமிழ் இல்லங்களுக்கு செல்லும் இவர்கள், உடை மற்றும் நாகரீக விதத்தில் முன்னேறலாமே. இதை நண்பர் மணியிடம் வருத்தப்பட்டு சொல்லிக் கொண்டிருந்த போது, தமிழ் மக்களுக்காக ஒரு தொலைக்காட்சி சேனலில் மட்டும் இந்த சீரழிவு இல்லை என்றார். சற்று ஆறுதலாக இருந்தது.


Thursday, October 23, 2008

பெங்களூரின் பிரதான சாலையில்....

நேற்று முன் தினம், அலுவல் பணி முடித்து தொழிற்சாலையிலிருந்து நானும், தொழிற்சாலை மேலாளரும் ஏழு மணிக்கு கிளம்பினோம். நான் அப்பாவுடன் செல்பேசியில் உரையாடிக் கொண்டிருந்தேன். கிளம்பி இருநூறு மீட்டர் தூரமே சென்றிருப்போம். அங்கிருந்து ஒரு வளைவில் திரும்பி மெதுவாக சென்று கொண்டிருந்த வேளையில், பின்னாலிருந்து 'தடால்' என ஒரு சத்தம். முன்னிருக்கை நகர்ந்து பின்னால் சென்று, முன்னிருக்கையில் அமர்ந்திருந்த இருவரும் பின்னால் தள்ளப்பட்டோம். ஓரிரு நொடிக்கு அதிர்ச்சி விலகவில்லை. திடீரென ஸ்டியரிங்கை மறந்துவிட்ட மேலாளரைப் பார்த்த எனக்கு உயிர் பயம் வரவே, "சார், நான் ஓகே. நீங்க ஓகேவா... ஸ்டியரிங்கைப் பிடிங்கள்" என்றேன். ஏனென்றால், அந்த சாலை வாகன வரத்து நிறைந்த விமான நிலையம் செல்லும் சாலை. எப்போதும் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் அந்த சாலையில், அந்த நேரத்தில் அதிர்ஷ்டவசமாக இடித்துக் கொண்ட இரு வாகனங்களைத் தவிர வேறொன்றும் இல்லை. என் குரல் கேட்ட அவரும் சுதாரித்துக் கொண்டு, வண்டியை இடது பக்கத்தில் ஓரம் கட்டினார்.

செல்பேசியில் பேசிக் கொண்டிருந்த நான், அது போன இடம் தெரியாமல் அமர்ந்திருந்தேன். அதைத் தேடும் நிலையிலும் இல்லை. எப்போதும் முக்கியமாய் தெரியும் சில பொருட்கள், விஷயங்கள் அல்லது மனிதர்கள் ஏதோ ஒரு நேரத்தில் அதன் மதிப்பை இழந்து விடுகின்றன / விடுகின்றனர். எந்த ஒரு பொருளும் எனக்கு சொந்தமானது என்றோ, மிகவும் முக்கியமானதேன்றோ சொல்லும் உரிமை யாருக்குமே இல்லை எனினும், சில வருட வாழ்க்கைக்காக பல போராட்டங்கள்.

வண்டியின் பின்னால் ஏற்பட்ட பலத்த அடியில், பின் கண்ணாடி உடைந்து, வண்டியின் பின் பகுதி முழுவதுமாய் நெளிந்து போய் இருந்தது. இவ்விபத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில், கழுத்து சுளுக்கியிருந்தது. எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் அப்பாவுடன் பேசிக் கொண்டிருந்த நினைவு வரவே, செல்பேசியை தேடி எடுத்து, அவருக்கு மறுபடியும் கால் செய்து ஒன்றும் இல்லை, சிறு விபத்து என ஆறுதல் கூறி விட்டு, மீண்டும் 'ஸ்பாட்டிற்கு' வந்தேன். நல்ல வேளையாக பின்னால் வந்த வண்டியிலும் யாருக்கும் எதுவும் ஏற்படவில்லை.

பெரும்பாலும் இது போன்ற நேரங்களில், இரு வண்டிக்காரர்களும் ஒருவரை ஒருவர் திட்டி, பெரும் சண்டையாவதை சாலையோரங்களில் பார்த்திருந்த நான், அன்றைய நாளில் ஏற்படப்போகும் கலவரத்தை எதிர்நோக்கி காத்திருந்தேன். எங்கள் பின்னால் இருந்த வண்டியில் இருந்து வந்தவர் ஒரு டாக்ஸி ஓட்டுனர்.அவர் வந்ததும், "தவறு என்னதல்ல" என சொல்லிக் கொண்டிருந்தார். என்னுடன் இருந்த மேலாள நண்பர், "தவறு யார் மீது என்பதல்ல முக்கியம். உங்களுக்கு ஒன்றும் அடி இல்லையே. நீங்கள் நன்றாக உள்ளீர்களா" என்றார். அவர் கேட்ட விதத்திலேயே அடங்கிப் போனார் டாக்ஸி ஓட்டுனர்.

பின் காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வந்தனர். விபத்து நடந்த இடம், தொழிற்சாலையிலிருந்து அரை கிலோ மீட்டர் தூரம் என்பதால், அங்கிருந்த உதவியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் வந்தனர். எனது மேலாள நண்பர் எதுவும் சத்தம் போடாமல், சாதாரணமாக பேசியதில், இறுதியில் டாக்ஸி ஓட்டுனர் அவர் மீது இருந்த தவறை உணர்ந்து, காவலரிடம் நூறு சதவிகித தவறும் அவர் மீது தான் என ஒப்புக் கொண்டார். டாக்ஸி ஓட்டுனரை அஹிம்சாவாதியாக்கிய மேலாள நண்பரை எண்ணிக் கொண்டே, அவ்வழியில் வந்த பேருந்தை பிடித்து ரூம் வந்து சேர்ந்தேன்.

அடுத்த நாள் மருத்துவனைக்கு சென்று கழுத்தில் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்து ஒன்றும் இல்லை என்பதை அறிய ஆயிரம் ரூபாய் செலவு செய்தாகியது. கடவுளுக்கு நன்றி சொல்லி மேலாளரிடம் பாடம் கற்று, அறைக்கு வந்து ஆயின்மென்ட் போட்டு தூங்கினேன்.

Wednesday, October 22, 2008

எனது திருமண நிகழ்வு

திருமணம் முடிந்ததும் திருமணத்திற்கு வர முடியாத நண்பர்கள் தொலைபேசியில் அழைத்து வாழ்த்தி, திருமண நிகழ்வை விசாரித்தனர். அவர்களுக்கு என் திருமண நிகழ்வைக் கூறி கூடிய செல்பேசி கட்டணத்தால், எல்லோரையும் என் ப்ளாக் இல் படிக்க சொல்லி குருஞ்சேதி அனுப்பி விட்டு, இங்கே எழுதுகிறேன்.

திருமணத்திற்கு முன்பு முக்கியமான விஷயம் என் முதல் நெடுந்தூர ரயில் பயணம். அதை பற்றி அடுத்த கட்டுரையில் விவரிக்கிறேன்.

மூன்று நாட்கள் திருமணம் மிக விமரிசையாக சுற்றம் சூழ, சொந்தங்கள் வாழ்த்த இனிதாய் நடந்தது.

முதல் நாள் - மெஹந்தி செரிமனி

முதல் நாள் ஜலந்தர் (அது தான் என் மாமியார் ஊர்) போய் சேர்ந்ததும், என்னவரின் அக்கா வந்து, என்னை ப்யூட்டி பார்லருக்கு அழைத்து சென்று விட்டு வந்தார். அங்கு அவர்கள் வைத்திருந்த அனைத்து கிரீம்களையும் ஒன்றன் பின் ஒன்றாக, என் முகத்தில் பூசி, பூதம் போல் உட்கார வைத்தனர். எப்போதும் இது போன்ற நேரங்களில் அங்கு இருக்கும் புத்தகங்களில் மூழ்கிப் போகும் என் தங்கை, அங்கிருந்த ஹிந்தி புத்தகங்களை வெறித்து விட்டு, என்னையும் முறைத்தாள். அவளை தவிர துணைக்கு வேறு யாரும் துணைக்கு இல்லாத காரணத்தால், அவளிடம் அசடாக சிரித்து சமாளித்து உட்கார வைத்தேன். அவளுக்கும் சில பூச்சுகள் நடந்ததால், அன்று அவளிடம் அவ்வளவாக திட்டு வாங்காமல் தப்பினேன்.

பார்லர் முடிந்து, நான்கு மணி நேரம் தொடர்ந்து உட்கார்ந்த களைப்பில் சிறிது நேரம் கண்ணயரலாம் என எண்ணி, எனது அறைக்கு வந்தேன். மூன்று மெஹந்தி வாலாக்கள் ஒரு மணி நேரமாய் என் வருகைக்காக காத்திருந்தனர். வந்ததும், காத்திருந்த கடுப்பில் ஆளுக்கு ஒரு கையை பிடித்து வரைய ஆரம்பித்தனர். மிக சிரமப்பட்டு அவர்களிடம் வெகு நேரமாய் கை நீட்டியதன் விளைவாய் கை வலி வந்தது. வரைய ஆரம்பித்து ஒன்றரை மணி நேரம் கழித்து, முழு கையையும் வரைந்து முடித்தவர்கள், காலில் இட ஆரம்பித்தனர். எனக்கு தான் மிகுந்த சிரமமாய் இருந்ததே தவிர அவர்களுக்கு இல்லை. முழங்கால் வரை அழகாய் வரைந்து முடித்தனர். இந்த நேரத்தில், மற்றொரு பக்கம், என் அம்மா, தங்கை மற்றும் அனைத்து உறவினர் பெண்களும் அவர்களுக்கு மெஹந்தி இட்டுக் கொண்டிருந்தனர். நான்கு மணி நேரம் தொடர்ந்த மெஹந்தி செரிமனி மாலை எட்டரை மணிக்கு முடிந்தது.

பின் அப்படியே சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு, பத்தரை மணிக்கு கை கழுவிய போது, நான்கு மணி நேரமாய் அமர்ந்திருந்த களைப்பு முழுவதுமாய் போனது. அவ்வளவு அழகாக இருந்தது கை. பெண்களுக்கு மெஹந்தி இவ்வளவு அழகைக் கூட்டுமா என எனக்கு நானே சிந்தித்து கொண்டு, இரவு உணவையும், கல்யாண அரட்டைகளையும் முடித்து, இரவு பணிரண்டரைக்கு மெஹந்தி வாசனையுடன் உறங்க சென்றேன்.

இரண்டாம் நாள் - நிச்சயதார்த்தம்

காலை ஒன்பது மணிக்கே என்னைக் கொண்டு போய் ப்யூட்டி பார்லரில் விட்டனர். அங்கிருந்த பெண்மணி மறுபடியும் என்னவெல்லாம் அவரிடம் உள்ளதோ, அத்தனையும் என் முகத்தில் அளவாய் அப்பினார். எல்லா மேக் அப்பையும் வெற்றிகரமாய் ஒரே மணி நேரத்தில் முடித்து விட்ட சந்தோஷத்தில், நான் கிளம்பி நிச்சயதார்த்த ஹோட்டலுக்கு சென்றேன். இன்று நிறைய நேரம் முதுகு வலிக்க உட்காரவில்லை என்ற குஷி.

ஆனால், என்னை நன்றாகக் காக்க வைத்தார் என்னவர். காலை பத்தரை மணியிலிருந்து என்னை ஒரு அறையில் உட்கார வைத்து விட்டு, "அவர் வந்ததும் ஒரு மணி நேரத்தில் உன்னை அழைக்கிறோம்" என்று சொல்லி விட்டுப் போனவர்கள், வரவே இல்லை. இரண்டு மணி நேரம் என்ன செய்வதென்றே தெரியாமல், யாராவது வர மாட்டார்களா என அந்த அறையிலேயே காத்திருந்தேன்.

ஒரு மணிக்கு ஒருவர் வந்து ஜல்ஜீரா கொடுத்து சென்றார். இருந்த தாகத்தில் அதைக் குடித்து விட்டேன். பின் நன்றாக பசிக்க ஆரம்பித்து விட்டது. பிறகு, தங்கைகள் இருவரும் வந்து பனீர் கட்லட்டையும், கோப்தாவையும் கொடுத்தனர். எங்கிருந்தோ உயிர் வந்தது.

இறுதியாக மதியம் மூன்று மணிக்கு அழைத்தனர். ஹாலில் இருந்த அனைவரும் பெண் (என்) வருகைக்காக காத்திருந்தனர். நான் நுழைந்ததும் பயங்கர கூச்சல். மேடை வரை பெண்கள் சூழ்ந்து வர, மேடையில் என்னவர் கை கொடுத்து ஏற்றி விட்டார். ஏதோ ஒரு பதற்றம் தொற்ற, கொஞ்சமும் முகத்தில் சிரிப்பில்லாமல் மிரண்டு போய் அமர்ந்திருந்தேன். பின், மோதிரங்கள் தரப்பட்டு, மாற்றப்பட்டன. ஏராளமான நகைகளும், பணமும் அன்பளிப்பாய் வந்தன. ஒரு மாத காலம் சம்பளம் இல்லாமல் வேலைக்கு மட்டம் போட்டுவிட்ட கவலை, கொஞ்சம் தீர்ந்தது.

குடும்ப சகிதம் அனைவருடனும் புகைப்படங்கள் எடுத்தவுடன், சாப்பிட அழைக்கப்பட்டோம். மிகப் பெரிய மேஜையில் இரு வீட்டாருடனும், நன்றாக உண்டு களித்தோம். பின், என்னவருக்கு பிரியா விடை கொடுத்து, என் வாகனத்தை நோக்கி நான் சென்றேன். இரவு பெண்கள் சங்கீத நிகழ்ச்சிக்கு அழைத்தவர்களை பார்த்து வேகமாய் தலையாட்டினேன், அவர்கள் மிக நாகரீகமாய் பொண்ணை தவிர எல்லாரும் வாங்க என சொல்லி சென்றனர். அது தான் வழக்கமாம்.

இரண்டாம் நாள் மாலை - பெண்கள் சங்கீத நிகழ்ச்சி

இரவு எட்டு மணிக்கு, மாப்பிள்ளை வீட்டார் அழைத்தது போலவே அனைவரும் என்னை தனியாய் விட்டு விட்டு, சங்கீத நிகழ்ச்சிக்கு சென்றனர். நான் என்ன செய்ய என தெரியாமல், தொலைக்காட்சி சேனல்களை மாற்றி மாற்றி அலுத்து, உறங்கி விட்டேன்.

இரவு பதினொன்றரை மணிக்கு திரும்பியவர்கள், பெண் தூங்குவதைக் கூட பொருட்படுத்தாமல், மாப்பிள்ளையின் பெருமைகளை பேசிக் (கத்திக்) கொண்டிருந்தனர். சத்தம் கேட்டு எழுந்த போது, எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போல, "நீ தான் வரல. நாங்க எவ்வளவு என்ஜாய் பண்ணோம் தெரியுமா... மாப்பிள்ளை என்னமா ஆடினார். எப்படியும் ரெண்டு கிலோ குறைஞ்சிருப்பார். சாப்பாடு பிரமாதம், அதிலேயும் ஐஸ் கிரீம் அடடா..... உனக்கும் எடுத்திட்டு வரலாம்னு நினைச்சோம்; ஆனா, நீ சாப்பிடுவியோ, இல்லையோனு தான் எடுத்திட்டு வரல" என்றார் சித்தி. சித்தி................. என்று ஒரு கத்தலோடு முறைக்க, "இந்தா மாப்பிள்ளை உனக்கு சாப்பாடு கொடுத்து விட்டார்" என்று அம்மா எடுத்து ஊட்ட, அவரின் காதலையும், அம்மாவின் பாசத்தையும் சேர்த்து சுவைத்தேன்.அதன் பிறகு, அந்த இரவு முழுக்க அனைவரும் மாப்பிளையின் புராணம் பாட, அதைக் கேட்டுக் கொண்டே தூங்கிப் போனேன்.

மூன்றாம் நாள் - திருமணம்

காலை எழும் போதே ஒரு வித அயர்வு. இரண்டு நாட்களும் மெஹந்தி வாலாவுக்கு கை காட்டி உட்கார்ந்தது, ப்யூட்டி பார்லரில் முகம் காட்டி அலுத்தது, எல்லாவற்றையும் விட முந்திய நாள் அவருக்காக மூன்று மணி நேரம் முதுகு வலிக்க காத்திருந்தது எல்லாம் சேர்ந்து காய்ச்சலாய் ஆகி இருந்தது. சாயங்காலம் திருமணம், காலையில் எழ முடியாமல் காய்ச்சல், அனைவரும் பயந்து போய் (நானும் தான்!) டாக்டரிடம் போனோம். அவர் நூற்றி மூன்று டிகிரி என்று சொன்னதும், எனக்கு அழுகையே வந்தது. ஆனால், என்ன ஆச்சரியம்! ஒரு ஊசி கூட போடாமல் மூன்றே மூன்று மாத்திரைகளில் காய்ச்சலை விரட்டி விட்டார் மருத்துவர்.

திடீரென வந்த காய்ச்சலால் மதியம் ஒரு மணிக்கு நடைபெற இருந்த சூடா செரிமனி (வளையல் சூடும் நிகழ்ச்சி), மாலை நான்கு மணிக்கு தள்ளிப் போனது. மருத்துவரிடம் போய் வந்த தெம்பில், அப்பாவையும், மாமாவையும் எனக்கு காவல் வைத்துவிட்டு ஷாப்பிங் போய் விட்டனர் அனைவரும். மதிய ஓய்வுக்கு பின், மாலை நான்கு மணிக்கு சூடா செரிமனிக்கு அவசரமாய் தயாராகி ஓடினேன்.என்னை கண் மூடி உட்கார சொல்லி, என் கையில் வளையல்களை அடுக்கினார் மாமா. கண் திறந்து பார்த்தபோது, கைக்கு நாற்பத்தி நான்கு வளையல்கள் அடுக்கப்பட்டிருந்தன.

மறுபடியும் அவசரமாய் கிளம்பி, திருமண அலங்காரத்திற்காக பார்லர் விரைந்தேன், தோழி மோனிகாவுடன். அன்று முகூர்த்த நாள் என்பதால் கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. பல பெண்களும் புடவை கட்ட தெரியாமல், பார்லரில் வந்து பணம் கொடுத்து கட்டி சென்றனர். எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது, எனது அலங்காரத்திற்கான அழைப்பு வந்தது. ஒரு மணி நேரத்தில் என் தோற்றம் முழுவதுமாய் மாற்றப்பட்டிருந்தது. என்னை பார்த்தால், நமது ஊர் ஊசி, பாசி விற்பவர்கள் போல் (அது தான் அங்கு திருமண அலங்காரமாம்) இருந்தது. என்னை நானே ஒரு பரிதாபப் பார்வையோடு பார்த்து விட்டு, அங்கிருந்து கிளம்பினேன்.

ஹோட்டேலில் ஒரு அறையில் முந்தைய தினத்தைப் போலவே காக்க வைக்கப்பட்டேன். அதிசயமாய் அரை மணி நேரத்திலேயே அழைத்தார்கள். போனதும், என்னவரும் பயமுறுத்தும் கோலத்தில் காட்சியளித்தார். வந்த பயத்தையும், சிரிப்பையும் ஒரு வழியாய் அடக்கிக் கொண்டு, அவரருகில் போய் நின்றேன். மறுபடியும் பரிசுகள், அன்பளிப்புகள், உறவினர்களுடன் புகைப்படங்கள். நடுவில் அனைவரும் சேர்ந்து (எங்களிருவரையும் சேர்த்து தான்) ஒரு ஆட்டம் வேறு.

பசித்த வேளையில் சாப்பிட போகலாம் என்று அவர் சொன்னதும், வேகமாய் சிரித்து தலையாட்டினேன். நடுவில் புகைப்படக்காரர் நுழைந்து தனிப் புகைப்படங்கள் எடுக்க வேண்டும் என்றதும் வேண்டா வெறுப்பாக, சிரித்து புகைப்படங்கள் எடுத்து முடித்தோம். ஒரு வழியாய் தட்டிற்கு முன் அமர்ந்து ஸ்பூனை கையில் எடுத்த போது தான் மனதிற்கு ஆறுதலாய் இருந்தது. சாப்பிட்டு முடித்தும், மொட்டை மாடியில் ஹோமம் வளர்க்கப்பட்டு, மந்திரங்கள் ஒலிக்க, மங்கள் சூத்ரா (தாலி) அணிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மெட்டி அணிவிப்பும், குங்குமம் இடுதலும் நடந்தன.

அனைத்து சடங்குகளையும் முடித்து விட்டு, மனையிலிருந்து வெளியே வந்து பார்த்தால், என் இரு குறும்பு தங்கைகளும் அவரின் ஷுவை எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டு, அதைத் திருப்பித் தர பேரம் பேசிக் கொண்டிருந்தனர். ஷுவை திருப்பிக் கொடுக்க என் தங்கைகள் கேட்ட தொகை ஐம்பதாயிரம். ஒரு வழியாக பேரம் ஐயாயிரத்து நூறில் முடிந்து, அவர் ஷூ திரும்பி வாங்கப்பட்டது. தங்கைகளும் சமர்த்தாய் கொடுத்த தொகையை வாங்கிக் கொண்டு, மீதியை ரிசெப்ஷனில் வாங்கிக் கொள்கிறோம் என்று விட்டனர்.

எல்லாம் முடிந்து கிளம்பும் நேரம். அழ வேண்டும் என கூட்டத்தில் யாரோ சொன்னதும், முதலில் சித்தப்பாவின் தோளிலும், பின் அம்மாவின் தோளிலும் சாய்ந்து ஏங்கி ஏங்கி அழ தொடங்கி விட்டேன். ஒரு வழியாய் எல்லோரும் சமாதானப் படுத்த, அங்கிருந்து கிளம்பி அவரது வீட்டிற்கு சென்றேன். அதிகாலை ஐந்து மணிக்கு எங்களை ஆரத்தி எடுத்து, அவரது அம்மா வரவேற்க, வீட்டிற்குள் நுழைந்து புது வாழ்க்கையை இனிதாய் தொடங்கினோம்.

Wednesday, July 16, 2008

தவறு பெண்களிடம், குற்றம் ஆண்கள் மீதா...

மகளிர் தினத்தன்று அலுவகத்தில் உட்கார்ந்து ஓர்குட்டை அலசிய போது ஏற்பட்ட விவாதத்தில், தோழி ஒருவருக்கு என் பதில்கள்.

தோழியின் குற்றச்சாட்டு:

இந்த நாட்டுல பெண்கள் மீது நடக்குற எல்லா வன்முறைக்கும் ஆம்பளங்கதான் காரணம்.....
பெண்கள் தான் நாட்டுல பாதி ..ஆனா 33% கொடுக்க அவங்களுக்கு பிடிக்கல....
நாம படிக்கப் போனாம்னா அங்க டிஸ்டர்ப் பண்ரது.......சரி கோவிலுக்கு போனோம்னா பின்னாடி வந்து மணி அடிக்கிறது...
வேலை பாக்குற இடத்துல......வேற வேலை பார்க்குறது...கொஞ்சம் சிரிச்சி பேசிட்டா உடனே கெட்ட பட்டம் கட்டி அடித்தவன்கிட்ட கமெண்ட் அடிக்கிறது.....
சந்தேகப் படுறது.......உளவு பார்க்குறது....பெண்ண மனுசியா நடத்தமா பொருளா பார்க்குறது...
மொத்ததுல.......ஆண்கள் எல்லாருமே கெட்டவங்க தான்...

விக்னேஷ்வரியாகிய எனது பதில்:

இந்த நாட்டுல பெண்கள் மீது நடக்குற எல்லா வன்முறைக்கும் ஆம்பளங்கதான் காரணம்.....//

மாமியார் கொடுமை, நாத்தனார் கொடுமை, பெற்ற தாயே பெண் குழந்தையை கள்ளிப்பால் ஊற்றிக் கொல்வது இவை எல்லாம் ஆண்களால் நடத்தப்படுகின்ற வன்முறைகள் இல்லையே...

பெண்கள் தான் நாட்டுல பாதி ..ஆனா 33% கொடுக்க அவங்களுக்கு பிடிக்கல....//

கொடுக்க மாட்டேன் சொல்ற ஆண்கள் எத்தனை சதவிகிதம்? இன்னிக்கு உங்கள இவ்வளவு பேச விட்டு, அதற்கு தக்க விளக்கங்கள் தர்ற ஆண்கள் இருக்காங்க தானே.

ஆமாங்க, பெண்கள் மதிப்பெண்களும் நிறைய எடுத்து, இட ஒதுக்கீடும் வாங்கிகிட்டா, அப்புறம் அவங்க பாடு திண்டாட்டம் இல்லையா.... ;)


நாம படிக்கப் போனாம்னா அங்க டிஸ்டர்ப் பண்ரது.......சரி கோவிலுக்கு போனோம்னா பின்னாடி வந்து மணி அடிக்கிறது...//

படிக்கப் போன இடத்தில, பொண்ணுங்க படிக்கப் போற மாதிரி போனா எந்த பிரச்சனையும் இல்லை. அவங்க நடிக்கப் போற மாதிரி இல்ல போறாங்க.புத்தகத்தில, கணக்கு போட சொன்னா, தன்னை எத்தனை பேர் பாக்குறாங்கனு கணக்கு போடுற பெண்களை நான் உங்களுக்கு காட்டவா?கோவிலுக்கு போகும் போது கூட ஒழுங்கா உடுத்திட்டு போக பொண்ணுங்களுக்கு தெரியலையேனு நானே பல முறை நினைச்சிருக்கேன். சாமி கும்பிட போகும் போது எதுக்குங்க ஜனனல் வச்ச பிளவுஸ்?


வேலை பாக்குற இடத்துல......வேற வேலை பார்க்குறது...கொஞ்சம் சிரிச்சி பேசிட்டா உடனே கெட்ட பட்டம் கட்டி அடித்தவன்கிட்ட கமெண்ட் அடிக்கிறது.....//

வேலை இல்லாம, அடுத்தவங்க வேலையை கெடுக்கனே ஒரு கூட்டம் அலையுது. அதில் பெண்களும் இருக்காங்க. அந்த பெண்களும் கூட வேலை பாக்குற பெண்களை தவறா சொல்ல தான் செய்றாங்க. உண்மையா இல்லையா?


சந்தேகப் படுறது.......உளவு பார்க்குறது....பெண்ண மனுசியா நடத்தமா பொருளா பார்க்குறது...//

புருஷன் வேலைக்கு போய்ட்டு வந்த உடனே, அவன் சட்டை, பேக், கார்னு செக் பண்ற பெண்கள் இல்லையா? இதுக்கு பேர் சந்தேகம் இல்லாம என்ன? அது சந்தேகம் இல்லை, Pocessivenessனு நீங்க சொன்னா அதே Pocessiveness ஏன் ஆண்களுக்கும் இருக்க கூடாது?

மொத்ததுல.......ஆண்கள் எல்லாருமே கெட்டவங்கத்தான்.. //

நிறைய நல்ல ஆண்கள் இருக்காங்க. அவங்கள நல்லவங்களாவோ, கெட்டவங்களாவோ பாக்குறது, பெண்ணின் பார்வையில் தான் இருக்கு.

Thursday, March 13, 2008

தேடுகிறேன் என்னை...

ஒரு கணம்,
ஒரு ஊடுருவல்,
உனது பார்வை!

இதயத்தில் பல பட்டாம்பூச்சிகள்
நீ என்னை தொடர்ந்து பார்த்த போது!

எனக்கு
வெட்கப்படத் தெரியும் என்பதை
கற்றுத் தந்தது உன் கண்கள் தான்!

கடும் வெயிலிலும்
என்னை நடுங்க வைத்தது
உன் முதல் தொடுகை!

சரியா, தவறா என
யோசித்து முடிக்கும் முன்னரே
சேர்ந்து பிரிந்தன
நம் இதழ்கள்!

நீ
என்னுடன் இல்லாத நேரங்கள்
நரகமாயின!

பேசாத நிமிடங்களில்
பைத்தியமானேன்!

நீ
எனதே எனதானவன்
என்ற அகந்தையில்
நான் இருந்த போது,
என்னை -
சிதைத்து சின்னாபின்னமாகின,
"இனி ஒத்து வராது; இதோட முடிச்சுக்கலாம்"
என்ற உன் வார்த்தைகள்.

அன்று உடைந்தவள்,
இனி -
மீட்க முடியாது எனத் தெரிந்தும்
தேடுகிறேன்,

உன்னுள் தொலைந்த
என்னை!