Sunday, August 23, 2009

அழகான பயணம்ஒரு மாதத்திற்கு டெல்லியின் வதைக்கும் வெயிலிலிருந்து தப்பித்த விதமாக வெளியூர் பயணம். அதுவும் குளுகுளு கோவைக்கு. குஷியை சொல்லவும் வேண்டுமா..... பதினைந்து நாட்களுக்கு கோவையில் அலுவல் வேலை. அது போக இருபது நாட்கள் விடுமுறை எடுத்து நன்றாக சுற்றி விட்டு வந்தேன். பாவம் யோகி. தனியாக சமைத்து சாப்பிட்டு ரொம்பவும் கஷ்டப்பட்டு விட்டார்.

டெல்லியிலிருந்து கோவையில் இறங்கிய அந்த நிமிடம் சொர்க்கமாக தெரிந்தது. பதினைந்து நாட்கள் அவினாஷி ரோடிலுள்ள நீல்கிரிசில் ஸ்டே. அங்கு சாப்பாடு இவ்வளவு மோசம் என கோவையிலிருந்த வரை எனக்குத் தெரியாது. எப்படியோ நண்பர்களின் உதவியால் அங்கிருந்து தப்பித்து நல்ல கோவை மெஸ்களில் சமாளித்தேன். கோவை போய் ரெசிடென்சி போகாமல் வந்தால் பாவம் என்பதால் அங்கு ஒரு டின்னர். எண்ணங்கள் ஒத்துப் போகும் ஒரு நல்ல தோழியுடன் மயக்கும் கோவையிரவில் ரெசிடென்சியில் அமர்ந்து அந்த உணவுடன் நல்ல விஷயங்களையும் அசை போடுவதென்பது எத்தனை சுகம்.

அடுத்து இரண்டு நாட்கள் திருப்பூரில். திருப்பூர் எதிர்பார்த்ததை விட இம்முறை நன்றாகவே இருந்தது. கொஞ்சமும் எதிர்பாராத நண்பர்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி. என்ன, அலுவல் வேலை தான் கொஞ்சம் அதிகம், வழக்கம் போல். ஆனாலும், சமாளிச்சுட்டோம்ல. பதிவெழுத தான் நேரம் கிடைக்கவில்லை. (தப்பித்ததற்காக நீங்கள் மகிழ வேண்டாம். வந்துட்டோம்ல.)

திருப்பூரிலிருந்து மறுபடியும் நான்கு நாட்கள் கோவையில் தோழி வீட்டில். பள்ளிகாலத்து கதைகளில் ஆரம்பித்து, சைட் அடிச்ச நாட்கள், தோழிகளின் காதல் கதை நிலவரங்கள், இப்போதைய அவசர அன்றாட வாழ்க்கை, தினசரி சமையல், புதிதாக வந்த படங்கள், புகுந்த வீட்டுப் பெருமைகள், பெயிண்டிங், கணவரின் வேலை, குழந்தையின் பள்ளிக்கதைகள், நடக்க போகும் அரசியல் அக்கிரமங்கள், குளோபல் வார்மிங் என எல்லாம் பேசுவது எவ்வளவு சுவாரசியம். அழகான நாட்கள். "வசீகரா" படத்திற்குப் பின் நானும் அவளும் சேர்ந்து "Love Aaj Kal" போனோம். அழகான படத்தை கருத்து ஒத்துப் போகும் சகியுடன் பார்ப்பது அலாதி இன்பம்.
கோவையின் மற்றொரு வசதியாய் நான் நினைப்பது FM. நல்ல பாடல்கள், அழகான கொலை செய்யப்படாத தமிழ் என இசைச் சாரல். தினமும் நான் இரண்டு மணி நேரம் பிரயாணம் செய்ய வேண்டி இருந்தும் அந்த அலுப்பைத் தராதவை பாடல்கள். மழை தூறிக் கொண்டிருந்த ஒரு மாலை வேளையில் மனதைக் கொள்ளை கொண்ட மழைப் பாடல்கள் மனதில் நின்றவை. விளம்பரங்கள் அதிகமாக இருந்தது மட்டுமே சிறு குறையாக இருந்தாலும், இரவு நேரங்களில் அதுவும் குறைவு.

பின் அங்கிருந்து ஒரு வாரம் அம்மா வீட்டில். எது எப்படியிருந்தாலும் அம்மா வீடு தனி சுகம் தான். என் முதல் தோழி அம்மாவிடமும் எல்லா கதைகளும் பேசி போரடிச்சாச்சு. "நாடோடிகள்" படத்தை அம்மாவுடனும், தங்கையுடனும் பார்க்க நினைத்து முடியாமல் போனது சின்ன வருத்தம். எங்கள் ஊர் வரை போய் எங்கள் ஊர்ப் பதிவரைப் பார்க்காமல் எப்படி வருவது... "சோம்பேறி" மனோவைப் பார்த்ததில் மகிழ்ச்சி. இவ்வளவு ஆரவாரமாக எழுதுபவர் இப்படி அமைதியாய் இருப்பார் என எதிர்பாத்திருக்கவில்லை. அங்கும் பள்ளித் தோழிகளுடன் சிறு மீட். ஆறாம் வகுப்பு சேட்டைகளை எல்லாம் சொல்லி ரசித்தோம்.

வீட்டிலிருந்து இரண்டு நாட்கள் சென்னை. வாங்கிப் போன பால்கோவா பத்தாமல் போனது தான் கவலை. மற்றபடி அங்கும் ஆரவாரத்திற்குக் குறைவில்லை. அங்கிருந்த மற்றொரு பள்ளித் தோழியுடன் இரண்டு நாட்கள் பேசிக் களித்ததில் மகிழ்ச்சி. பௌர்ணமி இரவு கடற்கரையின் அமைதியான இடத்தில் அலைகளைப் பார்ப்பது என்னவொரு ஆனந்தம். இந்த ஒரு காரணத்திற்காகவே சென்னையில் இருக்க கூடாதா என்ற ஏக்கம். நான் எந்த ஊருக்குப் போனாலும் அங்குள்ள திரையரங்குகளுக்கு செல்வதை அதிகம் விரும்புவேன். மாயாஜாலும் அதிலிருந்து தவறவில்லை. "நாடோடிகள்" பார்க்க கூட்டிப் போகிறேன் என்று சொன்னவள், "Love Aaj Kal" டிக்கெட்டுடன் வந்தாள். சுப்ரமணியபுரம் மிஸ் ஆனது போலவே நாடோடிகளும் மிஸ்ஸிங். :( ஏமாற்றம் ஒருபுறம் எனினும் Love Aaj Kal இரண்டாம் முறை பார்த்ததும் அருமை. படத்தின் வசனங்கள் மற்றும் காட்சியமைப்புகளை கையில் ஒரு 7 Up ஐ சுவைத்துக் கொண்டே மாயாஜாலில் ரசித்ததும் அழகு தான்.

பின் பெங்களூரில் ஒரு நாள். வேலை எதுவும் இல்லையெனினும், ஒரு மாதத்திற்குப் பின் யோகியைப் பார்க்க சென்றேன். ஒரு மாதக் கதைகளை அவரிடமும் சொன்னால் தானே தமிழ்நாட்டு சாப்பாடு செரிக்கும். ஒரு நாள் எனக்கு செவி கொடுத்தவர் அடுத்ததாக சர்ப்ரைஸாக ஊட்டி டிக்கெட்டையும் கொடுத்தார். So, next pack up to Ooty.ஒரு மாத அலைச்சலுக்குப் பின் நான்கு நாட்கள் ஊட்டியில் ஓய்வு. ரம்மியமான காலநிலையை, மலை உச்சி Resort இலிருந்து தேயிலைச் செடிகளைப் பார்த்துக் கொண்டே காபி கோப்பையுடன் மனதிற்குப் பிடித்தவருடன் அமர்ந்து ரசிப்பது எத்தனை இன்பம். ஊட்டி எனக்கு முதல் முறை. வட நாட்டிலிருக்குமளவு குப்பைகளில்லாத சுற்றுலா இடம். இதைப் பற்றி தனியாகவே எழுத வேண்டும்.

இறுதியாக ஒரு மாதம் கழித்து டெல்லியில் இறங்கிய போது சாலைகள், மொழி, இடம், மக்கள் எல்லாம் வித்தியாசமாய், பிரம்மாண்டமாய் ஆனால் வெறுப்பாய் இருந்தது. என்ன செய்ய.... மனதிற்குப் பிடித்ததே எப்போதும் நம்முடன் இருந்து விட்டால், அதன் மதிப்பு குறைந்து விடும். நல்ல, இனிமையான விஷயங்கள் தூர இருப்பதே அழகு. மொத்தத்தில் அழகான பயணம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் அழகாய்ப் போனது. என் மேல் அக்கறை கொண்ட அனைத்து இனியவர்களுக்கும், நன்றி என்ற ஒற்றைச் சொல் போதாது. உங்களை விட அதிகம் இனிமையாய் இருக்க எப்போதும் முயற்சிக்கிறேன்.

23 comments:

பிரபா said...

என்னங்க பன்றது நம்மால் முடிஞ்ச விசயங்கள சொல்லலாம் ......
என்னென்னு ஒரு தடவ வந்து பாருங்கோவன்,
பிடிச்சிருந்தால் ஒருத்தருக்கிட்ட சொல்லுங்க, பிடிக்கலையா ஒரு 10 பேருக்காவது
சொல்லி போடுங்க....!!!

☼ வெயிலான் said...

ஒரு மாசச்சுற்றை ஒரே பதிவுல முடிச்சிட்டீங்க?

இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் கோவை/திருப்பூரைப் பற்றி.

இய‌ற்கை said...

ஒரு மாசப் பயணம்க்கு ஒரு 4 தொடருமாவது போட வேண்டாமா...? என்ன விக்கி நீங்க‌

கார்ல்ஸ்பெர்க் said...

//"வசீகரா" படத்திற்குப் பின் நானும் அவளும் சேர்ந்து//
-அட, நம்ம ஆளா நீங்க? :)

//டெல்லியிலிருந்து கோவையில் இறங்கிய அந்த நிமிடம் சொர்க்கமாக தெரிந்தது//
- கோவை என்றுமே சொர்க்கம் தான்.. அதுவும் கல்லூரி வாழ்க்கைக்கு கோவையை மிஞ்ச எந்த ஊரும் கிடையாது..

//மனதிற்குப் பிடித்ததே எப்போதும் நம்முடன் இருந்து விட்டால், அதன் மதிப்பு குறைந்து விடும்//
- இந்த வரிகளை எனது அடுத்த பதிவிற்கு உபயோகப்படுத்திக் கொள்ள அனுமதி ப்ளீஸ்..

விக்னேஷ்வரி said...

வாங்க பிரபா. பார்த்திட்டு சொல்லிடுவோம்.

திருப்பூர்லேயே இருக்குற உங்களுக்கு தெரியாதா திருப்பூர் பத்தி, நான் என்ன சொல்ல வெயிலான்?

போடலாம் தான். நேரமில்லை இயற்கை.

வாங்க கார்ல்ஸ்பெர்க்

அட, நம்ம ஆளா நீங்க? :) //
உங்க ஆளா...... எங்க ஆளு இதைக் கேட்டா டர் ஆகிடப்போகுது. ;)

கண்டிப்பா. எந்த ஊர்ல செட்டில் ஆகனும்னு என்னைக் கேட்டா கோவை தான் என் சாய்ஸ்.

அனுமதியெல்லாம் கேக்கனுமா... எடுத்துக்கோங்க பா.

துபாய் ராஜா said...

அழகான பயணங்கள் தொடர வாழ்த்துக்கள்.

T.V.Radhakrishnan said...

பயணங்கள் தொடர வாழ்த்துக்கள்

pappu said...

நீங்க எல்கெஜி போனதிலிருந்து உங்க பையன் எல்.கே.ஜி. போனது வரைக்கும் வந்து ஒவ்வொரு ஆளா பர்சனலா ரீவைண்ட் பண்ணி கண்பிச்சுட்டு போயிருக்கீங்க போலயே!

Anonymous said...

ஒரு மாத விஷயங்களை ஒரே பதிவுல அடக்கிட்டீங்க. நானும் கோவைல தான் செட்டில் ஆகற முடிவுல இருக்கேன்.

கார்க்கி said...

/இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் கோவை/திருப்பூரைப் பற்றி.//

ஏதாவ்து ஸ்பெஷல் இருந்தா அவங்களே எழுத போறாங்க!!!! :))

ஒரு வழியா சுத்தி முடிச்சாச்சா?

////டெல்லியிலிருந்து கோவையில் இறங்கிய அந்த நிமிடம் சொர்க்கமாக தெரிந்தது//
- கோவை என்றுமே சொர்க்கம் தான்//

உங்களுக்கு எப்படியோ, ஆனா கோவைக்கு சந்தோஷமா?

நல்ல வேளை புயல் ஆந்திரா பக்கம் ஒதுங்கல

கார்க்கி said...

லவ் ஆஜ் கல் நல்லா இருந்துச்சா?

ஆவ்வ்வ்.. எனக்கு பிடிக்கல :))

நானும் நாடோடிகள் மிஸ் பண்ணிட்டே இருக்கேன்

SanjaiGandhi said...

இவ்ளோ தானா?.. இன்னும் எதிர் பார்க்கிறோம். :)

பரிசல்காரன் said...

திருப்பூரின் அருமை பெருமைகளைப் பற்றி எழுத நேரமில்லாததால்தான் டக்கென்று முடித்துக் கொண்டீரா?

அது சரி!

Kumar.B said...

expected a elaborate narration but got over within a paragraph. anyhow it was crisp

வித்யா said...

எக்ஸ்பிரஸ் ரயில் மாதிரி தடதடக்கிறது:)

kanagu said...

parava illa... vazhiya kandupudichi vandhuteenga..

kaanama poiteengalono.. romba bayanthuten :)))

padhivu arumai... 1 madha nigazhva super ah solliteenga.. :)))

சந்தனமுல்லை said...

வாழ்வின் ரசனைகளை, நிறைய விஷயங்களை உள்ளடக்கியிருக்கிறது இந்த இடுகை!! :-))

Anonymous said...

நல்ல டிரிப்.... கடைசி வரிகள் நச் உண்மை உண்மை உண்மை

♫சோம்பேறி♫ said...

மனோ நேம் நல்லா இருக்கு.. :)

உங்க அம்மா என்னைப் பத்தி புகழ்ந்ததை, நைசாக மறைத்ததை வன்மையாக கண்டிக்கிறேன்..

ரிதன்யா said...

அடடா நான் போனமாசம் டெல்லி வந்து 4 நாள் அந்த கொடுமைய அனுபவிச்சேன், 2 நாள் வெயில், ஒரு நாள் இரவு 2 மணி வரை மழை மறுபடி ஒரு நாள் வெயில். அதுக்குப்பிறகு கோவை ஏர்போர்ட் வந்து இறங்கியதும் சொர்க்கத்திலதான் இருந்திருக்கோம்னு நம்பிக்கை.

எம்.எம்.அப்துல்லா said...

//வீட்டிலிருந்து இரண்டு நாட்கள் சென்னை. //

நாங்கள்லாம் இங்க இருக்குறது ஞாபகம் இருக்கா???

விக்னேஷ்வரி said...

நன்றி துபாய் ராஜா.

நன்றி ராதா கிருஷ்ணன்.

வாங்க பப்பு.

அவ்வளவு தானே இருக்கு அம்மணி. ஆமாங்க, கோவைல செட்டில் ஆகுறதை விட இன்பம் வேறெதுவும் இருக்க முடியுமா...

முடியல கார்க்கி. அடுத்த ரவுண்டு சீக்கிரமே ஆரம்பமாகிடும்.
கோவைக்கு சந்தோஷமானு நண்பர்கள் கிட்ட தான் கேக்கணும்.
லவ் ஆஜ் கல் எல்லாருக்கும் பிடிக்காது. எனக்குப் பிடிச்சது.

ஏன் சஞ்சய் இப்படியெல்லாம்....

நீங்கள்லாம் இருக்கும் போது நான் என்ன எழுத பரிசல்.

Thank you Kumar.

வாங்க வித்யா, ரொம்ப நாளைக்கப்புறம்.

எங்கே போனாலும் திரும்பி இங்கே வந்து தானே ஆகணும் கனகு.
உண்மைய சொல்லுங்க, காணாம போயிட்டேன்னு மகிழ்ந்தீங்களா, பயந்தீங்களா... ;)
நன்றி கனகு.

நன்றி முல்லை.

வாங்க தமிழரசி.

ஹிஹிஹி.... புகழ்ச்சியெல்லாம் நமக்கு சாதாரணம் மனோ.

என்ன தான் அசவுகரியங்கள் இருந்தாலும் எனக்கு டெல்லி ரொம்ப பிடிக்கும் ரிதன்யா. ஆனாலும் கோவைக்கு நிகர் இல்லை தான்.

நீங்கள்லாம் அங்கே இருக்கீங்கன்னு தெரியும். ஆனா, கோயம்பேடுல இறங்கி அப்துல்லா னு கத்தினா நீங்க வந்துடுவீங்களா?

எம்.எம்.அப்துல்லா said...

//நீங்கள்லாம் அங்கே இருக்கீங்கன்னு தெரியும். ஆனா, கோயம்பேடுல இறங்கி அப்துல்லா னு கத்தினா நீங்க வந்துடுவீங்களா?

//

யாரு கத்தச் சொன்னா?? ஒரு மெயில்வுட்டுருந்தா கூவிகினு நாங்களே வந்துருப்போம்ல சிஸ் :))