Wednesday, September 22, 2010

நண்பேன்டா!


அரை கவுன் போட்டு, தலையில் ஒற்றைக்குடுமியுடன் ஓடிப் பிடித்து விளையாடிக் கீழே விழுந்து அழுகையில் முட்டியில் வரும் ரத்தத்தை எச்சிலால் துடைத்துக் கண்ணீரைத் தன் சட்டையால் ஒற்றியெடுக்கும் நட்பு எப்படி இதமாயிருக்கும் அப்படியிருக்கிறது எனக்கு இவன் நட்பு.

இவன் என் நண்பன் எனச் சொல்வதில் பெருமை உண்டா என்றால் நிச்சயம் அது மட்டுமில்லை. பெருமையைத் தாண்டி, ஒரு தாய்க்குருவி குஞ்சுகளுக்குக் கொடுக்கும் அணைப்பின் உஷ்ணம் உண்டு இந்த நட்பில். “ஹலோ, ஹாய்ங்க. எப்படி இருக்கீங்க.. விக்னேஷ்வரி பேசறேன்” என்று ஆரம்பித்த உரையாடலின் பதிலாய் “சொல்லுங்க விக்கி” என ஆரம்பித்த நட்பு, பழகிய ஒரு வருடத்திற்குள்ளேயே “டேய், போடா, என்னடா, லூசு, ஃப்ராடு...” என்றெல்லாம் வயது வித்தியாசமின்றி, எந்தத் தயக்கமுமின்றி ஒரு ஆரோக்கிய வழியில் எடுத்துச் சென்றது பாக்கியமே.

இவன் பலாப்பழம் போன்றவன். அட, இவன் தொப்பையை வெச்சு சொல்லலைங்க. வெளியே மிகவும் கரடுமுரடாக, சண்டைக்காரனாகத் தெரியலாம். ஆனால் பழகிப் பார்க்கும் நண்பர்களுக்கே தெரியும் இவன் இனிமை. நட்பிற்கு இவன் தரும் மரியாதையும், அதில் கொண்டிருக்கும் கண்ணியமும் “இவன் என் நண்பேன்டா”ன்னு சொல்ல வைக்கும். பழகிய பெண்கள் யாரும் இவனைத் தவறாகக் கூற மாட்டார்கள் என்பதை என்னால் அடித்துக் கூற முடியும்.

இவன் தோழி அப்டேட்ஸ் எழுதறானேன்னு “யாருடா உன் தோழின்னு” கேட்டா, நடிகர் திலகம் ரேஞ்சுக்குக் கண் துடிக்க “யாரும்மா இருக்கா.. எனக்கு யாரிருக்கா..”ன்னு சீன் போடுவான். (குறும்பட நடிகராயிட்டாராமாம்!)

பேசுகையில் நிமிடத்திற்கொரு முறை மொக்கையில்லாமல் பேச சொல்லுங்களேன் இவனை. “டேய், நீ இப்படியே பேசிட்டு இருந்தா நான் ஃபோனை வெக்கறேன் போ. சொல்ல வந்த விஷயத்தையே மறந்துட்டேன்”
“சரி போ, எனக்கும் வேலையிருக்கு” என்பான். எந்த விஷயத்திலும் ஒரு சீரியஸ்னெஸ்ஸே இல்லாதவன்.

எல்லாருக்கும் நல்லவர் பட்டம் கொடுத்து விடுவான் எளிதாக. எல்லாரிடமும் சட்டெனப் பழகிவிடுவான். இசை வெறியன். ரசனையானவன். இப்போது தான் கறந்த சூடான பால் போல் ரொம்ப நல்லவன். அளவில்லா ப்ரியமானவன். கூட நடக்கையில் எங்களை நட்பாய்ப் பார்க்கத் தெரியாத கண்கள் பாவம் செய்தவை.

இவன் நட்பை நான் எதனுடனாவது ஒப்பிட வேண்டுமென்றால் அது மிக சிரமம். தாய்ப்பாலை எதனுடனாவது ஒப்பிட முடியுமா.. அதன் தூய்மையும், உண்மையும் போல் தான் இவன் நட்பு. எனக்குப் பொக்கிஷம் அது.

நடிகராகக் களத்திலிறங்கிவிட்ட இவருக்குக் கடும் போட்டியாக இருப்பவர் நடிகர் சத்யராஜ். ரெண்டு மண்டையும் ஒண்ணு. அய்யோ, அவ்ளோ அறிவாளின்னு சொல்ல வந்தேங்க. சீக்கிரமே தோழி அப்டேட்ஸ் தங்கமணி அப்டேட்ஸாக வாழ்த்தி இந்தப் பிறந்த நாளில் எல்லா நலமும் பெற்றுச் சிறக்க வாழ்த்துகிறேன் நண்பா.

கார்க்கி “நீ என் நண்பேண்டா” - பெருமையா சொல்றேன்.

ம், அதே... ஸ்டார்ட் ம்யூஸிக், ஸ்டார்ட் கும்மி.

Friday, September 10, 2010

பழக்கத்தில் வந்தது


பதினைந்து நாட்கள் அரக்கப் பறக்க ஓடும் நகர வாழ்க்கையிலிருந்து விடுதலையாகப் பிறந்த மண்ணிற்குப் போய் வரும் வாய்ப்பு கிடைத்தது. ஒரே நாளில் போவதென முடிவாகி, பயணச் சீட்டு பெறப்பட்டு மூன்றாவது நாளில் ஆரம்பமான திடீர் பயணம். தனியாக ரயிலில் போவதும், வருவதுமெனத் தீர்மானமான போது அலைகள் பேரிரைச்சலுடன் ஆடி மகிழ்வதைப் போன்ற பேரானந்தம். வித்தியாசமான பயண நட்புகள், திகட்டத் திகட்ட வாசிப்பு, எதிர்பாரா நண்பர்களின் சந்திப்பு, பள்ளித் தோழிகளுடனான அரட்டை, தமிழ்த் திரைப்படங்கள், வளர்ந்துவிட்டதையுணர்த்தும் பொறுப்புகள், அம்மாவின் வத்தக்குழம்பு வாசம், வாசல் நிறைத்தப் பெருங்கோலமென அடித்துப் பெய்த மழையால் நிறைந்த குளமென மனம். சொல்லச் சொல்ல மாளாத நிறைவெனவிருந்தது இந்தப் பயண அனுபவம். அந்நிறைவிற்கு மற்றுமோர் காரணமாயிருந்த மதுரைப் பதிவர் சந்திப்பிற்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். பதிவ நண்பர்கள் கார்த்திகைப் பாண்டியன், ஸ்ரீ, மதுரை சரவணன், தருமி ஐயா மற்றும் வெள்ளமென கருத்துகளைப் பகிர்ந்த கவிஞர் நேசமித்திரனுக்கும் நன்றிகள். (கருத்தொத்த நட்புகள் சங்கமிக்கும் பொழுதை விட சுவாரஸ்யம் வேறென்ன இருக்க முடியும்..)


*************************************************************************************************************


கவலைப்பட ஏதுமில்லையெனினும் தேடித் தேடிக் கவலை கொள்ளப் பழகி விட்டிருக்கின்றனர் நம் குலப்பெண்கள். என் அம்மாவைப் பற்றிச் சொல்கிறேன். எல்லாம் நன்றாக போய்க் கொண்டிருக்கையில் காசு கொடுத்துக் கவலை வாங்க ஜோதிடரிடம் போனாள். கட்டம் போட்டு, கணக்குப் போட்டு முக்காலத்தையும் சொன்னவரைப் பார்த்து பத்மினி ரேஞ்சுக்கு கண்ணால் நன்றி சொல்லிப் பணமும் கொடுத்து வந்தாள். ஆனால் ஒரு விஷயம், ஜோதிடம் பொய்யென்றெண்ணியிருந்த எனக்கு, அதன் மேல் ஒரு நம்பிக்கையையும், ஆர்வத்தையும் கொண்டு வரச் செய்த ஜோதிடரை சந்தித்ததில் மகிழ்ச்சியே. ஜோதிடமும் அறிவியலே என்ற மனக்கணக்கு அதன் பால் ஒரு ஈர்ப்பை உருவாக்கியுள்ளது. அது குறித்து மேலும் அறிந்து கொள்ளும் ஆவலேற்பட்டுள்ளதால் தேடி வாசிக்கிறேன். (கண்டிப்பா போர்ட் மாட்டி விட்டு ஜாதகம் பார்க்கும் எண்ணமில்லை :) )


*************************************************************************************************************


க.சீ.சிவக்குமாரின் எழுத்தை அறிமுகம் செய்தார் நண்பரொருவர். அவர் எழுதிய கானல் தெருவை சென்னையில் கையிலெடுத்து நாக்பூரில் முடித்தேன். தொடர்ந்து வாசிக்க முடியாமல் அங்கங்கே நிறுத்திக் கொஞ்சம் யோசிக்க வைத்திருந்தார். கதைக்கரு, கதைக்களம் என்ற விஷயங்களெல்லாம் பெரிதாய் என்னைக் கவரவில்லையென்றாலும் மொழி நடையிலேயும், உரையாடல்களின் செழுமையிலேயுமே அதிகம் ஊறிப் போனேன். அடிக்கோடிட்டுக் காட்டும் படியான சில வரிகள் கட்டிப் போட்டதென்னவோ உண்மை தான். இதைப் போன்றதொரு வசியப்படுத்தும் வாசிப்பிற்குத் தயாராக யூமா.வாசுகியின் மஞ்சள் வெயில்ஐக் கையிலெடுத்துள்ளேன். முதல் ஐந்து பக்கங்களிலேயே தேனிலூறிய மாதுளை முத்தென இனிக்கிறது. முழுவதையும் சுவைத்து ருசியைப் பகிர்கிறேன். (வாசிப்பிற்கு வழிகாட்டும் நட்புகள் பலமெனக்கு)


*************************************************************************************************************


லஃபாங்கே பரிந்தே (Lafangey Parindey) சமீபத்தில் ரசித்துப் பார்த்த படம். எப்போதும் சிரித்தே கடத்திக் கொண்டிருந்த தீபிகாவிற்கு வித்தியாசமான, லோக்கல் மராத்திப் பெண் ரோல். அழகாக, அளவாக செய்திருக்கிறார். கதையும், காட்சிகளும் வித்தியாசம். நீல் நிதின் பெண்களை கிறங்கடிக்கும் உடல் கோப்புடன் படம் முழுக்க வலம் வருகிறார். கூடவே கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கலாம். ஒரு ஃபைட்டர், அவரால் பார்வையிழக்கும் பெண்ணின் நடனக் கனவு நிறைவேற உதவி செய்கிறார். இருவரும் மாறி மாறிப் பேசிக் கொள்ளும் உத்வேகம்மிக்க உரையாடல்கள் உற்சாகம். தொய்வில்லாத திரைக்கதை, தீபிகா மற்றும் நீல் நிதினின் நடன உழைப்பு, நண்பர்களின் குதூகலம், அனைத்துத் தரப்பினரையும் கவரும் கதை என பல ப்ளஸ் இருப்பினும், ஹீரோ தேர்வு, டிம்மான லைட்டிங்கென சில விஷயங்களில் அதிக கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கலாம். (லஃபாங்கே பரிந்தே - பெயருக்குப் பொருத்தம்)


*************************************************************************************************************

நா சப்புக் கொட்டும் சுவைக்கு வெளியில் சாப்பிட வேண்டுமா.. ஷெஃப் சஞ்சீவ் கபூரின் “The Yellow Chilly" முயற்சித்துப் பாருங்கள். ரம்மியமான சூழ்நிலை, மனதை மயக்கும் இசையுடன் வேறெந்த உணவகங்களிலும் பார்த்திராத வித்தியாச ஐட்டங்களுடன் மெனு கார்ட் உங்களை வரவேற்கும். தரமான, சுவையான, கொஞ்சம் விலையும் கூடுதலான மெனுக்கள் அதிகம். ஆனால் கொடுக்கும் பணத்திற்குக் குறைவில்லாமல் உணவை ரசிக்கவும், ருசிக்கவும் உத்திரவாதம் தரலாம். ஸ்டார்ட்டரே வயிறு நிறைக்குமளவு நல்ல அளவுடனும், ஆரோக்கியமாகவும் வழங்கப்படுவது சிறப்பு. (சென்னை, பெங்களூருவில் இன்னும் ஆரம்பிக்கப்படாத இவ்வுணவு விடுதிகள் ஆரம்பிக்கப்பட்டால் மற்ற உணவகங்களுக்குப் பெரும் போட்டியாக இருக்குமென்பதில் சந்தேகமில்லை)


*************************************************************************************************************


வாசிப்பில் கவர்ந்தது

பழக்கத்தில் வந்தது..

பள்ளியே எனக்காகக்

கைதட்டியபோது

ஃபெயிலாகி நின்றாள் என் தங்கை..

மக்கு என்றார்கள் அவளை!


மேலே படிக்க

நான் கெஞ்சி நின்ற போது

தவறிய பேப்பர் எழுத

முரண்டு பிடித்தாள்..

ஞான சூன்யம் என்றார்கள் அவளை!


அரசு வேலைக்காக

நான் தேர்வெழுதிய போது

அம்மாவுக்குப் போட்டியாக

வீட்டு வேலை செய்தாள்..

இது இவ்வளவு தான் என்றார்கள் அவளை!


போஸ்டிங் வாங்கியதும்

என்னைப்

பெண் கேட்டு வந்தார்கள்..

இதுவும் இருக்கே என

அவளைத் தான் முறைத்தார்கள்!


யாருமே எதிர்பார்க்கவில்லை..

ஓர் மெத்தப் படித்த இளைஞனோடு

அவளுக்குக் காதல் வருமென்று!


சந்தோஷமாய்க் கட்டிக் கொண்டு

ஃபாரின் பறந்தவள்

அடிக்கடி ஃபோன் செய்கிறாள்..

படித்து சேகரித்த ஆங்கிலத்தை

விழுங்கி செரிக்கிறது

பழக்கத்தில் வந்த ஆங்கிலம்!

- கோ. தமிழ்ச்செல்வி


*************************************************************************************************************


யோகி டைம்ஸ்

யோகியின் டைமிங் சென்ஸ் அதிகமாகி விட்டது. ஏதாவது சொன்னால், “எழுதறவ புருஷன் இவ்வளவாச்சும் பேச வேண்டாமா..” எனப் பாவமாய் பழியையும் என் மேலே போடுகிறார்.

20 நாட்கள் கழித்து வந்தவளைப் பக்கத்தில் அமர வைத்துக் கொண்டு John Grisham இன் The Pelican Brief இல் மூழ்கியிருந்தவரிடம், “ஏம்ப்பா இவ்ளோ நாள் கழிச்சு வந்திருக்கேன். என்கிட்டப் பேசலாம்ல” என்றேன்.

“ம், சொல்லு சொல்லு. எப்போவும் நீதானே பேசுவ. நான் கேட்டுத் தானே பழகியிருக்கேன். இப்போவும் சொல்லு. நான் கேக்கறேன்” என புத்தகத்தை மூடிப் பக்கம் வந்தவரிடம் ஆசையாய், “ஐ லவ் யூ” என்றேன். “இதைத் தான் 4 வருஷம் முன்னாடியே சொல்லியாச்சே. ஏன் அடிக்கடி ஜெராக்ஸ் எடுத்து உபயோகிச்சிட்டு இருக்க. வேற ஏதாச்சும் சொல்லேன்” என்கிறார் பாவமாக. ‘ஙே’ வாகிப் போனேன் நான். (வர வர அடிக்கடி இந்த மாதிரி பேக்கு ஆக்கறார் :( )

Monday, September 6, 2010

யாதுமாகி


“15 நாட்களுக்கு டெல்லியில் ட்ரெய்னிங்”
சலித்துக் கொண்டே உடைகளை அடுக்கிக் கொண்டிருந்தவளிடம்
“வெறும் 15 நாள் தானா..
அங்கேயே ஒரு பையனாப் பாத்து செட்டிலாகிடேன்.
நான் நிம்மதியாயிருப்பேன்”
என்றாள் அறைத் தோழி.
“ச்சீ, மீசையில்லாத பையனை சைட்டடிக்க கூட மாட்டேன்”
டெல்லி வந்தாயிற்று.

“இந்த சௌத் இண்டியன்ஸ் எப்போவுமே
குளிக்காதவங்க மாதிரியே இருக்காங்களே ஏன்..”
அப்பாவியாய் அவர் கேட்கையில்
கோபத்தை மீறி சிரிப்பும் வந்தது.

வாழ்வின் சுழலில், சூழலில் காதல் கொண்டு
மனவயப்பட்ட காதல் மணவறை சென்று
இன்றோடு இரு வருடங்கள்
இனிதாய் நிறைவடைகின்றன.


அதிகாலைத் துயிலெழ விருப்பம் எனக்கு.
9 மணி அலாரத்தை 10 முறை அணைத்து எழுகிறாய் நீ.

காலையில் பழங்கள் மட்டுமே உணவாக நான்.
“பரோட்டா எங்கே?” - இது நீ.

சுஜாதா, வண்ணதாசன், லா.சா.ரா.,
பெரியார், வைரமுத்து, பாஸ்கர் சக்தி,
தமிழினி, கல்குதிரை, ஆனந்த விகடன்
என எதாயிருந்தாலும் குறைந்தது
ஒரு மாதம் வாசிக்கிறேன்.

சிட்னி ஷெல்டன், ஜான் க்ரிஷம்,
டேன் ப்ரௌன், ஜெஃப்ரி ஆர்சர்,
அகதா க்ரிஸ்டி, ஸ்டீக் லார்சன் என
யாவரின் எழுத்தையும் அதிகப்படியாக
இரண்டு நாட்களில் வாசித்து முடிக்கிறாய்.

எப்போதும் பாடல்களை மட்டுமே ரசிக்கிறேன் நான்.
பாடல்கள் எதுக்கு ஒரு படத்திலென
திரைப்படங்களை மட்டுமே விரும்புகிறாய் நீ.

என் உடைகளை நானே தீர்மானிக்கிறேன்.
உன் உடைகளை ஒரு போதும் நீ தீர்மானிப்பதில்லை.

“ரொம்ப நாளாச்சு. இன்னிக்கு அடை பண்ணட்டுமா?” கேட்கிறேன்.
“குல்சா பண்ணியும் ரொம்ப நாளாச்சுல்ல?” பதிலளிக்கிறாய்.

மனிதர்களை மறந்து வேலையில் மூழ்கிப் போகிறாய்.
எல்லா வேலைகளிலும் மனிதர்களைச் சுற்றியே வாழ்கிறேன் நான்.

வெகேஷனுக்கு மனாலி போகலாமென்கிறாய்.
அம்மா வீட்டிற்குப் போகலாமென்கிறேன் நான்.

செடிகளைத் தடவித் தழுவி வளர்க்கிறேன் நான்.
செயற்கைப் பூக்களை வீடெங்கும் வைத்து அழகு பார்க்கிறாய் நீ.

பெட் ரூமுக்கு பெயிண்ட்
பிங்க் கலர்?
ம், சன்செட் ஆரஞ்ச்?
இருவரின் எண்ணமும் வண்ணங்களாக.

“காஃபி தரட்டுமாப்பா”
“டீ கொடேண்டா”

ஹிந்தி படம் போவோம்ங்க.
ஆங்கிலப் படம் போகலாமே.

ஷாஹித் கபூர் அழகென்கையில்
ஆமோதித்து செல்லமாய் முறைக்கிறாய்.
சாலையில் அழகாய்ப் பெண் போனால்
உன்னை அழைத்துக் காண்பிப்பதை
விரும்புகிறேன் நான்.

“ஏதாச்சும் எழுதட்டுமா...”
“ என் கூட கொஞ்சம் நேரம் உட்காறேன்”

வெவ்வேறு திசைகள்,
இரு வேறு எண்ணங்கள்,
எதிரெதிர் ரசனைகள்,
வித்தியாச வண்ணங்கள்...
எல்லாமே ஒருமிக்கிறது
காதலென்னும் புள்ளியில்.

எந்த ஊடலுமின்றி
மனக்கசப்புமின்றி
அழகாய்
அமைதியாய்
சீராய்
ரசனையாய் பயணிக்கிறோம்
வாழ்க்கைப் படகில்.
உன் ரசனைகளை
உன்னுடன் சேர்த்து
நான் ரசித்தவாறும்
என் தினசரியை
எப்போதும் நீ பாராட்டியவாறும்.

வாழ்க்கை வரமெனக்கு.