Friday, June 11, 2010

சிறிய வீட்டை அழகாக்க..



சிறு வீடுகளில் வாழ்வதென்பது சிக்கலான விஷயமே அல்ல. ஏனெனில் அவற்றைப் பராமரிக்கும் செலவும்,நேரமும் குறைவு. ஆனால் வித விதமான அலங்காரப் பொருட்களையும், இடத்தை அடைக்கும் ஃபர்னிச்சர்களையும் போட்டு அலங்கரிப்பதென்பது இயலாத ஒன்று. மேலும் இருவருமே வேலைக்குச் செல்லும் வீடுகளில் வீட்டை அழகாக்க ஒவ்வொரு முறையும் தனி நேரம் ஒதுக்குதல் என்பதும் முடியாத விஷயம். குறைந்த நேரத்தில், எளிய முறையில், குறைந்த பொருட்செலவில் உங்கள் சிறிய வீட்டை அழகாக்குவோம் வாருங்கள்.


வழியை அடைக்காதீர்கள்



வீட்டில் நுழைந்தவுடன் உங்கள் சோஃபா மற்றும் பிற ஃபர்னிச்சர்கள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். நுழைந்ததும் ஆடம்பர, விலையுயர்ந்த பொருட்கள் இருக்க வேண்டும் என நீங்கள் நினைத்தாலும் அவை உங்கள் வழியை அடைக்காமலும், தேவையான நடக்கும் வழிக்கு இடையூறு இல்லாமலும் இருக்கட்டும். அமருவதற்கெனவும் பேசுவதற்கெனவும் தனி அறைகள் உள்ள பட்சத்தில் சோஃபா அங்கிருத்தல் நலம். வரவேற்பறைகளில் பொருட்களைக் குறைப்பது அதன் இடத்தை விசாலமாகக் காட்ட உதவும்.


அலங்காரப் படங்களைக் குறையுங்கள்

பெரிய வீடுகளில் அல்லது விசாலமான இடங்களில் இருக்கும் அலங்காரப் பொருட்கள், படங்களை வாங்கி வந்து வீட்டை நிரப்பாதீர்கள். இந்தப் படங்களால் உங்கள் வீட்டு சுவர் முழுவதும் அடைக்கப்படும் போது உங்கள் இருப்பிடம் இன்னும் சிறியதாகத் தெரியும். தெய்வங்களின் படங்கள் பூஜையறையில் மட்டும் இருக்கட்டும். பல படங்களையும், அலங்காரப் பொருட்களையும் மாட்டும் போது வீடு அடைந்து போய் சுத்தமில்லாதது போன்றும், வீட்டில் இடமில்லாததை எடுத்துக் காட்டும் விதமாகவும் அமைந்து விடும்.


தகுந்த ஃபர்னிச்சர்களைத் தேர்ந்தெடுங்கள்



அழகான, சிறிய, உபயோகமான ஸ்மார்ட் ஃபர்னிச்சர்களைத் தேர்ந்தெடுங்கள். இதனால் அதை வைக்கும் இடம் குறைக்கப்படுவதுடன் பயனும் இரட்டிப்பாகும். உதாரணமாக டேபிளில் ட்ராயர் மற்றும் அடுக்குகள் உள்ள மாதிரி வாங்குங்கள். செண்டர் டேபிளில் கீழும் அடுக்குகள் இருக்குமாறு தேர்ந்தெடுத்தீர்களானால் உங்கள் தினசரிகள் அதில் வரும். மல்ட்டி ஸ்டோரேஜ் வசதி (multi storage facility) கொண்ட ஃபர்னிச்சர்களைத் தேர்ந்தெடுங்கள். மேலும் உபயோகமில்லாத நேரங்களில் மடித்து வைக்கக்கூடிய ஃபர்னிச்சர்களை உபயோகிப்பதால் இடம் அடையாமல் இருக்கும்.


கண்ணாடியின் மூலம் இடத்தை விரிவுபடுத்தலாம்.

வித்தியாசமான ஐடியாவாகத் தெரியலாம். ஆனால், உங்கள் வீட்டின் அளவை இது அதிகப்படுத்திக் காட்டுவது கண்டு மகிழ்வீர்கள். வரவேற்பறையின் இரு எதிரெதிர்ப் பக்கங்களில் கண்ணாடிகள் வையுங்கள். இந்தக் கண்ணாடிகள் அளவில் பெரிதாக இருத்தல் நல்லது. சுவர் சிறிதாக இருக்கும் பட்சத்தில் முழு சுவரையும் மறைக்கும் வகையில் கண்ணாடியால் அலங்கரிக்கலாம். இந்தக் கண்ணாடிகள் தரையிலிருந்து நான்கடி உயரத்திற்கும் மொத்த அகலம் இரண்டடி கொண்டதாகவும் நீளவாக்கில் தொடர்ந்து சுவர் முழுக்க இருக்கும்படியும் அமைக்கலாம். இதனால் உங்கள் வீடு பெரிதாகக் காட்டப்படுவது கண்டு நிச்சயம் மகிழ்வீர்கள்.


வண்ணங்களில் விளையாடுங்கள்



உங்கள் சுவர்களுக்கு பளிச்சென்ற, கண் கவரும் நிறங்களைத் தேர்ந்தெடுங்கள். அத்துடன் சுவரின் நிறம் உங்கள் ஃபர்னிச்சர், கர்ட்டைன், தரை விரிப்பு மற்றும் கால் மிதியடிகள் இவற்றுடன் ஒத்துப் போகும் வகையில் இருப்பது உங்கள் வீட்டை சிறியதாகக் காட்டாதிருக்கும். அதற்காக அனைத்தும் ஒரே நிறத்தில் இருக்க வேண்டுமென்பதில்லை. ஆனால், ஒரே குடும்ப நிறத்தில் இருந்தால் நல்லது. இந்த ஒரு வண்ணக் குறைபாட்டை சுவர்க் கடிகாரம், மலர் ஜாடி, டேபிள் மேட்டுகள் போன்ற சிறு பொருட்களில் நிற வித்தியாசத்தைக் கொடுத்து மாற்றலாம். நினைவில் கொள்ளுங்கள், வண்ணங்களுக்கு உங்கள் மனநிலையை மாற்றும் சக்தி உண்டு.


லைட்டிங்கில் அடுத்த கவனம்

வீடு எவ்வளவு சிறியதாக இருந்தாலும் ஆங்காங்கே இடைவெளிகளில் சிறிய லைட்டுகளை வடிவமைப்பதன் மூலம் வித்தியாச வெளிச்சம் கொடுத்து அழகாக்கலாம். பெரும்பாலும் வாசிக்கும் / படிக்கும் அறையைத் தவிர மற்ற அறைகளில் டியூப் லைட்டுகளை உபயோகிப்பதைத் தவிர்க்கலாம். இது உங்களின் அலர்ட்னஸைக் குறைத்து, உங்களை ரிலாக்ஸாக வைத்திருக்கும். வண்ண விளக்குகள், வீட்டில் மேலும் கீழுமாக வடிவமைக்கப்பட்ட விளக்குகள் இவற்றின் மூலம் உங்கள் வீடு நிச்சயம் மாறுபட்ட, சற்றே அகலமான தோற்றத்தைத் தரும்.



இரவு நேரத்திற்கு ஹாலில் ஒரு சிறிய மின் விளக்குடன், அரோமா மெழுகுவர்த்தியை உபயோகிக்கலாம். இது நண்பர்கள், உறவினர்களுடன் பேச நல்ல, ரம்மியமான சூழ்நிலையைக் கொடுப்பதுடன் உங்கள் மின்சாரத்தையும் சிக்கனப்படுத்தும். ஆனால், இந்த மெழுகுவர்த்தி நாளிதழ், கர்ட்டன்கள், சோஃபா ஆகியவற்றின் பக்கம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். லைட்டுகள், மெழுகுவர்த்திக்குப் பதிலாக லேம்ப்களையும் பயன்படுத்தலாம்.


சமையலறை செட்டிங்



இப்போது அதிகமான வீடுகளில் திறந்த சமயலறைகளே உபயோகப்படுத்தப்படுகின்றன. இதனால் உங்கள் வரவேற்பறையில் அமர்ந்திருப்பவருக்கு சமையல் வாசனையிலிருந்து கமறல் வரை போகும். எனவே அவசியம் எக்ஸ்ஹாஸ்ட் ஃபேன்களை உபயோகியுங்கள். சமையலறையில் பொருட்கள் வெளியில் இறைந்திருக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். பொருட்களுக்கு ஏற்ற வகையில் நல்ல ஸ்டோரேஜ்களை உபயோகியுங்கள்.


சிறிய வீடுகளில் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்



* விலை குறைவாகக் கிடைக்கிறது என்பதற்காக அழகு சாதனப் பொருட்களால் வீட்டை நிரப்பாதீர்கள்.

* பெரிய படங்கள் மாட்டுவதைத் தவிருங்கள். சிறு பொருட்களைக் கொண்டும் அழகாக்கலாம்.

* ஒரு அறையின் மணம் மறு அறையில் பரவாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

* பளிச்சென்ற நிறத்தில் சுவர் வண்ணங்கள் இருக்கட்டும். ஆனால் கண்களைப் பறிக்கும் நிறத்திலல்ல.

* பொருட்களின் தேவையையும், வீட்டின் இடத்தையும் கருத்தில் கொண்டு பொருட்களின் இடத்தைத் தீர்மானியுங்கள்.

* மாதமொரு முறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை சிறிய அளவில் வீட்டில் மாற்றங்கள் செய்யுங்கள். உங்கள் சோஃபாக்களின் திசையை மாற்றியோ டி.வியின் இடத்தை மாற்றியோ முயற்சியுங்கள். இது உங்கள் வீட்டிற்குப் புது தோற்றத்தைத் தரும்.

* இயற்கை ஒளி அதிகம் உள்ளே வருமாறு பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் திரைகளையும் நெட் துணிகளில் வடிவமைக்கலாம்.

* ஜன்னல், டி.வி ஸ்டாண்ட், டெலிஃபோன் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில் வேண்டாத பொருட்களை வைத்து அலங்கோலமாக்காதீர்கள்.

* குழந்தைகளின் பாடப் புத்தகங்களை மற்றும் விளையாட்டுப் பொருட்களை அந்தந்த இடங்களில் வைக்கக் கற்றுக் கொடுங்கள்.

* ஒவ்வொரு பொருளுக்குமான இடத்தை முடிவு செய்து விட்டால் எதுவும் வெளியில் இல்லாமல் வீடு சுத்தமாகத் தெரியும். சுத்தமான வீடு நிச்சயம் பெரிதாகத் தெரியும்.

* வீட்டில் நேரமிருந்தால் உங்கள் கையினாலே பொருட்கள் செய்து வீட்டை அழகாக்குங்கள். நாம் செய்யும் பொருளெனும் போது அது அழகாகவும், அது வைக்கும் இடம் சுத்தமாகவும் இருக்க வேண்டுமெனும் எண்ணம் அவசியம் வரும்.


உங்கள் வீட்டை ஜொலிக்க வைக்கும் நட்சத்திரமாக நீங்கள் மின்ன வாழ்த்துகள்.


நன்றி தினமணி-மகளிர்மணி.

35 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

எல்லாம் ஹை கிளாஸ் ஃபேமிலிக்கான அட்வைஸா இருக்கு...

ஒரு டியூப் லைட் ஒரு குண்டு பல்ப் போட்ருக்க ஃபேமிலில்லாம் இன்னா செய்வாங்களாம்?

விக்கினேசை வன்மையாக கண்டிக்கிறேன் அடுத்த இடுகை மிடில் கிளாஸ் ஃபேமிலிக்கு என்று ஒதுக்கவும்...

CS. Mohan Kumar said...

தின மணியில் பதிவு வந்ததற்கு வாழ்த்துக்கள். நல்ல கட்டுரை. நன்றி யோகி :))

வெங்கட் நாகராஜ் said...

தேவையான, உபயோகமுள்ள நல்ல தகவல்கள். பகிர்வுக்கு நன்றி விக்னேஷ்வரி.

எல் கே said...

ithukellam muthalla oru veedu vaanganum

Priya said...

மிக மிக அருமையான டிப்ஸ். இதில் நான் அதிகம் விரும்பி செய்வது கண்ணாடிகள் கொண்டு அலங்கரிப்பது. உண்மையிலேயே இது இடத்தை விரிவு படுத்தி காட்டுவதோடு மட்டுமல்லாமல் அழகாகவும் தோன்றும்.

//வீட்டில் நேரமிருந்தால் உங்கள் கையினாலே பொருட்கள் செய்து வீட்டை அழகாக்குங்கள். நாம் செய்யும் பொருளெனும் போது அது அழகாகவும், அது வைக்கும் இடம் சுத்தமாகவும் இருக்க வேண்டுமெனும் எண்ணம் அவசியம் வரும்.//.... க‌ரெக்டு!

ராமலக்ஷ்மி said...

நல்ல பதிவு. தினமணியில் முன்னரே வாசித்திருந்தேன். வாழ்த்துக்கள்.

பனித்துளி சங்கர் said...

எங்க கிராமத்தில் இருக்கும் குடிசைகளில் எல்லாம் இன்னும் பல வீடுகளில் சிமிலி விளக்குதான் வெளிச்சம் தருகிறது . அதுபோன்ற குடிசைகளை எப்படி அழகு படுத்துவது என்று ஏதேனும் குறிப்புகள் தெரிந்தால் கொடுக்கவும் . புகைப்படங்களும் அதற்கு தகுந்த உங்களின் விளக்கங்களும் முகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி !

ஜெய்லானி said...

நல்ல டிப்ஸ்..!!

மாதேவி said...

நல்ல பகிர்வு.

கனிமொழி said...

நல்ல தகவல்கள். பகிர்வுக்கு நன்றி விக்னேஷ்வரி.
:)

Menaga Sathia said...

நல்ல பதிவு விக்கி!!

Vidhya Chandrasekaran said...

எல்லாம் சரிதான். காலி பண்ணிட்டு போகும்போது ஹவுஸ் ஓனர் அட்வான்ஸ்ல கைய வச்சிட்டா என்ன பண்றது?

ISR Selvakumar said...

வீட்டை அழகாக வைத்திருப்பது ஒரு கலை. இந்தக் கட்டுரை அதற்க்கான நல்ல டிப்ஸ்!

M.S.R. கோபிநாத் said...

நல்ல பதிவு விக்னேஷ்வரி. உபயோகமுள்ள பதிவும் கூட.

Anonymous said...

கடைசிவரை நீங்க எழுதினதுன்னே நினைச்சேன்.. பல்பு : நன்றி தினமணியா. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

Raghu said...

தின‌ம‌ணி ம‌க‌ளிர்ம‌ணியில் வ‌ந்த‌த‌ற்கு வாழ்த்துக‌ள் அம்ம‌ணி

த‌லைப்பில் 'சின்ன‌' என்ப‌த‌ற்கு ப‌தில் 'சிறிய‌' என்று ப‌ய‌ன்ப‌டுத்திய‌ புத்திசாலித்த‌ன‌ம் பாராட்ட‌த்த‌க்க‌து ;))

கண்ணகி said...

நல்ல பதிவு....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல பயனுள்ள விசயங்கள் ..

அன்புடன் நான் said...

நல்ல தகவல்... அதுபோல வீடு உள்ளவங்களுக்கு.

Unknown said...

இன்றைய டாப் ஐம்பது வலை WWW.SINHACITY.COM பதிவுகளை இல் வாசியுங்கள்

Prasanna said...

Useful Information.. Thanks :)

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

அடுத்த வருடம் யூஸ் ஆகும்

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

அடுத்த வருடம் யூஸ் ஆகும்

ஷர்புதீன் said...

its may be use around 2015AD
:)

பா.ராஜாராம் said...

// மாதமொரு முறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை சிறிய அளவில் வீட்டில் மாற்றங்கள் செய்யுங்கள். உங்கள் சோஃபாக்களின் திசையை மாற்றியோ டி.வியின் இடத்தை மாற்றியோ முயற்சியுங்கள். இது உங்கள் வீட்டிற்குப் புது தோற்றத்தைத் தரும்.//

வருஷக் கணக்கா ஒரு பீரோவை நகர்த்த முடியல. செம்ம வெயிட். ஜன்னல அடைச்சுகிட்டு காத்து வேற வரல. பீரோ பேரு லதா. என்ன செய்யலாம் மருமகளே? :-)

இதைவிடுங்க, intresting article boss!

RAMYA said...

நல்ல உபயோகமான டிப்ஸ் விக்கி!

தினமணியிலே வந்துச்சா வாழ்த்துக்கள் பா:)

படங்களும் அதற்கு ஏற்றார் போல உங்கள் விளக்கமும் அபாரம்.

எல்லாவற்றிற்கும் வாழ்த்துக்கள் விக்கி.

சாந்தி மாரியப்பன் said...

//மாதமொரு முறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை சிறிய அளவில் வீட்டில் மாற்றங்கள் செய்யுங்கள். உங்கள் சோஃபாக்களின் திசையை மாற்றியோ டி.வியின் இடத்தை மாற்றியோ முயற்சியுங்கள். இது உங்கள் வீட்டிற்குப் புது தோற்றத்தைத் தரும்//

இதை நானும் வழக்கமா செய்யறதுண்டு. ஒரே வீட்டில் இருந்து போரடிக்கும் உணர்வையும் இது குறைக்கும். மற்ற டிப்சும் அருமை.

Thamira said...

ப்ரொஃபஷனல் குறிப்புகள். நன்றி, வாழ்த்துகள்.!

தராசு said...

சரிதான், இனி வீட்டை அழகாக்கறேன்னு வேற ஒரு தனி செலவா.....

ஆரம்பிச்சுட்டாங்கைய்யா....

விக்னேஷ்வரி said...

அட, வசந்து இது எல்லாமே மிடில்க்ளாசுக்கும் பொருந்தும். குண்டு பல்ப்லேயே பல வகைகள் இருக்கு. விலை அதிகமில்லை. முயற்சித்துப் பாருங்கள்.

நன்றி மோகன். யோகிக்கு நன்றி?

நன்றி வெங்கட்.

தங்கியிருக்குற வீட்லேயும் செய்யலாம் LK.

வாங்க ப்ரியா. நன்றி.

ஓ, தாராளமா குடுத்திடலாம் சங்கர். நன்றி.

நன்றி ராமலக்ஷ்மி.

நன்றி ஜெய்லானி.

நன்றி மாதேவி.

வாங்க கனிமொழி. நன்றி.

விக்னேஷ்வரி said...

நன்றி மேனகா.

வித்யா ஏஏஏஏஏஏன்ன்ன்ன்ன்?

நன்றி செல்வக் குமார்.

நன்றி கோபிநாத்.

விஜி..... ஏன் நீங்களும் இப்படி?

நன்றி ரகு
நடத்துங்க சார்.

நன்றி கண்ணகி.

நன்றி முத்துலெட்சுமி.

வாங்க கருணாகரசு. நன்றி.

நன்றி சித்ரா.

என்னுடையதும் அதில் ஒன்றாய் இருப்பதற்கு நன்றி sinhacity.

விக்னேஷ்வரி said...

நன்றி பிரசன்னா.

ம், உபயோகப்படட்டும் பாலகுமாரன். நன்றி.

நன்றி ஷர்ஃபுதீன்.

மாம்ஸ், இருங்க அத்தைக்கு ஃபோன் போடுறேன். நன்றி பா.ரா. மாம்ஸ்.

நன்றி ரம்ஸ்.

நன்றி அமைதிச்சாரல்.

நன்றி ஆதி.

தராசு, இருங்க. உங்க வீட்டம்மணிக்கு மட்டும் தனி டிப்ஸ் ஸ்பெஷலா அனுப்பறேன்.

அன்புடன் மலிக்கா said...

//வீட்டில் நேரமிருந்தால் உங்கள் கையினாலே பொருட்கள் செய்து வீட்டை அழகாக்குங்கள். நாம் செய்யும் பொருளெனும் போது அது அழகாகவும், அது வைக்கும் இடம் சுத்தமாகவும் இருக்க வேண்டுமெனும் எண்ணம் அவசியம் வரும்.//....

க‌ரெக்ட்

இதை தான் நானும் செய்கிறேன். நல்ல்தொரு பதிவு..

துளசி கோபால் said...

முதல் படம் மட்டும் ஸ்லீப் அவுட்.


பாக்கி எல்லாம் பெரிய வீட்டுக்கானதா இருக்கேப்பா!

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வாழ்த்துகள்.