சமீபத்திய வாசிப்பில் என்னை வெகுவாகப் பாதித்த எழுத்து பாலசந்திரன் சுள்ளிக்காடுடையது. அழுத்தமான எழுத்து, ஆத்மார்த்தமான உணர்வு, இது தான் நான் என உரக்கச் சொல்லும் துணிவு, கூனிக் குறுகும் குற்ற உணர்ச்சி, நிமிர்ந்து பெருமிக்கும் மிடுக்கு, கையாலாகாமல் நிற்கும் மன வேதனை, எழுத்தின் மீதிருக்கும் பிடிப்பு, வாழ்க்கை மீதான ரசனை, அதன் விளைவாயான எழுத்து, கவிதைகள், அப்பாவை எதிர்த்து எழும் தான்தோன்றித் தனமான விடலைப்பருவம், அழகிய யுவதிகளின் மேல் கொள்ளும் ஆசை, விலைமகளிடம் பார்க்கும் தாய்மை, ரத்தம் கொடுத்துப் பணம் பெற்றுதவும் ஏழ்மை என வாழ்வின் அத்தனை முகங்களையும் அனாயசமாகச் சொல்லிச் சென்றிருக்கும் ஒரு அருமையான பொக்கிஷம் இவரின் சிதம்பர நினைவுகள்.
புத்தகத்தின் பெயரைப் பார்த்ததும் புத்தகம் முழுக்க சிதம்பரம் நகரின் சிறப்புகளும் நினைவுகளுமிருக்கும் என நினைத்திருந்தேன். ஆனால் வாழ்வின் அத்தனை அர்த்தங்களையும் எளிமையாய் எடுத்துக் காட்டியிருக்கிறது இந்நூல். நூலாசிரியர் பாலசந்திரன் சுள்ளிக்காடையும், மொழிபெயர்ப்பாளர் ஷைலஜாவையும் பற்றிய ஒரு சிறு அறிமுகத்திற்குப் பின் புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டுவோம்.
பாலசந்திரன் சுள்ளிக்காடு - நூலாசிரியர்
1957 ஆம் வருடம் கொச்சிக்கருகிலிருக்கும் பரவூரில் பிறந்த பாலசந்திரன் தன் கவிதைகளின் மூலம் பெரிதும் அறியப்படுகிறார். பதினெட்டு கவிதைகள், அமாவாசி, கஸல், ட்ராகுலா ஆகிய கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். ஹிந்தி, பெங்காலி, தமிழ், அஸ்ஸாமி, பஞ்சாபி, மராத்தி, கன்னடம் போன்ற இந்திய மொழிகளிலும் ஆங்கிலம், ஃப்ரெஞ்ச், ஸ்பானிஷ், ஸ்வீடிஷ் ஆகிய உலக மொழிகளிலும் இவரது கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆச்சரியமான ஒரு விஷயம், இலக்கியத்தின் பெயரால் தரப்படும் எந்த விருதையும் பணத்தையும் இவர் பெறுவதில்லை. நிராகரித்துள்ளார். தற்போது மனைவி விஜயலக்ஷ்மியோடும், மகன் அப்புவோடும் எர்ணாகுளத்தில் வசிக்கிறார்.
ஷைலஜா பவா செல்லத்துரை - தமிழில் மொழிபெயர்ப்பு
இவர் பெயரே போதும் இவரைப் பற்றி அனைவரும் அறிய. தனியார் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளரான இவர் சிறந்த மொழிபெயர்ப்பாளராக அறியப்படுகிறார். பாலசந்திரன் சுள்ளிக்காடின் கட்டுரைகளுடன் இவருக்கு ஏற்பட்ட அறிமுகத்தையும், அதன் பின் அவர் எழுத்துகளின் மீதேற்பட்ட மரியாதை அவரை நேரில் அழைத்துப் பேசும் உத்வேகமாக மாறி அவரின் நூலை மொழிபெயர்க்குமளவுக்கு ஆன ஆர்வமாக மாறியதெப்படி என அவரே இந்நூலில் ஒரு சிறு முன்னுரை அளித்துள்ளார். கணவர் பவா செல்லத்துரை, மகன் வம்சி, மகள் மானசியோடு திருவண்ணாமலையில் வசிக்கிறார்.
இனி புத்தகத்திற்குள்
அருமையான ஆழமான சிதம்பர நினைவுகளிலிருந்து ஆரம்பிக்கிறது நம்மை ஆக்ரமித்துக் கொள்ளப் போகும் அனுபவம் பொதிந்த எழுத்து. மொத்தம் 21 வாழ்வியல் கட்டுரைகளைக் கொண்டுள்ள இப்பொக்கிஷத்தின் கட்டுரை வரிகளே சொல்லும் அவற்றை வாசிக்கும் பேரானந்த அனுபவத்தை.
சிதம்பரம் கோவில்களில் யாரையுமறியாது அதன் அழகில் லயித்துப் போய் தங்கியிருக்கும் நாளில் கட்டுரையாசிரியர் சொல்கிறார், “கோவிலில் எல்லாவற்றையும் பார்த்து முடிக்கப் பல நாட்களாகும். பல நாட்கள் தங்கிப் பார்க்க அவ்வளவு பணம் இல்லை. பிச்சை எடுக்க வேண்டியிருக்கும். பரவாயில்லை, பிச்சையெடுத்தாவது எல்லாவற்றையும் பார்க்க வேண்டும்”. சிற்பங்களின் மீதான காதலையும், வாழ்வின் மீதான் அலட்சியத்தையும் பிரதிபலிக்கும் வரிகளிவை.
அப்பாவுடன் வாதிட்டு வீட்டை விட்டு வெளியேறி தனியே அல்லல்பட்டும் வீடு திரும்பாத நாளில் அப்பாவின் மரணச் செய்தியை அறியும் பொழுதில் வாசித்திருக்கும் கவிதை எப்படியிருக்கும்.. “என் மன அவஸ்தை அறியாத மேடையில் நின்று, நொறுங்கின இதயத்துடன், நான் கவிதை வாசித்து முடித்தேன், நீண்ட கர கோஷத்தின் அர்த்த சூன்யம் அன்றெனக்குப் புரிந்தது.”
திமிராய் மிரட்டி வாங்கிய முத்தத்தின் சுகம் எத்தகையது.. அப்படி வாங்கிய பெண்ணை பல வருடங்கள் கழித்துத் தீயில் கருகிய உயிராய்ப் பார்க்க நேர்ந்தால் ஏற்படும் குற்ற வலி எத்தகையது.. அப்பெண்ணைத் தனியாய் அழைத்து என்ன பரம ரகசியத்தை அவர் கூறியிருக்க முடியும்... “சாஹினா பதில் சொல்ல ஆரம்பிக்கும் முன்பு நான் தீயால் வெந்து சுருண்டிருக்கும் அவளது கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டேன். அவள் ஸ்தம்பித்து நின்றாள். அவளை முன்பு வேதனைப்படுத்தி வாங்கியதை நான் திருப்பித் தந்து விட்டேன்”
பால்ய நண்பனைப் பைத்தியமாய்ப் பார்த்துவிட்டு ஒன்றும் செய்ய முடியாமல் விட்டு விட்டு வந்து சில நாட்கள் கழித்து அவன் இறப்புச் செய்தியைக் கேட்கையில் வரும் குற்ற உணர்வை நம்மில் எத்தனை பேர் வெளியில் சொல்ல முடியும்.. இவர் சொல்கிறார். “சில மாதங்களுக்குப் பிறகு பட்டினி கிடந்து, கிடந்து மோகனன் இறந்து விட்டான். நான் ஒரு துக்கப் பெருமூச்சு விட்டேன். அது மட்டுமே, அது மட்டுமே, செய்ய முடிந்த பாவியானேன் நான்.
ஓணத் திருநாளில் கையில் காசின்றி நண்பனுடன் விறைப்பு காட்டி கால் போகும் போக்கில் நடந்து பசி மயக்கத்தில் ஒரு வீட்டில் பிச்சைக்காரனாய் பாவிக்கப்பட்டு உணவுண்ணும் வேளையில் அங்கிருக்கும் பெண்ணொருத்தி இவரை அடையாளம் காண்கையில் ஏற்படும் அவமானம் எப்படியிருக்கும்.. மானமா.. பசியா.. “உள்ளேயிருந்து அந்தப் பெண் தன்னை அடையாளம் கண்டு கொண்டு குடும்பத்தாருடன் பேசிய சத்தம் வந்தது. கடவுளே! பாதி கூட சாப்பிடலையே, எழுந்து ஓடிவிடலாமா? - வேண்டாம், ஒரு இலை முழுக்க இருக்கும் சோற்றைத் தூக்கியெறியவா? மதிப்பும் மரியாதையையும் விடப் பெரியது பசியும் சோறும் தான். நான் சலனமின்றி சாப்பிட ஆரம்பித்தேன்”
இருபத்தி மூன்று வயதில் பட்டப்படிப்பு முடிக்காத நிலையில் இருபது வயதுப் பெண்ணை மணந்து அவள் கர்ப்பமாயிருப்பதை உணரும் தருணம் எவ்வளவு கொடுமையானது.. அக்கருவைக் கலைத்து விட்டு மனக் குமுறலுடன் கவிஞன் பாடுகிறான்
உலகின் முடிவுவரை பிறக்காமல்
போக இருக்கும் என் மகனே,
நரகங்கள் வாய் பிளந்தழைக்கும் போது
தவிப்போடு கூப்பிட யார் இருக்கிறார்கள்
உன்னைத் தவிர - ஆனாலும்
மன்னித்துவிடு என் மகனே.
(பிறக்காது போன என் மகனுக்காக)
இப்படியாக ஒவ்வொரு ஏற்றத்தையும், இறக்கத்தையும், கசப்பையும், வலியையும், அவமானத்தையும் புத்தகம் முழுக்க தூவிச் சென்றுள்ளார் ஆசிரியர். அவை வாழ்வியல் நிகழ்ச்சிகளாக இருக்கையில் நிச்சயம் வீரியமானவையாகவும் இருக்கின்றன.
கையில் காசின்றி ரத்தம் விற்றுக் காசு தேற்றப் போன இடத்தில் தங்கைக்காக அழும் அண்ணனின் கண்ணீர் கண்டு தன் இரத்தம் விற்ற பணத்தையும் அவன் கையில் கொடுத்து விட்டு வந்தவராய்...
இரவு ஸ்நேகிதியாய் வந்தவளை உடனழைத்துச் சென்று மனைவிக்கு அறிமுகம் செய்துவிட்டுத் தூங்கப் போன கனமான கணம் மறுநாள் அவள் கிளம்புகையில் கண்களை நிறைத்த கண்ணீராய்..
வருடந்தவறாமல் காவடி எடுத்துப் போகும் செட்டியாரின் மகன் இறந்து போன சோகத்தில் தைப்பூசத்தன்று சலனமில்லாமல் உட்கார்ந்திருக்கும் அய்யாவுச் செட்டியாரின் சோகமாய்..
ஒரு நேர சாப்பாட்டிற்காகவும், ஐந்து ரூபாய் கூலிக்காகவும் சிவாஜி கணேசன் நடித்த படத்தை கேரளத் தெருக்களில் விளம்பரம் செய்த மனிதன், முப்பதாண்டுகள் கழித்து அவரது வீட்டில் அவருடன் அருந்திய ஜானி வாக்கர் ப்ளாக் லேபில் விஸ்கியைப் பற்றி சிலாகித்த பூரிப்பாய்..
யாருமில்லாத தனிமையில் வீட்டிற்கு வரும் இளம்பெண்ணின் மீது சபலப்பட்டு இடையைப் பிடிக்க அவளிடம் அறை வாங்கிய அவமானமும் பின் அவள் காதலனுடனான திருமணத்திற்குப் பின் தன்னிடம் ஆசி பெற்றுச் சென்றதை வெளிப்படையாய் எடுத்து வைக்கும் மனமாய்..
யாரையும் கவர்ந்திழுக்கச் செய்யும் காந்தமென வசீகரிக்கும் பெண், தற்கொலை செய்து கொண்டு போஸ்ட்மார்ட்டம் அறையில்மொட்டைத் தலையுடனும், உடையணியாத உடலுடனும் கிடத்தி வைக்கப்பட்டிருக்கையில் ஏற்படும் நிசப்தமான பெரும் மன அலறலாய்..
பிரம்மாண்டமான எழுத்துகளை வரமாய்க் கொண்ட கவிஞன் அன்றாடச் செலவுக்கே அல்லல்படுவதை நினைத்து வருந்தி உதவ வேண்டிய பொழுதில் பணமெனும் அரக்கன் வதைப்பதை உணரும் நிதர்சனமாய்..
பல ஆண்களால் மோகிக்கப்படும் பெண்ணுடன் இரவு ஒன்றாய் அவளறையில் ஜின்னருந்திவிட்டுக் கோபம் கொண்டு வந்துவிட்டு அவளின் முடிவு கண்டு உறைந்து போனவராய்..
அட்லாண்டிக் சமுத்திரக் கரையோரம், மஹாத்மா காந்தியின் சுயரிதையைத் தேடும் ஆஃப்ரிக்கப் பெண்ணுடனான உரையாடலின் போது நெகிழ்வாய்..
கடற்கரைத் தனிமையில் யாருமில்லாதிருக்கும் விலைமகளின் கதை கேட்டு விட்டு இறுதியில் அவள் மடியிலேயே தலை வைத்துத் தூங்கும் சகோதரனாய்..
நோபல் பரிசு அரங்கில் அந்தப் பரிசு தனக்குக் கிடைக்காதா என ஏங்கிக் கிடக்கும் முகங்களைப் பார்த்தவண்ணம் எந்தப் பரிசும் எனக்கு வேண்டாம் என தைரியமாய் சொல்லி வந்த மிடுக்காய்...
- என தன் வித்தியாச முகங்கள் ஒவ்வொன்றாய்க் காட்டி உயர்கிறார் இம்மனிதர். கிட்டத்தட்ட ஒரு மாதமாய் என்னை ஆக்கிரமித்துக் கொண்டுள்ள புத்தகமிது. எந்த மனிதனால் தன்னை ஒரு அயோக்கியன், பெண் பித்தன், காமம் கொள்பவன் என்றெல்லாம் சொல்லத் துணிவிருக்கும். ஒருவன் சொல்வானேயானால் அந்த ஆண்மகனை நான் சற்றே அதிக பிரம்மிப்புடன் பார்க்கிறேன்.
இப்புத்தகத்தைப் பரிந்துரைத்த நண்பர் முரளிக்கும் வாங்கியனுப்பிய நண்பர் சிவாவுக்கும் என் நன்றிகள்.
வாசிப்புக் காதலர்கள் தவறவிடக்கூடாத புத்தகமிது.
புத்தகம் - சிதம்பர நினைவுகள்
வெளியீடு - வம்சி புக்ஸ்
விலை - ரூ. 100/-
31 comments:
நீங்கள் படித்த ஒரு நல்ல புத்தகத்தைப் பற்றி மற்றவர்களும் தெரிந்து கொள்ளச் செய்த நல்ல உள்ளத்திற்கு நன்றி.
வெங்கட்.
நல்ல புத்தகத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி..
வீடு திரும்பல் தளத்தை பார்வையிட்ட போது தங்கள் தளத்தை அறிய நேர்ந்தது...நல்லா எழுதறீங்க...
இது என் ஏரியா இல்ல...நெக்ஸ்ட் மீட் பண்றேன்
என்னோட நூலகத்தின் எவர்கிரீன் புத்தகம் இது! பிடிச்ச வரியெல்லாம் அடிக்கோடு போட்டு திரும்ப பாத்தா புத்தகம் பூரா கோடு!!!
நல்ல பதிவு ;உங்கள் விமர்சனம் நேர்த்தியாக,நிறைவாக இருந்தது.
நல்ல புத்தகத்தை அறிமுக படுத்தியதற்கு நன்றிப்பா
பொன்னீலன் அவர்களின் புத்தகங்களும் நன்றாக இருக்கும் விக்னேஸ்வரி
சென்ஷியொட பஸ்ல பாத்ததிலிருந்து வாசிக்கணும்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன். நீங்களும் ஆர்வத்தை கிளப்பிடீங்க
விக்னேஷ்வரி..
1.மிகத்தேர்ந்த வாசிப்பாளனின் பார்வை முதல் பத்தியில்
2.உங்கள் ப்ரெசெண்டேஷன் ஸ்டைல்
3.பகுத்திருக்கும் விதம்/ பின்புலத் தகவல்கள்/சாரம் உள்ள சொல்முறை
4.பயணக் கட்டுரைக்கும் ,நட்பு சார் எழுத்துக்கும் இப்போது விமர்சனத்திற்கும் சட்டை மாற்றிக் கொள்ளும் உரைநடை
வாழ்த்துகள் !
இன்னொரு கொசுவர்த்தி. ரைட்டு.
நல்லா எழுதியிருக்கிங்க விக்கி,
//பிடிச்ச வரியெல்லாம் அடிக்கோடு போட்டு திரும்ப பாத்தா புத்தகம் பூரா கோடு!// விந்தை மனிதனுக்கு ஒரு ரிப்பீட்டு ......
அப்படிஒரு புத்தகம் படிச்சேன் சமீபத்தில் இரண்டு மூன்று என மீள் வாசிப்புகள் நடந்து கொண்டேயிருக்கிறது...
ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை, இது ஒரு சிபாரிசுதான், நேரம் கிடைக்கும் போது படிங்க அப்புறம் நேரம் கிடைக்கும்போதெல்லாம் படிக்க ஆரம்பிச்சிடுவிங்க....
:-))
நேசமித்ரனை வழிமொழிகிறேன்.
இந்தப் புத்தகத்தை வாங்கி வாசித்துவிடுவேன்; என்ன, மலையாளத்திலேயே வாசிக்கலாமே என்று சுணங்கிப்போக வாய்ப்புண்டு.
நன்றி.
நல்ல புத்தகத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி..!
கட்டுரையை ஆழ்ந்து அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.
next post eppa akka?
இப்படி உண்மையைச் சொல்லும்
எழுத்துக்கள் அபூர்வமானவைதான்.
நன்றி.
வணக்கம் இலக்கியவாதி.
பதிவு சூப்பர்.
// விந்தைமனிதன் said...
என்னோட நூலகத்தின் எவர்கிரீன் புத்தகம் இது! பிடிச்ச வரியெல்லாம் அடிக்கோடு போட்டு திரும்ப பாத்தா புத்தகம் பூரா கோடு!!! //
இந்தப் பின்னூட்டம் சூப்பரோ சூப்பர்.
ஆர் கோபி
நன்றி வெங்கட்.
நன்றி சன்சிவ்.
ஓய், ரகு. இந்த புத்தகம் வாசிங்க. பிடிக்கும்.
எனக்கும் அப்படித் தான் இருக்கு விந்தை மனிதன்.
நன்றி ப்ரியா. பொன்னீலன், இப்போ தான் கேள்விப்படறேன். தேடிப் பார்க்கிறேங்க.
அவசியம் வாசிங்க அம்மணி. உங்களுக்குப் பிடிக்கும்.
மிக்க நன்றி நேசமித்திரன்.
ஆர்வத்தை உண்டு பண்ணிய விமர்சனம்.. ஆனா விக்கி இங்க எப்படி எங்க வாங்கறதுன்னு தெரியல :(
I am in Belfast, Northern Ireland.
கொசுவத்தி இல்ல பெஞ்சு. வாசிச்சுப் பாருங்க. புரியும்.
நன்றி முரளி. நிச்சயம் வாங்கி வாசிக்கிறேன்.
மலையாளத்தின் மூலத்திற்கும் தமிழின் மொழிபெயர்ப்பிற்குமுள்ள வேறுபாடை வாசித்து விட்டு நீங்க தான் சொல்லணும் ராஜசுந்தரராஜன்.
நன்றி சே.குமார். அவசியம் வாசியுங்கள்.
என்னாச்சு அன்பு?
ஆமா மது. வாசித்துப் பாருங்கள்.
ஓய், என்னாதிது அப்து..
நன்றி கோபி.
ரொம்ப நல்லா இருக்கு இந்த விமர்சனம்.கும்மி அடிக்க மனமில்லை. ரொம்ப நல்லா இருக்கு.
அதனால அப்து மாதிரி வுழுந்து ஒரு கும்புடு போட்டுகிட்டு கெளம்பறேன்:-))
புத்தகம் பற்றிய உங்களின் கண்ணோட்டம் வாசித்தே ஆகவேண்டும் என்ற ஆர்வத்தை அதிகரித்துவிட்டது . சிறந்த புத்தகத்தை நேர்த்தியான எழுத்து நடையில் விமர்சித்த விதம் பாராட்டுக்குரியது . வாழ்த்துக்கள் . விரைவில் நானும் வாங்கி வாசித்துவிடுகிறேன் .
nice review , any ways to get it online
நல்ல புத்தகத்தை அறிமுக படுத்தியதற்கு நன்றி!
இப்போது தான் உங்கள் பதிவுகளை படிக்கத் தொடங்கியுள்ளேன். நன்றாக எழுதுகிறீர்கள்.
இந்தப் பதிவுல முதல் பத்தி ரொம்ப அருமை.
மொழிபெயர்ப்பு நூல்களை அதிகம் வாசித்தது இல்லை. நீங்க எழுதினதப் பார்த்தா மிஸ் பண்ணக்கூடாதுன்னு தோணுது. முரளிகிட்ட வாங்கிக்கறேன்...
அச்சு ஊடகத்துக்கு எழுதப்பட்ட விமர்சனம் மாதிரி நேர்த்தியா இருக்கு எழுத்து.
ரைட்டு.
அறிமுகத்திற்கு மிக்க நன்றி. நேர்த்தியான விமர்சனம்.
//நன்றி ப்ரியா. பொன்னீலன், இப்போ தான் கேள்விப்படறேன். தேடிப் பார்க்கிறேங்க.//
நன்றி விக்னேஸ்வரி .
திரு பொன்னீலன் பற்றிய அறிமுகம் உங்களின் பார்வைக்கு :
பொன்னீலன் தமிழ் முற்போக்கு இலக்கியவாதிகளில் குறிப்பிடத்தக்க படைப்பாளி. குமரி மாவட்டம், நாகர்கோயில் அருகே மணிகட்டிபொட்டல் என்ற ஊரில் 1940ல் பிறந்தவர். இவரது அன்னை அழகிய நாயகி அம்மாளும் குறிப்பிடத்தக்க படைப்பாளி. இவரது இயற்பெயர் ஸ்ரீகண்டேஸ்வர பக்தவத்ஸலன். சபாபதி என்று இன்னொரு பெயரும் உண்டு. சைவப் பின்னணி கொண்ட நிலக்கிழார் குடும்பத்தைச் சேர்ந்த பொன்னீலன் இளங்கலை படிப்பு முடித்து ஆசிரியர் பயிற்சிபெற்று உயர்நிலைப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். கல்வி அதிகாரியாகப் பணி நிறைவு பெற்றார்.
பொன்னீலன் 1994 ம் வருடத்திற்கான சாகித்ய அக்காதமி விருதைப் புதிய தரிசனங்கள் நாவலுக்காகப் பெற்றார். பொன்னீலனின் 'உறவுகள்' என்ற சிறுகதை மகேந்திரனால் 'பூட்டாத பூட்டுகள்' என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைமைப் பொறுப்பில் நீண்ட காலமாகப் பணியாற்றி வருகிறார்.
அவரின் "புதிய தரிசனங்கள்" படித்து இருக்கிறேன் .நல்லதொரு புத்தகத்தை படித்த நிறைவு ;நீங்களும் படித்து பாருங்கள் விக்னேஸ்வரி.
நேர்த்தியான நடை.புத்தக விமர்சனம் அருமை. ஊருக்கு வரும்போது கண்டிப்பாக வாங்கி படிக்கணும்.
புக் லிஸ்டுல இதயும் சேர்த்திடறேன்...
நல்ல புத்தகத்தை அறிமுகப்படுத்தியதற்கு
நன்றி...
விரைவில் வாசித்துவிடுகிறேன் .
சுள்ளிக்காடு பற்றி உயிர்ம்மை இல் எஸ் .ராமகிருஷ்ணன் கட்டுரை படித்து மனம் கலங்கினேன். உங்கள் விமர்சனம் நன்றாக இருக்கிறது . இந்த வாரம் ஆனந்த விகடன் இல் k.v .shylaja நான் shylaja ஆனது எப்படி என்ற article படித்தீர்களா .
உங்கள் விமர்சனம் தந்த உந்துதலில் கொரியரில் தருவித்து படித்தேன். அருமையான புத்தகம். ஒரு மனிதன் இத்தனை திறந்த புத்தகமாக இருக்க முடியுமா? ஆச்சரியம். ஒரு நல்ல புத்தகத்தை பரிந்துரைத்த உங்கள் பதிவுக்கு நன்றிகள் பல. - வரதராஜன் செல்லப்பா
Post a Comment