சிம்புவின் கைவித்தை மற்றும் பஞ்ச் டயலாக் இல்லை; த்ரிஷாவின் உதடு சுழிக்கும் நடிப்பு இல்லை. இந்த இரு காரணங்களுக்காக மட்டுமே கௌதம் மேனனின் காதல் கதையைப் பார்க்க சென்றேன். கொஞ்சமும் ஏமாற்றவில்லை. படம் முழுக்கக் காதல். ஒவ்வொருவரும் உணர்ந்த அல்லது தன் நட்பு வட்டத்தில் யாராலேனும் உணரப்பட்டிருந்த காதலையே அழகாக சொல்லியிருக்கிறார். ஐந்து பேரில் ஒருவருக்கு வரும் முதல் காதலின் அழகான ஓவியம் “விண்ணைத் தாண்டி வருவாயா”
மெக்கானிக்கல் எஞ்சினியரிங் முடித்து விட்டு திரைப்பட இயக்குனராகும் ஆசையில் துணை இயக்குனராக முயற்சி செய்து கொண்டிருக்கும் இளைஞன் கார்த்திக். பெற்றோருக்கு சம்மதம் இல்லாத பொழுதும் அடமாகத் தன் இலக்கை நோக்கிப் போகும் ஹீரோ. மேல் வீட்டில் குடியிருக்கும் ஹவுஸ் ஓனரின் மகள், தேவதையாக ஜெஸ்ஸி. பார்த்ததும் ஒட்டிக் கொள்ளும் இல்லை, பற்றிக் கொள்ளும் காதல், அதன் சேட்டைகள், அதை சமாளிக்கும் குறும்புத் தனமான முகம் எனத் தேர்ந்த நடிப்பு சிம்புவிடம். கார்த்திக்கின் காதலை அறியும் தங்கை ”ஜெஸ்ஸி மலையாளி; கிறிஸ்டின். அதை விட கார்த்திக்கை விட ஒரு வயது மூத்தவள்” என்ற விபரங்களை சொல்லி அவன் காதல் ஒத்து வராதெனக் கண்டிக்கிறாள். அத்தகைய குழப்பங்களில் அறிவுரை (!) கூறி காதலை வளர்க்கிறார் கேமராமேன் நண்பர். இப்படியாக ஜெஸ்ஸியின் மேல் கிரேஸியாய் அலைகிறான் கார்த்திக். ஜெஸ்ஸி தன்னைத் தம்பியென சொல்லும் தருணத்தில் பயந்து போய் “I am in Love with you" என்கிறார் ஹீரோ. முறைத்துக் கொண்டு போய் விடுகிறாள் ஜெஸ்ஸி. அடுத்த இரண்டு நாட்களில் அவளைக் காணாது தவிக்கும் அண்ணனிடம் ஜெஸ்ஸி பத்து நாட்கள் அவள் பாட்டியின் வீட்டிற்கு ஆலப்பே போயிருப்பதாக சொல்கிறாள் தங்கை.
அடுத்ததென்ன, “வாரணம் ஆயிரம்” படம் பார்த்த எஃபெக்டில் “அவனவன் காதலியைத் தேடி அமெரிக்காவுக்கே போறான். ஆலப்பே தானே” என ஆலப்பேக்குக் கேமராமேன் நண்பருடன் பயணமாகிறான் கார்த்திக். நான்கு நாட்கள் தேடி ஜெஸ்ஸியை சந்திக்கிறான். காதலை சொன்னதற்கான மன்னிப்புக் கேட்பதற்காக வந்ததாக சொல்லி, நட்பாகக் கைகோர்க்கின்றனர் இருவரும். எதுக்காகப் பிடிச்சது என அவர்களிருவரும் நின்று பேசும் லொக்கேஷன் அருமை. சிம்புவிற்குப் பின்னால் நீண்ட ஆறும், த்ரிஷாவிற்குப் பின்னால் படகும் என தூளான கேமரா மேனின் கைவண்ணம். ஜெஸ்ஸி சென்னைக்குத் தனியாகப் பயணிக்கிறாள் என அறிந்து அவளுடனே பயணமாகிறான் கார்த்திக். அப்போது எண்ட்ரி ஓமனப் பெண்ணே பாடல். பென்னி தயாள் ஏமாற்றவில்லை. இதில் ஹைலைட்டே கேமரா தான். அசத்தலான காட்சிகள். அழகான பெண், அவள் மேல் பைத்தியமாக அலையும் பையன், ஒரே சீட்டில் இரவுப் பயணம் - பேச்சில் ஆரம்பித்துக் கால், கை எனக் கன்னத்தில் முத்தம் வரை போகிறது.
சென்னை திரும்பியவுடன் மறுபடியும் தடுமாறுகிறாள் ஜெஸ்ஸி. இந்தக் காதல் திருமணத்தில் முடியாது. இது தொடரக் கூடாது என்கிறாள். விடுவதாயில்லை கார்த்திக். ஒரு வழியாய்க் காதல் ஆரம்பிக்க, வழக்கம் போல் நாயகியின் அண்ணனுக்கும், நாயகனுக்கும் அடிதடியாகிறது. மறுபடியும் குழம்பும் ஜெஸ்ஸி. இந்த நேரத்தில் ஜெஸ்ஸியின் திருமணம் நிச்சயிக்கப்பட அதை சர்ச்சிலேயே மறுக்கிறாள் ஜெஸ்ஸி. அன்றிரவே கார்த்திக்கை சந்தித்து மீண்டும் மலர்ந்து, வாசம் வீசுகிறது காதல். காதல் மழையில் நனைகின்றனர் நாயகியும், நாயகனும்.
துணை இயக்குனராக முயற்சிக்கும் கார்த்திக்குக்கு வாய்ப்பு கிடைத்து படப்பிடிப்பிற்காக கோவா செல்கிறார். அந்த நேரத்தில் ஜெஸ்ஸியின் திருமணம் மறுபடியும் பேசப்படவே பதற்றமடைந்து கார்த்திக்கை அழைக்கிறாள். வேலைகளுக்கு நடுவே பேச முடியாத கார்த்திக்கிடம் கோபம் கொள்கிறாள். சிறிய சண்டை மனமுறிவாகப் போகிறது. கார்த்திக்கிற்காக வீட்டில் பேசும் ஜெஸ்ஸிக்கு அப்பாவின் தற்கொலை மிரட்டல் பயமுறுத்தவே காதலிலிருந்து விலக வேண்டிய கட்டாயம்.
இந்த காதல் மேலும் தொடர்ந்ததா... காதலின் முடிவு எப்படிப் போனது.... கார்த்திக் இயக்குனரா என்பது தான் படத்தின் கடைசி சில காட்சிகள். ஆனாலும் கடைசி சீன் வரை சீட்டை விட்டு நம்மை எழுந்திருக்க வைக்காமல் இருப்பது இயக்குனரின் சாமர்த்தியம் தான்.
மிக அழகாக நேர்த்தியாகவே போகிறது காதல், வழக்கமான குழப்பங்களுடன்.
படத்திற்கு பெரிய ப்ளஸ் மனோஜின் ஒளிப்பதிவு. அமர்க்களப்படுத்தியிருக்கிறார். ஏ.ஆர். ரகுமான் இசைக்குக் குறைவில்லை என்றாலும் படம் முடிந்து வெளியே வரும் போது எந்தப் பாட்டும் மனதில் நிற்கவில்லை. ஹாரிஸ் ஜெயராஜை மிஸ் செய்வதை உணர முடிகிறது. அடுத்த ப்ளஸ் சிம்புவின் காஸ்ட்யூம் டிசைனர். அவரின் ஒவ்வொரு ஆடையும் மனதில் நிற்கிறது. நேர்த்தியான தேர்வு, வடிவமைப்பு. குறிப்பாக அவரின் கட்டம் போட்ட ஸ்லாக் ஷர்ட்கள், ஆலப்பே முதல் முறை செல்லும் போது படகில் போட்டிருக்கும் ப்ளூ நிற டி-ஷர்ட், ஓமனப் பெண்ணே பாடலில் வரும் வெள்ளை நிற பேண்ட், கோட், அதனுள்ளே இருக்கும் டி-ஷர்ட் என எல்லாமே அற்புதம். ஆனால் த்ரிஷாவிற்கான காஸ்ட்யூம் தான் சரி சொதப்பல். காட்டன் சேரியிலும், சுடிதாரிலும் கூட வெரைட்டி காட்டலாம் என்பதை மறந்து விட்டாரா டிசைனர் எனத் தெரியவில்லை. அதை விடக் கொடுமை அவரின் மேக்கப். எல்லா சீனிலும் இயற்கையாய்க் காட்டுவதற்காக தலையை சுருட்டையாய், சீவாதவாறு ஒரு மாதிரி விரித்து விட்டது சரி, கல்யாணத்திற்கு போகும் போதும் அப்படியேவா.... கடைசிக் காட்சியில் அவரின் கண்மை அழகாக உள்ளது. அப்படியே படம் முழுக்க இருந்திருந்தால் அவர் இன்னும் அழகாக இருந்திருப்பார். பச்சை, வெள்ளை நிறப் புடவைக்கு பிங்க் நிற நெய்ல் பாலிஷ் ஏன்? கொஞ்சம் நெருடலான மேக்கப். ஆனால் லிப்ஸ்டிக்கைத் தீட்டி வைக்காமல் அழகாக, இயற்கையாகக் காட்டியிருக்கிறார்கள் த்ரிஷாவை.
அவசியம் பாராட்டப்பட வேண்டியவர்கள் சிம்புவும், த்ரிஷாவும். முதலில் சாதாரண காதல்கதையில் நடிக்க ஒப்புக் கொண்டதற்கு. அது தான் அவர்களின் திறமையை முழுக்கக் கொண்டு வர உதவியுள்ளது. எந்த வாய்க் கோணல் சேட்டைகளும் இல்லாமல் பக்கத்து வீட்டுப் பெண் போல பாங்காக உள்ளார் த்ரிஷா. அவரிடம் ஒரு மெச்சூரிட்டியைக் காண முடிகிறது. அதே தான் சிம்புவிடமும். தனது 25 வது படத்திலாவது அவர் விரல் வித்தைகளைத் தவிர்த்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. கொள்ளை கொள்ளும் காதல் காட்சிகளில் 23 வயதுப் பையனாக மனதை அள்ளுகிறார். த்ரிஷாவிற்கும், சிம்புவிற்கும் நிஜமாகவே நல்ல கெமிஸ்ட்ரி.
படத்தின் ஒரே நெருடல் வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் ஆகிய படங்களில் பார்த்தது போல் வெளிநாட்டு நடனக் கலைஞர்களின் ஆட்டம். முதலில் பார்க்கும் போது நளினமாகத் தான் இருந்தது என்றாலும் எல்லா படங்களிலும் பார்த்து சலிப்பே வருகிறது. வேண்டாம் கௌதம். கொடுமை. மத்ததெல்லாமே பெர்ஃபெக்ட்.
படத்தில் கொஞ்சம் லாஜிக் இல்லையெனக் குறைபட்டுக் கொள்பவர்களுக்கு - காதல் லாஜிக் இல்லாதது தான். இந்தப் படத்தில் காட்டப்பட்டிருப்பது போல் கொஞ்சம் கிறுக்குத் தனமானது தான். அது தான் காதலின் அழகு. ரசியுங்கள்.
யோகி கமெண்ட்ஸ் - முதல் முறையாக ஆங்கில சப்டைட்டிலுடன் திரையிடப்பட்ட தமிழ்த் திரைப்படமென்பதால் என்னைப் போலவே ஆர்வம் குறையாமல் ரசித்தார். விஜய்யையும், அஜித்தையும் பார்த்து போரடித்துப் போனவருக்கு சிம்புவின் துடிப்பான துள்ளல் ரொம்பவே பிடித்து விட்டது. Worth spending 170 rupees per ticket and a travel of 60 Kms.
தியேட்டர் வாய்ஸ் - படம் முடிந்து வெளிவரும் பலரும் மனோஜின் ஒளிப்பதிவைப் புகழ்ந்தது தெளிவாகவே கேட்டது.
த்ரிஷாவை ரசித்த கணவர்களை முறைத்த பெண்களைக் காண முடிந்தது.
ரொம்ப நாளைக்கப்புறம் நல்ல காதல் படத்திற்குக் கூட்டி வந்ததாக ஒரு காதலி தன் காதலனைப் புன்னகைத்தார்.
ஓரிருவர் மட்டும் கிளைமாக்ஸ் சொதப்பி விட்டதாகப் பேசி சென்றனர். பலருக்கும் கிளைமேக்ஸ் பிடித்திருந்தது என்பதும் அறிய முடிந்தது.
மொத்தத்தில் விண்ணைத் தாண்டி வருவாயா - திகட்டத் திகட்டக் காதல் - மனதை அள்ளும் வசீகரம்.
கண்டிப்பாய் ஒரு முறை பார்க்கலாம்.
70 comments:
சிம்பு நடிப்பதே பெரிய விஷயமாக பேசப்படுவதே ஆச்சரியம். கண்ராவி பன்ச் டயலாக்கையெல்லாம் இனிமேல் விட்டொழித்தால் நலம்.
பகிர்விற்கு நன்றி.
இது ஏதோ ஒரு நிஜக் காதல் கதையின் பின்னணி என்று நண்பர்கள் கூறிக்கொண்டிருந்தனர். வழக்கம் போல் எல்லா கௌதம் படங்களில் மாறாத வசனமான "I AM IN LOVE WITH YOU" இதிலும் இருக்கிறது என்ற வரலாற்றுத் தகவலைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி விக்கி..!!
பஞ்ச் வரிகள் இல்லா சிம்பு . படத்தை பார்க்கும் ஆவலை தூண்டுகிறது. நல்ல விமர்சனம்.வாழ்த்துக்கள்.
//மிக அழகாக நேர்த்தியாகவே போகிறது காதல், வழக்கமான குழப்பங்களுடன்///
படத்திற்கு உங்கள் இந்த ஒரு வரியே போதுமே !!!!!!!
சீன் பி சீன் வசனம் சொல்லுவாங்க.. நீங்க என்ன உடைன்னு சொல்லுறீங்க.. இது எல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியலை..
எனக்கு மட்டும் ரகசியமா .. படத்தோட கிளைமாக்ஸ் சொல்லுங்களேன் ப்ளீஸ்.. :)
நன்றி விமர்சனத்துக்கு
yogi comment vechu thaan padam paakkarathaa venaama solli decide pannanum pOla :) :)
விக்னேஷ்வரி... நல்லா எழுதி இருக்கிங்க...எனக்கு தெரிஞ்சி காஸ்ட்டியும் அந்த அளவுக்கு மோசம் இல்லைதான்.. ஒரு பெண் பார்வையில் அப்படி இருக்கலாம்...
நான் எழுதன விமர்சனத்தால எனக்கு வீட்ல சோறு போடலை தெரியுமா...
திரிஷா டபுள்ஷேட் புடவை நல்லா இருந்திச்சா.... திரிசா விட்லேயே போய் சாப்பிடு என்று முறைக்கின்றாள்... என் மனைவி..
//திரிஷா டபுள்ஷேட் புடவை நல்லா இருந்திச்சா.... திரிசா விட்லேயே போய் சாப்பிடு என்று முறைக்கின்றாள்..
:))
ஜாக்கி அவர்களின் இந்த கமெண்ட்-ஐ எண்ணி ரொம்ப நேரம் சிரித்துக்கொண்டிருந்தேன்...
அர.இதெ.சாதாரணமப்பா!
அன்புடன்
கார்த்திகேயன்
http://kaaranam1000.blogspot.com
ஜாக்கி.. நல்ல வேளை டபுள் ஷேட் புடவை நாலு கேட்காம அவங்க வீட்டுல போய் சாப்டுக்கன்னு சொன்னாங்களே..:)
//மிக அழகாக நேர்த்தியாகவே போகிறது காதல், வழக்கமான குழப்பங்களுடன்///
............. very nice review!
ரொம்ப ரசிக்கும்படியா இருக்குதுங்க 'ரசிகையின் பார்வை'!
ரசிகையின் பார்வை, யோகி அவர்களின் கமெண்ட்ஸ், தியேட்டர் வாய்ஸ் என்று பல கோனங்களில் பின்னிட்டீங்க.
/ த்ரிஷாவை ரசித்த கணவர்களை முறைத்த பெண்களைக் காண முடிந்தது. / பொறாமை :)
உடை விஷயங்கள் பற்றிய உங்களின் போஸ்டை, கௌதம்மேனன் படித்திருந்தால் சில குறைகளை கலைந்திருக்கலாமோ :)
சிம்புவுக்கு ஒரு டர்னிங்க் பாயிண்ட். அவர் இனியாவது தன் சேஷ்டைகளை குறைச்சுட்டு நடிக்கறதுல கவனம் செலுத்தணும்.
ரொம்ப நல்ல விமர்சனம்.
ரைட் பார்த்துட்டீங்களா....
மெதுவா போன படத்தில் கிளைமாக்ஸ்
கொஞ்சம் நல்லா இருந்தது...
திரைப்படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும் என்ற நிலைமைக்கு வந்தாச்சு
நேத்துப் பாத்தேன்...காதலில் விழாத என்னையும் காதலிக்கத் தூண்டி விட்டிருக்கும் படம்...
hmmm..
patuvital pochu..
neenga chona apo nala erukumnu
nambukiren..
padam pathuvitu vanthu comment podren
nandri valga valamudan.
Forwarded your Blog to Manoj Paramahamsa..
சிம்பு படம் என்றாலே எனக்கு பிடிக்காது, கவுதம் மேனன் படம் என்பதால் இன்று செல்லாலம் என்று
இருக்கிறேன்.
// கடைசி சீன் வரை சீட்டை விட்டு நம்மை எழுந்திருக்க வைக்காமல் இருப்பது இயக்குனரின் சாமர்த்தியம் தான் //
பின்ன காசு குடுதுருக்கேனே!!!
2nd half உட்க்கார முடியலே போங்க...
awesome review akka!:)) loved the movie so much!!
அவசியம் பார்க்கணும் :-)
நல்ல படம்ல... ஹ்ம்ம்...
ஹாய் விக்கி,நலம் தானே,இந்த வாரம் படம் பார்க்க உள்ளதால் படம் பார்த்துவிட்டு பின் உங்கள் விமர்சனம்வருகிறேன்,[இப்போதைக்கு என் வோட்டு மட்டும்,அழகான போட்டோஸ் போட்டதுக்கு.]
ம்கும்,,,,,, நான் அடுத்த வாரன் பாத்துட்டு
விக்னேஷ்வரி,
கண்டிப்பாக ஒரு முறை பார்க்க வேண்டிய படம் தான்.
//படத்தில் கொஞ்சம் லாஜிக் இல்லையெனக் குறைபட்டுக் கொள்பவர்களுக்கு - காதல் லாஜிக் இல்லாதது தான்.//
காதல் லாஜிக் இல்லாமல் வரலாம் ஆனால் கல்யாணத்தை ஊர் கூடி இருக்குமிடத்தில் இருத்தும் பெண், உன் கூட வந்துடறேன் இரண்டு நாள் முன்ன சொல்லும் பெண் என்ன காரணமென்றே சொல்லாமல் "It's over" என்று சொல்லிட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டு u.k போயிடுவாளா? காதல் வர லாஜிக் வேண்டாம்ப்பா காதல் வேண்டாம் என்று சொல்ல ஒரு லாஜிக் வேண்டாமா என்ன?
காதலுக்கும் இனகவர்ச்சிக்கும் இடையில் தத்தளித்திருக்கிறது விண்ணை தாண்டி வருவாயா.
வயது மூத்த பெண்ணை மணப்பதற்கு சிம்புவிடம் அவர் நண்பராக வரும் நபர் சொல்லும் காரணம் இருக்கின்றதே... தூஊ என்னப்பா நினைச்சி இருக்காங்க பொண்ணுங்களை பத்தி.
சாரி மேடம் நான் சிம்பு படத்தோட விமர்சனம் கூட படிகமாட்டேன்னு என் குலசாமிக்கு சத்யம் பண்னி குடுத்திருக்கேன் (சத்தியமா நான் விமர்சனம் படிக்கல )
ரொம்ப நல்ல விமர்சனம். அசத்தல். நன்றி
நன்றி சூர்யா. சிம்பு நல்ல நடிகர் தான். ஆனால் அவரை விட அவரின் விரல்கள் அதிகமாக நடிக்கும் போது தான் நெருடலாக இருக்கும். இதில் அந்த நெருடல் இல்லை.
நன்றி சுரேஷ். அந்த வசனம் யார் யாரைக் காதலித்தாலும் தொடர்கிறது.
நன்றி மதுரை சரவணன்.
நன்றி ஜெய்லானி.
எப்படி... எது பார்த்தாலும் நமக்குள்ள இருக்குற டிசைனர் அலார்ட்டா இருக்கு குமார்.
நோ, நோ படத்தின் கிளைமாக்ஸ் தான் கடைசி வரை உங்களை உக்கார வைக்கும். அதை சொல்லிட்டா சுவாரசியம் இருக்காது.
நன்றி குமார்.
யோகியும் நல்ல கமெண்ட் தானே குடுத்திருக்கார். அதுனால பாருங்க குமார்.
நன்றி ஜாக்கி சேகர். ஹாஹாஹா... நீங்க உங்க மனைவிகிட்ட சொல்லுங்க, ”த்ரிஷா புடவை தான் நல்லாருக்கு. அதை நீ கட்டினா நீ தான் நல்லாருப்ப”ன்னு. விருந்து சாப்பாடே போடுவாங்க. :)
வாங்க கார்த்திகேயன்.
வாங்க சங்கர்.
நன்றி சித்ரா.
நன்றி பொன்னியின் செல்வன். எனக்குப் பொறாமை இல்ல. யோகி த்ரிஷாவை ரசிக்கல. :)
அடுத்தப் படத்தில் உடை விஷயங்களை கருத்தில் கொள்வார்கள் என நம்புவோமாக.
சரியா சொன்னீங்க அம்மிணி. படம் பார்த்தாச்சா...
நன்றி இராமசாமி.
ஆமா ஜெட்லி. ரொம்ப ஒண்ணும் மெதுவாப் போன மாதிரி இல்ல. அலுக்காமப் போச்சு.
மகிழ்ச்சி உருத்திரா. பாருங்க.
மகிழ்ச்சி புலிகேசி. பொண்ணைத் தேடி கண்டுபிடிங்க.
அவசியம் பாருங்க சூர்யா. நல்லாருக்கு.
நன்றி இளா.
போய்ட்டு வாங்க சைவகொத்துபரோட்டா. படம் பிடிக்கலாம்.
ஏங்க BONIFACE. நிஜத்துல இந்த மாதிரி கதைகளைப் பார்த்திருந்தா தியேட்டர்ல போரடிச்சிருக்காது.
நன்றி தமிழ்மாங்கனி. அதுக்குள்ள பார்த்தாச்சா...
ஏன் பப்பு ஒரு பெருமூச்சு?
நன்றி டெக் ஷங்கர்.
நலம் ஜெரி சார். நன்றி. சரி, பார்த்திட்டு வாங்க. எந்த தியேட்டர்ல? ப்ரியா காம்ப்ளெக்ஸ்?
சரி பேரரசன், பார்த்துட்டு வாங்க. ஆனா, அதுல இருக்குற காதல் பார்த்து பெருமூச்சு விடக் கூடாது ;)
வாங்க லாவண்யா. கல்யாணத்தை ஊர் கூடி இருக்குமிடத்தில் நிறுத்தக் காரணம் ஹீரோவோ, அவன் மீதான காதலோ அல்லவே. அவளுக்கு அந்த நேரத்தில் திருமணத்தில் விருப்பமில்லை. அதை சொன்னாலும் புரிந்து கொள்ளாத பெற்றோர். வேறென்ன செய்ய முடியும்?
எனக்குத் தெரிய காதல் இது போல் நிறையவே உடைஞ்சிருக்கு லாவண்யா. ஒண்ணுமே இல்லாத விஷயங்களுக்காக விட்டு விட்டு பின் புலம்பியவர்கள் பலரை நேரில் கண்டிருக்கிறேன். அதனால் அதற்கும் லாஜிக் தேவையில்லை. குழப்பமான பெண் போதும். :)
எனக்கு இன்னும் இந்தக் காதலுக்கும் இனக்கவர்ச்சிக்கும் வித்தியாசம் தெரியவில்லை லாவண்யா. பார்த்ததும் யாருன்னெல்லாம் தெரியாம, ஒத்துவருமான்னெல்லாம் பார்க்காம பத்திக்குறது தான் காதல். அதை இனக் கவர்ச்சி என்று நீங்கள் சொல்லலாம். எல்லாம் சரி வருமா எனப் பார்த்து பின் செய்வதற்கு இது பிஸினஸ் இல்லையே. காதல் காரணமில்லாதது தான். ஏன் இந்தப் பெண்ணை / பையனைக் காதலிக்கிறாய் என யாரிடமாவது கேட்டுப் பாருங்கள். விடை கிடைக்காது. அது தான் காதலில் அழகு.
வயது மூத்த பெண்ணை மணப்பதற்கு சிம்புவிடம் அவர் நண்பராக வரும் நபர் சொல்லும் காரணம் இருக்கின்றதே //
ஆண்களுக்குள் பேசும் மொழி வழக்கு அப்படித் தான் இருக்கும். அதைக் கண்டும் காணாமல் போவது தான் நமக்கு நல்லது.
நிஜமாவே இந்தப் படத்துக்காக சத்தியத்தை மீறலாம் அமைச்சரே.
நன்றி மோகன் குமார்.
//பச்சை, வெள்ளை நிறப் புடவைக்கு பிங்க் நிற நெய்ல் பாலிஷ் ஏன்? //
ரசிகையின் பார்வை...
ஹாஹாஹாஹாஹா...
கோச்சுக்காதீங்க...
அருமையான விமர்சனம்...
:-)))
(ஸ்மைலி போட்டுட்டேன்... திட்டக்கூடாது.. ஆமா...)
// குறிப்பாக அவரின் கட்டம் போட்ட ஸ்லாக் ஷர்ட்கள், ஆலப்பே முதல் முறை செல்லும் போது படகில் போட்டிருக்கும் ப்ளூ நிற டி-ஷர்ட், ஓமனப் பெண்ணே பாடலில் வரும் வெள்ளை நிற பேண்ட், கோட், அதனுள்ளே இருக்கும் டி-ஷர்ட் என எல்லாமே அற்புதம். ஆனால் த்ரிஷாவிற்கான காஸ்ட்யூம் தான் சரி சொதப்பல். காட்டன் சேரியிலும், சுடிதாரிலும் கூட வெரைட்டி காட்டலாம் என்பதை மறந்து விட்டாரா டிசைனர் எனத் தெரியவில்லை//
அந்நியன் மாதிரி உள்ளுக்குள்ள ஃபேஷன் டிசைனரும் படம் பாத்துருக்காங்க போல:)
// “I am in Love with you" என்கிறார் ஹீரோ//
ஒரு தடவை கேக்கலாம், ரெண்டு தடவை கேக்கலாம், திருப்பி திருப்பி இதையே கேக்கும்போது எரிச்சல்தான் வருது, கவுதம் மாறவே மாட்டாரா:(
//சிம்புவின் துடிப்பான துள்ளல் ரொம்பவே பிடித்து விட்டது//
சென்னைக்கு வரும்போது சொல்லுங்க. இதுக்கு முன்னாடி சிம்பு நடிச்ச, காளை, சிலம்பாட்டம் போன்ற கருத்தாழமிக்க படங்கள் டிவிடி வாங்கி தரேன், யோகிக்கு குடுங்க:))
//அடுத்த ப்ளஸ் சிம்புவின் காஸ்ட்யூம் டிசைனர். அவரின் ஒவ்வொரு ஆடையும் மனதில் நிற்கிறது. நேர்த்தியான தேர்வு, வடிவமைப்பு. குறிப்பாக அவரின் கட்டம் போட்ட ஸ்லாக் ஷர்ட்கள், ஆலப்பே முதல் முறை செல்லும் போது படகில் போட்டிருக்கும் ப்ளூ நிற டி-ஷர்ட், ஓமனப் பெண்ணே பாடலில் வரும் வெள்ளை நிற பேண்ட், கோட், அதனுள்ளே இருக்கும் டி-ஷர்ட் என எல்லாமே அற்புதம். ஆனால் த்ரிஷாவிற்கான காஸ்ட்யூம் தான் சரி சொதப்பல். காட்டன் சேரியிலும், சுடிதாரிலும் கூட வெரைட்டி காட்டலாம் என்பதை மறந்து விட்டாரா டிசைனர் எனத் தெரியவில்லை. அதை விடக் கொடுமை அவரின் மேக்கப். எல்லா சீனிலும் இயற்கையாய்க் காட்டுவதற்காக தலையை சுருட்டையாய், சீவாதவாறு ஒரு மாதிரி விரித்து விட்டது சரி, கல்யாணத்திற்கு போகும் போதும் அப்படியேவா.... கடைசிக் காட்சியில் அவரின் கண்மை அழகாக உள்ளது. அப்படியே படம் முழுக்க இருந்திருந்தால் அவர் இன்னும் அழகாக இருந்திருப்பார். பச்சை, வெள்ளை நிறப் புடவைக்கு பிங்க் நிற நெய்ல் பாலிஷ் ஏன்? கொஞ்சம் நெருடலான மேக்கப். ஆனால் லிப்ஸ்டிக்கைத் தீட்டி வைக்காமல் அழகாக, இயற்கையாகக் காட்டியிருக்கிறார்கள் த்ரிஷாவை.//
//கடைசிக் காட்சியில் அவரின் கண்மை அழகாக உள்ளது.//
தொழில்? :-) கூர்மை!
நாங்கள் படம் மட்டும்தான் பார்க்கிறோம்,விக்னேஷ்.
:-)
சுவராசியம்.good work.
அப்போ அது வழக்கமான சிம்பு படம் இல்லையா... தைரியமா பாக்கலாம் போல
படத்துல யார் யாரோ எதை எதையோ நோட் பண்ணினா.. நீங்க மட்டும் எவ்ளோ கரெக்டா காஸ்ட்யூம்ஸ் நோட் பண்ணி இருக்கீங்க.. உங்க தொழில்பக்திக்கு ஒரு அளவே இல்லியா..
//விண்ணைத் தாண்டி வருவாயா காஸ்ட்யூம்ஸ் டிசைனரின் பார்வை"// அப்படின்னு தலைப்பு வெச்சிருக்கலாமோ:-)
ம்ம்..படம் ஹிட்டுதான் :)
இளமைகொப்பளித்தது கூட மெச்சூரிடியும்.. நீட்டான க்யூட்டான விமர்சனம் :)
//யோகி கமெண்ட்ஸ் - முதல் முறையாக ஆங்கில சப்டைட்டிலுடன் திரையிடப்பட்ட தமிழ்த் திரைப்படமென்பதால் என்னைப் போலவே ஆர்வம் குறையாமல் ரசித்தார். விஜய்யையும், அஜித்தையும் பார்த்து போரடித்துப் போனவருக்கு சிம்புவின் துடிப்பான துள்ளல் ரொம்பவே பிடித்து விட்டது. Worth spending 170 rupees per ticket and a travel of 60 Kms.//
கண்டிப்பா
எனக்கு இன்னும் இந்தக் காதலுக்கும் இனக்கவர்ச்சிக்கும் வித்தியாசம் தெரியவில்லை லாவண்யா. பார்த்ததும் யாருன்னெல்லாம் தெரியாம, ஒத்துவருமான்னெல்லாம் பார்க்காம பத்திக்குறது தான் காதல். அதை இனக் கவர்ச்சி என்று நீங்கள் சொல்லலாம். எல்லாம் சரி வருமா எனப் பார்த்து பின் செய்வதற்கு இது பிஸினஸ் இல்லையே.
விக்கி,, நீங்கள் இட்ட இந்த பதில் பின்னுட்டத்திற்கு என் மனமார்ந்த ஆதரவுகள்.மதுர காரங்க காதலுக்கு ஜெ..
இந்த மாதிரி கதையதானே பாக்குறோம்!!!!!! இரண்டு பேர் குள்ளும் உள்ள காதல விட்டுடுங்க,,,கதாநாயகன் படம் எடுபதெல்லாம் தேவையே இல்ல???
ரொம்ப ரசிசுருக்கிங்க இதுக்குமேல என்னால பேசமுடியாது.
என்ன பண்ண அகல்விளக்கு, எல்லாரும் அவங்கவங்களுக்குத் தெரிஞ்சதைப் பாக்குறாங்க. நம்ம தொழில் புத்தி தானே நமக்கு. :) நன்றி.
அந்நியன் மாதிரி ஒண்ணு போய்ட்டு இன்னொன்னு வராது. எல்லாமே முழிச்சிட்டிருக்கும் ரகு :)
கௌதம் ஒரு வேளை அவருடைய லவ்வை இப்படித் தான் சொல்லிருப்பார் போல. அதான், அவர் படங்கள்லேயும் தொடருது.
ஹிஹிஹி... நீங்க தீட்டியிருக்குற சதித் திட்டத்துல இருந்து நான் யோகியைக் காப்பாத்தனும், கேப்டன் பாகிஸ்தான்கிட்டேயிருந்து நாட்டைக் காப்பாத்துற மாதிரி.
நன்றி ராஜாராம் மாம்ஸ். நீங்கள்லாம் கதையை ரசிங்க, பாராட்டுங்க, விமர்சிங்க. மேக்கப், உடையலங்காரத்தையும் பார்க்க ஆள் வேணும்ல. அதுக்குத் தான் நான் :)
ஆமா ராஜி, முடிஞ்சா அவசியம் பாருங்க. உங்களுக்குப் பிடிக்கலாம். ஹிஹிஹி... என்ன பண்ண ராஜி. :)
ஐ, இந்தத் தலைப்பும் நல்லா இருக்கே. அடுத்த முறை பரிசீலிக்கலாம். :)
ஆமா வெற்றி.
நன்றி அஷோக்.
வாங்க நசரேயன்.
நன்றி காவேரி கணேஷ்.
ஆமா BONIFACE. :)
உங்களின் விமர்சனம் மிகவும் அருமை . நான் இன்னும் படம் பார்க்கவில்லை . பார்த்துவிட்டு மீண்டும் மறுமொழியிடுகிறேன் . பகிர்வுக்கு நன்றி !
//அவளுக்கு அந்த நேரத்தில் திருமணத்தில் விருப்பமில்லை.//
யாரும் காரணமில்லை என்று சொல்லிட்டேன் ஆனா என் மனசில நீ இருக்க கார்த்திக் என்று ஜெஸி சொல்றது படத்திலேயே வருது. அவ பெற்றோரிடம் மட்டும் தான் சொல்லலை ஆனா கல்யாணத்தை நிறுத்த அவள் காதலும் ஒரு காரணம்.
//எல்லாம் சரி வருமா எனப் பார்த்து பின் செய்வதற்கு இது பிஸினஸ் இல்லையே.//
சரி எல்லாம் சரி வருமான்னு பார்த்து காதல் வராது.ஆனா பேசமா நம்முடைய அலைவரிசை தானா என்று கூட தெரியாமல் வருவதற்கு பெயர் காதலா? என்னை பொருத்தவரை love at first sight என்பதே சுத்த சினிமாத்தனமான ஒன்று.
பார்த்ததும் பிடித்தது, பேசியதும் ரொம்பப் பிடித்தது, கொஞ்ச நாள் பேசிட்டே இருந்தும் பிடித்தது என்றால் பின்ன இது சரிவருமா என்று என்றெல்லாம் யோசிக்க தேவையில்லை. அப்படி யோசித்தால் கூட தவறில்லை. காதல் காதலாகவே இல்லாமல் வாழ்க்கையாக வேண்டுமானால் யோசிக்க தான் வேண்டும் அதற்கு பெயர் வியாபாரமில்லை வாழ்க்கைப்படுத்துதல்.
//காதல் காரணமில்லாதது தான்.//
ஒருத்தர் ஒருத்தருக்கு பிடிக்கனும் இல்லை. லெட்டஸ்டா எல்லோரும் சொல்லிக்கிற மாதிரி கெமிஸ்டிரி, ஹிஸ்டரி எல்லாம் வொர்க் அவுட் ஆகனும் இல்லை. அப்பறம் எப்படி காரணமில்லை என்று சொல்ல முடியும்?
[[[விக்னேஷ்வரி... நல்லா எழுதி இருக்கிங்க...எனக்கு தெரிஞ்சி காஸ்ட்டியும் அந்த அளவுக்கு மோசம் இல்லைதான்.. ஒரு பெண் பார்வையில் அப்படி இருக்கலாம்...
நான் எழுதன விமர்சனத்தால எனக்கு வீட்ல சோறு போடலை தெரியுமா...
திரிஷா டபுள்ஷேட் புடவை நல்லா இருந்திச்சா.... திரிசா விட்லேயே போய் சாப்பிடு என்று முறைக்கின்றாள்... என் மனைவி..]]
[[Cable Sankar said...
ஜாக்கி.. நல்ல வேளை டபுள் ஷேட் புடவை நாலு கேட்காம அவங்க வீட்டுல போய் சாப்டுக்கன்னு சொன்னாங்களே..:)]]]
அடடா.. இந்தக் கல்யாணமான பெரிசுக தொல்லை தாங்கலப்ப..!
இடம் கிடைச்சா போதும், சட்டுன்னு புலம்பலை ஆரம்பிச்சிடறாங்க..!
நானும்,கேபிள் சங்கரும் படம் ரிலீசுக்கு ஒரு நாள் முன்பே பிரிவியூவில் பார்த்தோம்.படம் பார்த்தது 2.30 மணி நேரம் . முடிந்து வெளியில் வந்து நாங்கள் படம் பற்றிப் பேசிக்கொண்டு இருந்தது 3 மணி நேரம்.
பகிர்விற்கு நன்றி
Nice view !
Could find a lot of matured changes in the flow.Keep going !
உங்கள் பார்வை நன்றாக இருக்கிறது.
ரொம்ப நாளைக்கப்புறம் நல்ல காதல் படத்திற்குக் கூட்டி வந்ததாக ஒரு காதலி தன் காதலனைப் புன்னகைத்தார் - :) ( is my guess right?!
காதல் கதைன்னதும் இவ்ளோ சீக்கிரம் போய்ப் பார்த்துட்டீங்களா? குட்!
விமர்சனம் நல்ல தெளிவா இருந்தது விக்கி!
விமர்சனம் மிக அருமை.இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல்ல விமர்சனம் என்று சொல்லிட்டு படம் முழுவதையும் கண் முன் கொண்டுவந்துட்டீங்கழே விக்னேஸ்வரி. நம் எல்லோர் பார்வையும் சரியாகவே இருக்கிறது குறிப்பாக \\சிம்புவுக்கு ஒரு டர்னிங்க் பாயிண்ட். அவர் இனியாவது தன் சேஷ்டைகளை குறைச்சுட்டு நடிக்கறதுல கவனம் செலுத்தணும்.\\--சின்ன அம்மணி.....\\எந்த வாய்க் கோணல் சேட்டைகளும் இல்லாமல் பக்கத்து வீட்டுப் பெண் போல பாங்காக உள்ளார் த்ரிஷா. அதே தான் சிம்புவிடமும். தனது 25 வது படத்திலாவது அவர் விரல் வித்தைகளைத் தவிர்த்திருப்பது மகிழ்ச்சிக்குரியது\\---விக்னேஸ்வரி.... \\பஞ்ச் வரிகள் இல்லா சிம்பு . படத்தை பார்க்கும் ஆவலை தூண்டுகிறது\\----மதுரை சரவணன்....இனி என்னோட கருத்து..இந்த படத்தோட வெற்றிக்கு முக்கிய காரணம் எந்த ஒரு ஹீரோஇசமும் இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதே. கௌதம் மேனன் தன் பணியை செவ்வனே செய்த்ருக்கிறார்.அடுத்ததாக மிக முக்கியமானது படத்தின் பின்னணி இசை மனதை வருடுகிறது. பாடல்கள் அனைத்தும் அருமை. பாடல் வரிகளில் எந்த ஒரு இரட்டை அர்த்த வார்த்தைகளும் இல்லை பாராட்டுக்குரியது.அடுத்ததாக ஒளிபதிவு கேமரா மேன் மனோஜின் ஒளிப்பதிவு மிக நேர்த்தியாக இருந்தது (இதில் ஹைலைட்டே கேமரா தான்-விக்னேஸ்வரி)..அடுத்தது விக்னேஸ்வரியை பத்தி உங்கள் observation பவர் ரொம்ப ஜாஸ்தி ஒவ்வரு விசயங்களையும் மிக நுட்பமாக கவனித்து மனதில் பதிய வைதிருக்கிங்க குறிப்பாக அந்த costume விஷயங்கள்- பெண்களுக்கான தனித்துவமாக கூட இருக்கலாம் -எங்க அம்மாவும் இதே போல சொல்லுவாங்க .........மொத்தத்தில் மிக நேர்த்தி படமும் அதற்கான உங்கள் விமர்சனமும்
வார வாரம் வெளியிடப்படும் படங்களின் படவரிசைகளைப் பார்வையிட
http://tamiltop10ssss.blogspot.com/
சரி, சரி,
கேபிள் அண்ணே, உங்களுக்கு போட்டியா இன்னொரு ஆள் வந்தாச்சு. பாத்து சூதனமா இருங்கண்ணே.
விமர்சனம் அவ்வளவு தானா? இன்னும் வருமா?
\\ஏ.ஆர். ரகுமான் இசைக்குக் குறைவில்லை என்றாலும் படம் முடிந்து வெளியே வரும் போது எந்தப் பாட்டும் மனதில் நிற்கவில்லை. ஹாரிஸ் ஜெயராஜை மிஸ் செய்வதை உணர முடிகிறது\\
நான் பாடலுக்காகவே மறுபடியும் படத்துக்கு சென்றேன்
நல்ல படம்ன்னு சொல்றீங்க. பார்த்துடறேன்.
நன்றி சங்கர்.
லாவண்யா, காதல் மனசுக்குள்ள மட்டும் நடக்கும் விவாதம். இங்கே விவாதம் பண்ண சரிப்படாது. அதை உணரணும். விளக்க முடியாது. :)
ஓ, அவங்கள்லாம் பெரிசுங்க, நீங்க... என்னங்க உண்மைத் தமிழன்.. சரிங்க. நான் ஒண்ணும் சொல்லல. :)
நன்றி தியா.
வாங்க அப்துல்லா. ஓ, இதுக்குத் தான் பேச வைக்கும் படமா...
நன்றி நேசமித்திரன்.
நன்றி ரோமியோ.
ஷர்ஃபுதீன் நோ கெஸ்ஸஸ் :)
ஹிஹிஹி ஆமா பரிசல்.
நன்றி கிருஷ்ணா.
நன்றி PrinceR5. உங்கள் பார்வையும் ரசனை.
நல்லது எழிழன்.
தராசு, அவர் கூடவெல்லாம் போட்டி போட முடியுமாங்க.
வெயிலான், படத்துக்கு நான் ரசிகை மட்டுமே. அதுனால விமர்சனம் அவ்ளோ தான். :)
பாடல்கள் தூள் தான் அன்பு. தினமும் ராத்திரியில் எனக்குத் தாலாட்டு. கேட்காமல் தூங்குவதில்லை. ஆனாலும் ஹாரிஸ் மிஸ்ஸிங். ஒரு வேளை கௌதமின் படங்களில் பார்த்துப் பழகிவிட்டதாலோ என்னவோ.
கண்டிப்பா ரகு கூட போய்ப்பாருங்க வித்யா. :)
////பச்சை, வெள்ளை நிறப் புடவைக்கு பிங்க் நிற நெய்ல் பாலிஷ் ஏன்? ////
தொழில் பக்தி :)) இனிமேத்தான்... போகணும். அதுக்குள்ளே சத்யம் தியேட்டர விட்டு போயிடாம இருக்கணும். :(
//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
[[Cable Sankar said...
ஜாக்கி.. நல்ல வேளை டபுள் ஷேட் புடவை நாலு கேட்காம அவங்க வீட்டுல போய் சாப்டுக்கன்னு சொன்னாங்களே..:)]]]
அடடா.. இந்தக் கல்யாணமான பெரிசுக தொல்லை தாங்கலப்ப..!
இடம் கிடைச்சா போதும், சட்டுன்னு புலம்பலை ஆரம்பிச்சிடறாங்க..!
February 28, 2010 9:52 அம /////
:))) ROFL
விக்கி, நான் ஆறு பதிவுகள் எழுதினால் வருகிற பின்னூட்டங்களின் கூட்டுத்தொகை உன் ஒரு பதிவுக்கு வருவதைக் காட்டிலும் பாதிதான்!
எங்கேயோ போயிட்ட விக்கி :)
guess ringhtaa? wrongaa?!
சிம்பு நடிப்பு.... திரிஷா நடிப்பு... வசனம்... ஒளிப்பதிவு... காட்சியமைப்பு... கதை...அத்தனையும் அருமை .... உங்க பகிர்வுக்கும் நன்றி.
நீங்க சொல்றத பாத்தா நேர விண்ணை தாண்டி வருவாயா Part II பாக்கலாம் போல.....
//காதல் காட்சிகளில் 23 வயதுப் பையனாக மனதை அள்ளுகிறார்//
ஏங்க அந்த படத்துல சிம்புக்கு 22 வயசு தாங்க.
திரிஷாக்கு தான் 23 .
நல்ல அழகான விமர்சனம் & படம்.
ஆக, நோய்டால தமிழ் படம் நிறைய போடறாங்க போல
படத்தை உங்களுக்காக நிறுத்தி வைப்போம் விதூஷ். போய்ப் பாருங்க. :)
இருந்தாலும் உன்னை மாதிரி நான் பிரபலம் இல்லை செல்வா. ;)
ரைட்டில்ல ஷர்ஃபுதீன். :)
நன்றி கருணாகரசு.
பார்ட் II வர்ற வரைக்கும் காக்க வேண்டாம். முதல்ல இதைப் பாருங்க சரவணா.
ஓ, தப்பா சொல்லிட்டேனா ஸாரி பிரியா.
நன்றி ரசிதா.
நொய்டால இல்லைங்க தங்கமணி. டெல்லில போய்ப் பார்த்தோம்.
விண்ணைத்தாண்டி வருவாயா.... பக்குவப்பட்ட படைப்பாளியின் காதல் படைப்பு.....
படம்பற்றிய
உங்க பார்வையும் மிக அழகு.
Post a Comment