Sunday, August 15, 2010

வளரும் இந்தியா - புதிய விமான முனையம் IGI T3


விளையாட்டுத் திரையரங்கம், தங்கும் விடுதி, ஓய்வறை, குளியலறை, ஷாப்பிங் கடைகள் என அனைத்து வசதிகளும் குறைவில்லாமல் கிடைக்கின்றன. எங்கே? ஒரு நகரின் மையப்பகுதியில் என நீங்கள் நினைத்தால் இல்லை. நம் இந்தியத் தலைநகரின் விமான நிலையத்தில் போனமாதம் திறக்கப்பட்ட மூன்றாவது முனையத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் சௌகரியங்கள்தான் இவை.


ஜூலை மூன்றாம் தேதி டெல்லி விமான நிலையத்தின் மூன்றாம் முனையம் பிரதமர் திரு. மன்மோகன்சிங் மற்றும் திருமதி. சோனியாகாந்தியால் தொடங்கப்பட்டது. உலகத்தர சேவையை அளிக்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ்விமான முனையத்தில் பயணிகளின் சாமான்கள் உள்ளிட்ட மொத்தப் பரிசோதனைக்குமான நேரம் பத்து நிமிடங்களுக்கும் குறைவாயிருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளதாக DIAL (Delhi International Airport Pvt. Limited) அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இப்பரிசோதனைகள் முடிந்த பின் பயணிகள் விமானத்தை அடையும் தூரம் வரையிலும் வழி நெடுக கடைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவற்றில் புத்தகக் கடைகள், முண்ணனி நிறுவன ஆடை நிறுவனங்கள், பரிசுப் பொருட்களுக்கான கடைகள், பிரத்யேக உணவகங்கள் ஆகியவை அடங்கும்.

சிறப்புக் கட்டமைப்புகள்

இந்த முனையம் முழுவதும் புகை பிடிக்க அனுமதியில்லா வண்ணம் அமைந்திருந்தாலும் புகைப்பவர்கள் வசதிக்காக தனிப் புகையறைகளுடன் கட்டப்பட்டுள்ளது. இங்கிருக்கும் விளையாட்டுத் திரையரங்கில் நடப்பு விளையாட்டுகள் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருப்பதுடன் அங்கேயே பார்வையாளர்களுக்கு/பயணிகளுக்கு ஏற்ற மதுபான வகைகளும் கிடைக்கும். விருப்ப பானத்தை அருந்திச் சுவைத்தவாறே ஸ்கோர்களுக்கு ஆரவாரித்து மகிழலாம். நேரத்தைக் கொல்லும் விதமாக இருக்கையில் அமர்ந்து கொண்டே தூங்கும் பயணிகளுக்கென சிறப்பு ஓய்வறைகளும், தயாராகிச் செல்ல வேண்டிய பயணிகளுக்கு குளியலறைகளும் உள்ளன. குழந்தைகளை வைத்துக்கொண்டு அல்லாடும் அம்மாக்களை ஆசுவாசிக்கும் வகையில் குழந்தைகளுக்கென தனி விளையாட்டுப் பகுதியும் திறக்கப்பட்டுள்ளது.


டெல்லியை அடையும் பயணிகள் விமானத்திலிருந்து இறங்கி பேருந்தில் விமான நிலையத்தை அடைவது வழக்கம். இப்புதிய T3 (Terminal 3) முனையத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் 78 அதிநவீன ஏரோ ப்ரிட்ஜ்களின் உதவியால் 90% பயணிகள் நேரடியாக விமானத்திலிருந்து முனையத்தை அடையலாம்.

பிரதமர் உரை

முனையத்தைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றிய பிரதமர் மன்மோகன்சிங் விரிந்த பரப்பில் அமைக்கப்ப்ட்டிருகும் மூன்றாவது முனையத்தைப் பிரம்மிப்புடன் பார்த்துப் பூரிப்புடன் உரையை ஆரம்பித்தார். “இம்முனையம் அரசு-தனியார் துறைகளின் கூட்டு முயற்சியால் உருவானது. தனியார் துறையில் ஒப்படைக்கப்படும் வேலைகள் கனகச்சிதமாக நிறைவுறுவதை நிரூபிக்கும் வண்ணம் இம்முனையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 58க்கும் மேற்பட்ட அரசுத் துறைகள் இக்கட்டுமானப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. அதன் பலன் இப்போது நம் கண் முன் பிரம்மாண்டமாக எழுந்துள்ளது.”
இவ்வாறாக T3 முனையத்தைப் புகழ்ந்ததோடு அதனாலான இந்தியாவின் வளர்ச்சி பற்றியும் பேசினார். “குறுகிய காலத்தில் கட்டப்பட்ட T3 முனையம் உலகின் 8ஆவது பெரிய முனையமாகத் திகழ்வது மகிழ்ச்சிக்குறியது. இது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றும். மற்ற நாட்டு விமானங்கள் இந்தியா வழி பறப்பதும், இந்தியப் பெரு நகரங்களில் நின்று செல்வதும் அதிகரிக்கும். இதனால் இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை வரும் வருடங்களில் கணிசமாக உயரும்.”

திருமதி.சோனியா காந்தியின் உரை

”காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான நாள் நெருங்கும் நிலையில் டெல்லியின் இம்மூன்றாவது முனையம் தரமானதாகவும், நேர்த்தியாகவும் தயாரானது பெருமைக்குரிய ஒன்று. இதே தரம் இந்தியாவின் அனைத்துப் போக்குவரத்துகளிலும் உள்கட்டமைப்புகளிலும் வர வேண்டும். டெல்லி மெட்ரோ ரயில் இதற்கு ஒரு சான்று. இன்றைய தேதியில் டெல்லி மெட்ரோவால் பயனடைந்துள்ள சாமானியர்கள் லட்சக்கணக்கானோர். இப்படிப்பட்ட இந்தியாவின் வளர்ச்சிகளைக் கண்முன்னால் சாத்தியமாக்குவது மகிழ்ச்சிக்குரியது” என காங்கிரஸ் தலைவர் திருமதி. சோனியாகாந்தி உரையாற்றி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

புதிய முனையத்தின் சிறப்பம்சங்கள்

* ஜூலை 3 ஆம் தேதி திறக்கப்பட்ட தலைநகரின் விமான நிலைய மூன்றாவது முனையம் ஜூலை 14 முதல் வெளிநாட்டு விமானங்களுக்கான சேவையைத் தொடங்கியது.
* உள்நாட்டு விமானங்களுக்கான சேவை ஜூலை 30 முதல் ஆரம்பமானது.
* லட்சக்கணக்கான மரக்கன்றுகள் முனையத்தைச் சுற்றிலும் நடப்பட்டுள்ளன.
* கைப்பைக்கான சோதனைக்கு 41 எக்ஸ்ரே மெஷின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒரு மணி நேரத்தில் 12,800 கைப்பைகள் சோதனைப்படுத்தப்படலாம்.
* 6 பொது நுழைவு வாயில்களும் 168 செக்கின் கவுண்டர்களும் 78 கேட்களும் திறக்கப்பட்டுள்ளன.
* உள்ளே தங்கும் விடுதிகளில் கட்டப்பட்டுள்ள மொத்த அறைகள் 100. இவற்றில் 68 அறைகள் உள்நாட்டுப் பயணிகளுக்கும் 32 அறைகள் வெளிநாட்டுப் பயணிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
* 5.5 மில்லியன் சதுர அடி பரப்பிலான மொத்த இடத்தில் 2,15,000 சதுர அடி பரப்பில் வர்த்தக வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன. இங்குள்ள வாகன நிறுத்துமிடத்தின் கொள்ளிடம் 4300 கார்கள்.
* 97 தானியங்கித் தரை நகர்வுகள் (travelators) கொண்டுள்ள மூன்றாவது முனையத்தின் நீளமான தரை நகர்வு 118 மீட்டர் ஆகும்.
* இம்முனையம் 63 லிஃப்ட்களும் 34 தானியங்கி படிகளும் (escalators) கொண்டுள்ளது.


இம்முனையம் கட்ட செல்வழிக்கப்பட்ட மொத்தத் தொகை 2.7 பில்லியன் டாலர்.

டெல்லி T3 முனையம் - மற்ற உலக விமான முனயங்களுடன் ஒப்பீடு

உலகின் 8ஆவது மிகப்பெரிய விமான முனையமாகத் திகழ்கிறது நம் பாரதத்தின் புது முனையம். இது துபாயின் மூன்றாவது முனையத்தை அடுத்த இடமாகும். முதல் ஆறு இடங்களில் முறையே துபாயின் முதல் முனையம், பார்சிலோனா, மெக்ஸிகோ, பாங்காக், ஹாங்காங், பீஜிங் ஆகியவை உள்ளன.

சமீபத்தில் திறக்கப்பட்ட சிங்கப்பூர் மற்றும் லண்டன் விமான முனையங்களுடன் ஒரு சிறிய ஒப்பீடு.

சாங்கி விமான நிலையம் முனையம் 3, சிங்கப்பூர் - கட்ட ஆரம்பிக்கப்பட்ட வருடம் - 1999; கட்டி முடிக்கப்பட்ட வருடம் - 2008; மொத்தக் கொள்ளளவு - வருடத்திற்கு 22 மில்லியன் பயணிகள்; மொத்தப் பரப்பு - 4.1 மில்லியன் சதுர அடி.

ஹெத்ரோ விமான நிலையம் முனையம் 5, லண்டன் - கட்ட ஆரம்பிக்கப்பட்ட வருடம் - 2002;
கட்டி முடிக்கப்பட்ட வருடம் - 2008; மொத்தக் கொள்ளளவு - வருடத்திற்கு 30 மில்லியன் பயணிகள்; மொத்தப் பரப்பு - 3.8 மில்லியன் சதுர அடி.

இந்திரா காந்தி இண்டர்நேஷனல் விமான நிலையம் முனையம் 3, இந்தியா - கட்ட ஆரம்பிக்கப்பட்ட வருடம் - 2007;
கட்டி முடிக்கப்பட்ட வருடம் - 2010; மொத்தக் கொள்ளளவு - வருடத்திற்கு 34 மில்லியன் பயணிகள்; மொத்தப் பரப்பு - 5.5 மில்லியன் சதுர அடி.

சமீபத்தில் உலகில் கட்டப்பட்ட விமான நிலைய முனையங்களிலேயே மிகச் சிறப்பாகக் கட்டப்பட்டது எனும் பெருமையை நம் இந்திய விமான முனையம் பெற்றுள்ளது.

மெருகேறி வரும் தலைநகரின் சௌகரியங்கள்

டெல்லியின் பெரும்பாலான பகுதிகளில் செயல்பட்டு வரும் டெல்லி மெட்ரோ ரயில் விரைவில் டெல்லி விமான நிலையத்திற்கும் இயக்கப்பட உள்ளது. தவிர இம்மெட்ரோ ரயில் அதி விரைவு வண்டியாக மணிக்கு 90 கிமீ வேகத்தில் செயல்படுமாறும், மிகக் குறைவான இடங்களில் நின்று செல்லும் விதமும் இயங்க இருக்கிறது. இதன் மூலம் டெல்லியின் மையப் பகுதியான கனாட் ப்ளேசிலிருந்து (CP) டெல்லி விமான நிலையத்தை 20 நிமிடங்களில் அடையலாம். இப்போதிருக்கும் போக்குவரத்து நெரிசல்களில் இவ்விரு இடங்களுக்குமிடையேயான பயண நேரம் சாலை வழியாக சென்றால் குறைந்தது ஒரு மணி நேரம். இது தவிர பயணிகளுக்கான போர்டிங் பாஸும் கனாட் ப்ளேஸ் மெட்ரோ நிலையத்திலேயே கிடைக்குமாறும் வசதிகள் வர இருக்கின்றன. பயணிகளிடையே நிச்சயம் அதிக வரவேற்பைப் பெற இருக்கும் திட்டங்கள் இவை. கூடுதலாக மணிக்கு 135 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் மெட்ரோ ரயில்களும் டெல்லியில் இயக்கப்பட உள்ளன.

புதிய மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகள், மயக்கும் வர்த்தகக் கட்டிடங்கள், அதிகக் கொள்ளளவு கொண்ட அதி விரைவுப் பேருந்துகள், குளிர் சாதன வசதி செய்யப்பட்ட இடை நில்லாப் பேருந்துகள், மீட்டர் பொருத்தப்பட்ட ஆட்டோக்கள் என மெருகேறியிருக்கும் வசதிகள் ஏராளம்.

தலைநகர் என்ற அந்தஸ்தில் நிச்சயம் அதன் தனித்துவத்திற்கும் உள் கட்டமைப்புகளுக்கும் பாதுகாப்பிற்கும் குறைவில்லை தான். நாட்டின் வளர்ச்சி தலைநகரிலிருந்து ஆரம்பமாகிறது என்பது மிகச்சரியானது. இம்மாற்றம் விரைவில் நாடு முழுவதும் வளம் கொழிக்கச் செய்யும் வளர்ச்சியாக மாறட்டும்.

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.

25 comments:

Unknown said...

நல்பதிவு.
காமன் வெல்த் போட்டிகளுக்காக விமான நிலையம் ரெடி. விளையாட்டு மைதானங்கள் தான் இன்னு ரெடியாகவில்லை.

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

அதுத்து எப்போ இந்தியா வந்தாலும், தலைநகர் ட்ரிப் உண்டுங்க விக்னேஸ்வரி.

வினோ said...

விக்கி, அருமையான பதிவு.. நிறைய விசயங்கள்.. மிக்க நன்றி..

R. Gopi said...

இந்த முனையத்த வெறுமனே சுத்தப் பாக்க அனுமதிப்பாங்களா?

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமையான பதிவு.. நிறைய விசயங்கள்..

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

Menaga Sathia said...

thxs for useful information...Happy Independence Day!!

அன்பரசன் said...

useful one...
nice..

Kannan.S said...

ஏனுங்க..
வரிக்கு வரி முனையம்னு தமிழ்ல எழுதிட்டு கரன்சி மட்டும் ஏன் 2.7 பில்லியன் டாலர்??

Cable சங்கர் said...

ஒரு நடை டெல்லிக்கு பறப்போமா..?

ReeR said...

ஒரு வாரம் பார்க்காம விட்டா போதுமே இஷ்டத்துக்கு எழுதிட்டு பேயிட்டே இருக்கீங்க ....

லொள்ளு....

சுப்பர் ...

அனைத்து பதிவுகளும் படிக்கத் துண்டின . குறிப்பாக தமிழ் வலைபூக்கள் என்னை அதிகம் கவர்ந்தது.

மார்கண்டேயன் said...

சுதந்திர தின நல்வாழ்த்துகள், 2008 இல் மிகுந்த சிரமங்களுக்கிடையே, தலைநகர் விமான நிலையத்தை கடந்தேன், இன்று அது தரமிக்க சேவையை ஆரம்பித்துள்ளதை அறிந்து, மிக்க மகிழ்ச்சி

நப நவி (வி = விக்னேஸ்வரி)

அமுதா கிருஷ்ணா said...

விஷயங்கள் நிறைய தெரிந்துக் கொள்ள உதவியது..

வெங்கட் நாகராஜ் said...

முழு விவரங்களுடன் அருமையான பதிவு. சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.

வெங்கட்.

CS. Mohan Kumar said...

சுதந்திர தினம் முன்னிட்டு நாம் பெருமை படும் விதமா விஷயங்கள் பகிர்ந்துள்ளீர்கள் நன்றி

Thamira said...

விரிவான, இன்ஃபர்மேடிவ் கட்டுரை.. சுதந்திர தினத்துக்குப் பொருத்தமாக. நன்றி.

தராசு said...

ஜூப்பர்...

'பரிவை' சே.குமார் said...

அருமையான பதிவு... மிக்க நன்றி.

vinu said...

oopa ithu unga pathivu thaaana neathaikku ingana vanthu ellathaiyum padichuttu time aayudichhunnu poittean innaikku vanthu thirumbavum unga blog innum padikkalaiyeannu oru feelingla vanthu thiranthu paarthaa..........

T3 standing talll.

nice details pa soon i will go and meet our new proerty[i meant this is belongs to all indians right]

கமலேஷ் said...

அருமையான பகிர்வு தோழி..

மிகவும் விரிவான தகவல்கள்..

நன்றி.

'பரிவை' சே.குமார் said...

முழு விவரங்களுடன் அருமையான பதிவு.

GUNA said...

வணக்கம்,விக்னேஸ்வரி.

உங்கள் ப்ளாகில் இப்போதுதான் முதல் கமன்ட் எழுதுகிறேன்,
சென்ற வாரம் பணி நிமித்தமாக டெல்லி சென்றிருந்தேன்(Gurgaon மாருதி சுசிகிக்கு),டெல்லி ஏர்போர்ட்டை பார்த்து வியந்தேன்.அது சம்பந்தமாக செய்திகளை வலைதளங்களில் தேடிகொண்டிருந்தபோது தற்செயலாக உங்கள் ப்ளாகில் நுழைந்தேன்.டெல்லி ஏர்போர்ட் பற்றி நிறைய தகவல்கள் கண்டேன்.நன்றி!

மேலும் உங்கள் எழுத்துகளில் ஓர் புதுமையும் கண்டேன்.நண்பர்களிடம் பேசி பகிர்வதுபோல் உங்கள் எழுத்து நடை,நன்று.உங்கள் எழுத்து என்னுள் தாக்கத்தை ஏற்படுத்த மேலும் சில காரணங்கள் உண்டு.
எனது சொந்த ஊர் விருதுநகர்,நான் படித்தது விருதுநகர் பாலிடெக்னிகில் இயந்திரவியல்.மேலும் பேச்சு போட்டிகளில் மாவட்ட அளவில் முதல் மாணவன்.ம்ம்ம் அதுல்லாம் அப்போ...இப்போ கார் கிளட்ச் தயாரிக்கும் கம்பனியில் பிளான்ட் மேனேஜர்.ம்ம்ம்ம் எழுதறதும் ஓர் கலை.

சரிங்க,உங்க எழுத்துக்கு என் வாழ்த்துக்கள்.நிறைய எழுதுங்கள்.அவ்வப்போது உங்கள் ப்ளாக் வருகிறேன்.

முடிக்கும் முன் ஒரு விஷயம்,நான் படிக்கும் போது சிவகாசி அய்யா நாடார் ஜானகி அம்மாள் பள்ளியில் நடந்த மாவட்ட அளவிலான பேச்சு போட்டியில் கொடுக்கப்பட்ட தலைப்பு 'காக்கை குருவி எங்கள் ஜாதி'.இந்த தலைப்பில் பேசி வென்ற நாள் என்னை எனக்கே அறிமுகபடுத்திய நாள்.
நீங்கள் இந்த தலைப்பில் ஓர் பதிவு எழுதுங்களேன்.

நன்றி.

janaki said...

hello enna aache oru pathivu podalame

சாமக்கோடங்கி said...

நல்லதொரு தகவல்..

commomeega said...

பதிவு நல்லா இருக்கு

Vijiskitchencreations said...

நல்ல பதிவு. நிறய்ய விளக்கங்களுடன் பட்ங்களோடும் அருமையான பதிவு.
நீண்ட நாட்கள் அவ்வளவு ஏன்.மாதங்கள் கழிந்து இங்கு வந்ததில் மகிழ்ச்சி.