Monday, March 30, 2009

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அன்புக் காதலா,

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.மூன்று வருடங்களுக்கு முன்பு இதே நாள், நான் உன்னுடன் கொண்டாடிய உன் பிறந்த நாள். உன்னுடன் நான் இருந்த முதல் மற்றும் கடைசிப் பிறந்த நாள். நினைக்கையில் லேசாக வலிக்கிறது. என் விடுதியின் visitor's room இல் உன் பிறந்த நாளை என் தோழிகளுடன் கொண்டாடினோம், நினைவிருக்கிறதா.... இன்றும் உன் பிறந்த நாளை நீ உன் மனைவியுடன் மகிழ்ச்சியாய்க் கொண்டாடி இருப்பாய்.


நீ முதல் முறை என்னிடம் காதலை சொன்ன போது, அதை ஏற்கவா, தவிர்க்கவா என நான் குழம்பியதால், நேரடியாக பெற்றோர்களிடம் சம்மதம் வாங்கி, பின் காதலிக்க ஆரம்பித்தவர்கள் நாம். பெற்றோர் சம்மதித்து காதல் செய்த ஜோடி நாமாகத் தான் இருந்திருக்க முடியும்.


எப்படி மறக்க முடியும் அந்த நாட்களை. தினமும் மாலையில் ஒரு சிறிய சந்திப்பு, உடன் உணவருந்திய தருணங்கள், எப்போதாவது சென்ற திரைப்படங்கள், சேர்ந்து வணங்கிய கோவில்கள், இன்னும்....


ஒரு முறை நான் கல்லூரியில் உடல் நிலை சரியில்லாமல் மயங்கி விழ, என்னை மருத்துவமனையில் சேர்த்த என் தோழிகள், முதலில் அழைத்தது உன்னைத் தான். ஒரு வித படபடப்போடு வந்த நீ, எனக்கு ஆறுதலாய் தலை கோதி விட்டு, பின் என் அம்மாவை அழைத்து தெரிவித்தாய். அம்மா, கொஞ்சமும் பதற்றப்படவில்லை, நீ இருந்த தைரியத்தில். என் உடலும் சரியானது, உன் கவனிப்பில்.


யாரிடமும் என்னைத் தோழி என்றோ, தங்கை என்றோ சொன்னதில்லை நீ. எப்போதும், "நான் கட்டிக்கப் போறவ" என்று தானே சொன்னாய். பின் ஏன் இப்படி பாதியில் விட்டுச் சென்றாய்.

ஒரு முறை நாம் இருவரும் கோவிலுக்கு சென்ற போது மறித்த காவலர் யாரெனக் கேட்க, அப்போதும் இதையே சொல்லி, உன் அப்பாவுக்கு போன் செய்து பேச வைத்தது நினைவிருக்கிறதா.... காதலர் தினத்தன்று நீயே சமைத்து எனக்கு எடுத்து வந்திருந்தாய். அதை விட வேறு எந்த பரிசும் எனக்கு பெரிசாய் தெரியவில்லை.


ஒரு நாள் நான் உன்னை பார்க்க வேண்டும் என சொல்ல, இரவு எட்டு மணிக்கு கிளம்பி என்னை வந்து பார்த்து சென்றாய். என் கைபேசியில் எப்போதும் உன் குரல் கேட்டுக்கொண்டிருந்த நாட்கள் அவை. இதனாலே எனக்கு தோழிகள் மிகக் குறைவு. எனது நேரம் உனக்கே போதுமானதாய் இல்லை.


உன் நண்பர்கள் எனக்கு நண்பர்களாகவும், சகோதரர்களாகவும் இருந்து எப்போது என்ன உதவி வேண்டுமானாலும் செய்தவர்கள். இப்போதும், உன் நினைவு வந்தால் புலம்ப உன் நண்பர் தான் உள்ளார்.


நீ டெல்லி சென்று எனக்காக வாங்கி வந்த மிக்கி மவுஸ் தான் என் Best Friend. அதை விட்டு, நான் ஒரு நாளும் தூங்கியதில்லை. எப்போதாவது நமக்குள் ஏற்படும் சிறு சண்டைகளின் போது, நான் அழுதது அதனிடம் தான். நான் வெளியூர் செல்லும் போது உனக்கென்று ஏதாவது வாங்கி வராமல் இருந்ததில்லை. சொல்லப் போனால், உனக்கு மட்டுமே ஏதாவது வாங்கி வருவேன். நீயும் தான். பரிசுப் பொருட்கள் கொடுப்பது நமக்குப் பிடிக்காதென்றாலும், அடிக்கடி ஏதாவது வாங்கிக் கொடுத்து, "எப்போதாவது நான் உனக்கு இது வாங்கித் தரவில்லை என்ற எண்ணம் உனக்கு வரக் கூடாது" என்றாய்.


என் பிறந்த நாள் பரிசாய் நீ தந்த பச்சைப் புடவை, இன்னும் பத்திரமாய் இருக்கிறது, என் வீட்டுப் பணிப்பெண் அலமாரியில்.


உனக்கென்று நான் எழுதிய டைரி இப்போது ஏதாவது குப்பையில் உள்ளதோ, அல்லது மக்கி மரித்து விட்டதோ.... நான் உனக்கு கொடுத்த பொருட்களை நீ என்ன செய்தாய் எனத் தெரியவில்லை. ஆனால், நீ எனக்கு கொடுத்தவை மிக பத்திரமாக ஒளித்து வைக்கப்பட்டுள்ளன. என்ன செய்ய, உன்னை காதலித்ததைப் போலவே, என் கணவரையும் காதலிக்க வேண்டுமே. நீயும் அதே காதலுடன் உன் மனைவியை நேசிப்பாய் என எனக்குத் தெரியும். ஏனெனில் நீ எப்போதும் பெண்களை மதிப்பவன்.


நாம் பிரிந்தத்தின் காரணமாய், நம் பெற்றோரை மிகக் காயப்படுத்தி விட்டோம். உன்னை மறக்க வேண்டும் என நினைக்கும் ஒவ்வொரு முறையும் உன் நினைவு அநியாயத்திற்கு அதிகமாகிறது. என்றாவது ஒரு நாள் நான் உன்னை நினைக்காதிருப்பேனானால், அது தான் என் சாதனை. ஆனால், இன்று வரை முடியவில்லை.


நீயும் நம் நினைவுகளை சேர்த்து வைத்துக் கொள். சில காலங்களுக்குப் பிறகு, உன் கழுத்தைக் கட்டிக் கொண்டு, "ஏதாச்சும் கதை சொல்லு தாத்தா" என வரும் உன் பேரக் குழந்தைகளுக்கு சொல்ல.

Thursday, March 19, 2009

ஏதாவது எழுதணுமே....

வேலைப்பளு கழுத்தை நெரிக்கிறது. அம்மாவுடன் போனில் சொந்தக் கதை பேசக் கூட நேரமில்லாமல் இருந்த போது, நான்கு நாட்கள் விடுமுறை வரமாய்க் கிடைத்தது. திருமணத்திற்குப் பின் என் வீட்டிற்கு நான் முதல் முறை செல்வதால் சொல்லிலடங்கா மகிழ்ச்சி.


சிவராத்திரி மற்றும் ஹோலி நாட்களில் வேலை செய்ததன் காரணமாக இருந்த இரண்டு நாட்கள் விடுமுறை, ஞாயிற்றுக் கிழமை மற்றும் ஒரு நாள் அதிகமாக விடுமுறை எடுத்து ஊருக்குப் போனால், அம்மா, வீட்டுக்கு மாப்பிள்ளை வந்த குஷியில் என்னைக் கண்டு கொள்ளவே இல்லை. என்னவரும் என்னைக் கண்டு கொள்வதாக தெரியவில்லை. பாதி நேரம் அம்மாவின் இட்லியைப் பாராட்டியும், மீதி நேரம் டிஷ் டிவியில் ஹிந்தி சேனல்களைப் பார்த்தும் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தார். பிறகு பொழுது போகாமல் தங்கையுடனும், அப்பாவுடனும் சண்டை போட்டு விளையாடிக் கொண்டிருந்தேன். வீட்டை விட்டுக் கிளம்பும் போது அம்மாவுக்கு அழுகை வந்துவிட்டது. வந்ததில இருந்து பேச நேரமில்லாமல், மாப்பிள்ளையின் கொஞ்சும் தமிழில் மூழ்கி இருந்து விட்டு இப்போ என்ன அழுகை என்று தோன்ற, நான் அழவில்லை. வீட்டு முக்கைத் தாண்டியதும் என்னை அறியாமல், கண்கள் கலங்க அம்மாவுக்கு போன் செய்தேன். "என்னடா, மாப்பிள்ளை எப்படி இருக்கார்" என அம்மா கேட்க, "ரெண்டு நிமிஷத்துல மாப்பிள்ளைக்கு என்ன ஆகிடப் போகுது" என கடுப்பாகி போனை வைத்தேன். (
வர வர யாருமே நம்மள மதிக்க மாடேங்குராய்ங்க)


****************************************************************************************************


மார்ச் மாதம் வந்தாலே வரி செலுத்துவது தான் கொடுமையை உள்ளது, எல்லோருக்கும். நான் வேலைக்கு வந்து மூணாவது வருஷம் இது. முதல் வருஷம் கொஞ்சமே கொஞ்சமாய் சம்பளம் வாங்கியதால், வரி என்ற வார்த்தை கூட என் காதில் விழவில்லை. இரண்டாவது வருடம், சம்பளம் உயர்வானதால், சில பல insurance களை எடுத்து வரியை சேமிக்க முடிந்தது. இப்போது இன்னும் அதிகமாகி விட்டதால், வேறு எதிலாவது invest செய்ய வேண்டும். இல்லையென்றால், சில ஆயிரங்களை வரியாகக் கட்ட வேண்டும். சம்பளமே வராமல் recession போகும் போது, எங்கிருந்து சேமிப்பது. வேறு வழி இல்லாமல், வரி கட்டித் தான் ஆக வேண்டும். (சம்பள உயர்வு கொடுத்தானே, சம்பளம் குடுக்கணும்னு தோணுச்சா...)


****************************************************************************************************


எல்லோரும் ஏர்டெல் சிறுவனைப் புகழ்ந்து கொண்டிருக்க, எனக்கு என்னவோ ப்ரூ விளம்பரம் தான் பேவரிட். அலுத்து சலுத்து வரும் மனைவிக்கு, கால் பிடித்து விடும் கணவனைப் பார்க்க அழகாய் இருக்கிறது. நானும் என்னவரும் சண்டை போட்டிருந்தால், இந்த விளம்பரம் வந்தால் சிரித்து, சமாதானம் ஆகி விடுவோம். நல்ல ரசிக்கக் கூடிய விளம்பரம். (என்ன செய்ய, டிவியில் தான் ரசிக்க முடியும், நேரில் எந்த கணவன் இப்படி செய்கிறார்)


****************************************************************************************************


போன டிசம்பர் 14 ஆம் தேதி, டில்லியில், தமிழ் நண்பர்கள் கூட்டம் ஒன்றை ஆனந்த் ஏற்பாடு செய்திருந்தார். இண்டியா கேட் கார்டனில் 40 நண்பர்கள் சந்தித்து, பேசி, களித்து, ஒரு சிறிய உதவியாய் ஒரு பார்வையற்றோர் பள்ளிக்கு நிதி வழங்கி மகிழ்ந்தோம். தமிழகத்தின் பல சிற்றூர் மற்றும் நகர மக்களை டெல்லியில் பார்த்து பேசியது அனைவருக்கும் மகிழ்ச்சியே. எல்லோரும் டெல்லியில் வாழ்வதால், அன்றாட அவசர வாழ்க்கையின் நடுவே ஒரு 'hi' scrap மட்டுமே செய்து கொள்ள முடிகிறது. தற்போது மறுபடியும் ஒரு சந்திப்பு இந்த மார்ச் அல்லது ஏப்ரலில் இருக்கலாம். நல்ல, பல ஊர்களின் தமிழைக் கேட்க மற்றுமோர் வாய்ப்பு. (தமிழ்நாட்டுல இருந்தவரைக்கும் இங்கிலீஷ்ல பீட்டர் விட்டுட்டு, டெல்லி வந்ததுக்கப்புறம் தமிழ்ல பேசுறதக் கேட்குறதே இனிமையா இருக்கு)