Monday, August 2, 2010

தமிழ் வலைப்பூக்கள்

வலைத்தளம் என்பது கருத்துப் பகிர்தலுக்கான இணைய வெளி. பள்ளிக்கால டைரிக் குறிப்புகளையும், கல்லூரிக் கால எழுத்தார்வத்தையும் பத்திரிக்கைகளில் தொடர முடியாதவர்களுக்கு வலைப்பக்கங்கள் வடிகால். வலைப்பக்கத்தை எழுத்துலகின் புதிய புரட்சி எனலாம். கடிதங்கள் ஈ-மெயிலாய் மாறியதைப் போல், தொலைபேசிகள் கைபேசிகளாய் வளர்ச்சியடைந்தது போல், எழுத்துலகில் காகிதத்தில் அச்சிடப்பட்டு வந்த கருத்துத் தொகுப்பு இபோது வலைத்தளம் என்ற பரிணாமத்தை அடைந்துள்ளது.

1997 ஆம் ஆண்டு வலைத்தளங்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் கடந்த 5 ஆண்டுகளாக இதன் ஆளுமை அதிகமாக உள்ளதெனலாம். இலக்கிய எழுத்துகள் மட்டுமின்றி அன்றாட நிகழ்வுகளும், அரசியல், தொழில்நுட்பம், திரையுலகம், மருத்துவம் எனப் பன்முகம் காட்டும் வலையுலகின் வீச்சு எல்லையற்றது. தமிழகத்திலிருந்து தொலைவில் வாழும் தமிழர்களின் தொப்புள் கொடி இணையம் இந்த வலையுலகம். தினசரி நிகழ்வுகளைப் பதிவதாகத் துவங்கி எழுத்தார்வம் உள்ள அனைவருக்கும் பயிற்சிக் களம் இந்த வலைப்பதிவுகள்.

வலைப்பதிவுகளை அவை தாங்கி வரும் பதிவுகளின் அடிப்படையில் பல வகைகளாகப் பிரிக்கலாம்.

தனிநபரின் வலைப்பதிவுகள்
ஒருவரின் அன்றாட நிகழ்வுகளையும், சுற்றியுள்ள விஷயங்களையும் தொகுக்கும் இவ்வகை வலைப்பதிவுகளில் நாடு, ஊர், விழாக்கள், சிந்தனை, கருத்துகள், சுய விருப்பங்கள், கதைகள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் பகிரப்படுகின்றன. ஒருவரின் சொந்தக் கருத்துகள் மற்றும் வாழ்க்கை நிகழ்வுகள் அனுபவப் பதிவுகளாக தொகுக்கப்படும் இவ்வலைப்பூக்கள் பெரும்பாலும் தனி நபருடையவை. இது போன்ற பதிவுகள் சில சமயம் ஒரு குறிப்பிட்ட நண்பர் குழுக்குள் மட்டுமே பகிரப்பட்டும், எழுத்தப்பட்டும் வருவதும் உண்டு. இப்படிப்பட்ட பெரும்பாலான தமிழ் வலைப்பூக்கள் சுவாரஸ்ய எழுத்துகளுக்குக் குறைவில்லாதவை.

நிறுவனம் மற்றும் அமைப்புகளின் வலைப்பதிவுகள்
ஒரு தொழில் நிறுவனத்தையோ, ஏதேனும் அமைப்புகள் பற்றிய கருத்துகள் பற்றியோ எழுதப்படும் இவ்வகை வலைப்பூக்கள் அந்நிறுவன அல்லது அமைப்பில் இருப்பவர்களுக்கும், அதைப் பற்றி அறிய விரும்பும் மற்றவர்களுக்கும் தகவல் தெரிவிக்கும் விதமாக அமைகின்றன. இவை பொதுவாக மார்கெட்டிங், ப்ராண்டிங் மற்றும் மக்கள் தொடர்பு ஆகியவற்றில் பெரும்பங்கு வகிக்கின்றன.

ஊடகத் துறை வலைப்பதிவுகள்
பொது வாழ்வின் விஷயங்களை, செய்திகளை எல்லோரும் அறிய, அலச, பாராட்ட, விமர்சிக்க, எதிர்க்க என பத்திரிக்கைகள் காகிதங்கள் வழியாகச் செய்யும் எதற்கும் குறைவில்லாது வலைப்பதிவுகள் மூலமாகவும் செய்கின்றன இவ்வகை வலைப்பக்கங்கள். இதனால் செய்திகளை வலைப்பக்கங்களில் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடிகிறது எங்கிருந்தும். முண்ணனி ஆங்கில மற்றும் தமிழ்ப் பொது ஊடகங்களான பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் தங்களுக்கான வலைப்பதிவுகளைக் கொண்டிருப்பதே சான்று.

குழும அல்லது துறை சார் வலைப்பதிவுகள்
தன் துறை சார்ந்த விஷயங்களையும் அதில் தினம் நடக்கும் மாறுதல்கள், கண்டுபிடிப்புகளைப் பகிரும் இவ்வகை வலைப்பதிவுகள் பெரும் வரவேற்பைப் பெற்றவை எனலாம். இதில் அரசியல் வலைப்பதிவுகள், பயண வலைப்பதிவுகள், புகைப்பட வலைப்பதிவுகள், தகவல் தொழில் நுட்ப வலைப்பதிவுகள், ஃபேஷன் வலைப்பதிவுகள், பெண்களின் வீட்டு நிர்வாகம் பற்றிய வலைப்பதிவுகள், இசைப்பதிவுகள், கல்விப்பதிவுகள் எனப் பல குழுக்கள் அமைந்துள்ளன.

வலைப்பதிவுகள் கணினியில் மட்டுமல்லாது செல்ஃபோன்களிலிருந்து செய்யும் வண்ணம் எளிய வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு மொபைல் ஃபோனிலிருந்து செய்யப்படும் ப்ளாகிங் மோப்ளாக் (moblog) என அறியப்படுகிறது. தவிர பதிவர்களின் சமீபத்திய ஈடுபாடாகக் குறும்பதிவுகள் என அழைக்கப்படும் ”ட்விட்டர்” பிரபலமடைந்துள்ளது.

வலைப்பதிவின் நன்மைகள் என்ன...
  • பத்திரிக்கைகளில் எழுதக் காத்திருந்த காலம் போய், தோன்றுவதை எழுத, இருக்கும் எழுத்துத் திறமையைத் தொடர ஒரு களமாக அமைகிறது.
  • துறை சார் பதிவுகள் தாய் மொழியில் வாசிக்க கிடைக்கின்றன.
  • பல அரிய, புதிய புத்தகங்கள், உலகத் திரைப்படங்கள், பிற மொழிப் பாடல்கள், இலக்கியங்கள் என அனைத்திற்குமான விமர்சனமறியும் ஒரு இடமாக அமைகிறது.
  • ஒருவரின் திறமையை உலகறியச் செய்யும் ஒரு வாய்ப்பு இந்த வலைப்பதிவுகள். அதுவும் நாம் விரும்பும் வகையில், நாம் விரும்பும் நேரத்தில்.
  • புத்தகங்களுடன் விட்டுப் போன வாசிப்பைத் தாண்டி ஒரு வித்தியாச வாசிப்பனுபவத்தைத் தருகிறது.
  • தன் துறையுடன் ஒன்றுபட்ட ஒரு நட்பு வட்டத்தை அமைத்துத் தருகின்றன இந்த வலைப்பக்கங்கள்.
  • நகர வாழ்க்கையின் நரக வேதனையினிடையே நம் கவலை மறந்து சிரிக்க, தகவல்கள் அறிய, காதல் கவிதைகளில் உணர, சிறுகதைகளில் வாழ ஒரு அற்புத வாசிப்பனுபவத்தைத் தருகின்றது.
  • பின்னூட்டங்கள் என அறியப்படும் வாசிப்பவர்களின் கருத்துகள் எழுதுபவருக்கு ஒரு தூண்டுதலையும், சிறந்த எழுத்திற்கு வழிகாட்டுதலாகவும் அமைவது மறுக்க முடியாதது.
  • வலைப்பூக்களில் எழுதும் பல பதிவர்கள் பத்திரிக்கைக்காரர்களாகவும், எழுத்தாளர்களாகவும், கதாசிரியர்களாகவும் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர்.
  • பிரபல எழுத்தாளர்களும் தங்கள் எழுத்துகளை / எண்ணங்களை அவர்களது வலைப்பதிவில் பதிவதனால் அவர்களின் வாசகர்களுக்கு அவை எளிமையாக சென்றடைவதுடன் எழுத்தாளர் - வாசகர் வட்டமும் நேரடித் தொடர்பைப் பெற்றுள்ளது.
  • எழுத்தினால் ஏற்பட்ட நட்புகள் எழுத்தைத் தாண்டி எந்த இடத்தில் என்ன உதவி வேண்டுமானாலும் என் “பதிவ நண்பர் இருக்கிறார்” என்ற அழுத்தமான நம்பிக்கையைப் பெற்றுத் தந்துள்ளது.
யாரெல்லாம் எழுதலாம்..
உங்களுக்குக் கொஞ்சம் நேரமும், எழுத்தார்வமும் இருந்தால் போதும். நீங்கள் வலைப்பதிவராகலாம். வலைப்பதிவ எழுத்தாளராகலாம்.

உங்களுக்கான வலைப்பதிவைத் தொடங்குவது எப்படி

பல ப்ளாகர் சைட்டுகள் இச்சேவையை இலவசமாக வழங்குகின்றன. அவற்றில் பரவலாக உபயோகப்படுத்தப்பட்டு வருபவை
www.blogger.com - மிக அதிகப் பதிவர்களால் உபயோகிக்கப்பட்டு வரும் தளம். இதனைக் கையாளுவது எளிதென்பது இதன் ப்ளஸ்.
www.wordpress.com - ப்ளாகரைத் தொடர்ந்து அதிகமானவர்களால் உபயோகிக்கப்படுவது.
www.blog.com - இதன் அன்லிமிட்டெட் பேண்ட்விட்த் ப்ளாக் சேவை பலரால் விரும்பி உபயோகிக்கப்படுகிறது.
www.blogster.com - இலவச ப்ளாக் சேவையுடன் இலவச படங்களையும் வழங்கும் சிறப்பு சேவை இதனுடையது
www.opendiary.com - அன்லிமிட்டெட் தகவல் சேமிப்பு வசதியும், அன்லிமிட்டெட் பதிவுகளும் இலவசமாக வழங்குவதோடு மிகக் குறைந்த விலையில் அட்டகாசமான வசதிகளையும் அளிக்கிறது.
இது தவிர, கிட்டத்தட்ட 40 சிறந்த இண்டர்நெட் சைட்டுகள் ப்ளாகிங் சேவையை இலவசமாக வழங்குகின்றன.


திரட்டிகள்

வலைப்பதிவுகளில் பதியப்படும் உங்கள் கருத்துகளுக்கு அடுத்த நிமிடமே பின்னூட்டங்கள் என அழைக்கப்படும் வாசிப்பவர் கருத்துகள் வந்து சேரும். உங்களுக்கு ஊக்கமளிக்கும் அந்தக் கருத்துகளை மற்றவருக்கு எப்படி எடுத்துச் செல்வது... அதற்கான வேலையைச் செய்கின்றன வலைப்பதிவு திரட்டிகள். தமிழ்மணம், தமிலிஷ், உலவு, தமிழ் கணிமை, தமிழ் 10, தமிழ்வெளி, நியூஸ் பண்ணை, சங்கமம் மற்றும் பல திரட்டிகளில் நம் பதிவுகளைப் பதியலாம். இத்திரட்டிகளின் வழியாக மற்றவர்களின் பதிவுகளை நாம் வாசிக்கும் அனுபவமும் பெறலாம்.

ப்ளாக் வடிவமைப்பு

நம் வலைப்பக்கங்களை வடிவமைக்க பல்வேறு டெம்ப்ளேட்டுகளும் காட்ஜெட்ஸ், விட்ஜெட்ஸ்களும் கிடைக்கின்றன. இவற்றையும் இலவசமாகப் பெறலாம்.
உங்கள் வலைப்பதிவுக்கான டெம்ப்ளேட்டுகளைத் தேர்ந்தெடுக்க கீழே குறிப்பிடப்படுள்ள தளங்களைப் பார்வையிடலாம்.

இது தவிர, ஃபாலோயர்ஸ் எனப்படும் உங்களைத் தொடர்ந்து வாசிக்க விரும்புவர்களின் பட்டியல், உங்கள் வலைப்பக்கத்தின் மொத்தப் பார்வையாளர்களை அறிய ஹிட் கவுன்ட்டர், நீங்கள் செயல்படும் வேறு தளத்துக்கான சுட்டிகள், இன்றைய காலநிலை, நாள்காட்டி, வெல்கம் நோட் என நீள்கிறது இவ்வரிசையும்.

உங்களால் ஒரு தளமே வடிவமைக்கபட்டு அதில் நீங்களே ஆசிரியராகப் பொறுப்பேற்று உங்களுக்கு வசதியான நேரத்தில் உங்களுக்குப் பிடித்தமானதை எழுதித் தள்ளுங்கள் என்றால் ஆனந்தமாயிருக்காதா என்ன...
நிச்சயம் இருக்கும். அப்படி சில ஆண்டுகளாக தமிழ் வலைப்பதிவுகளில் தங்கள் எழுத்துகள் மூலம் தனக்கென ஒரு வாசகர் வட்டத்தையும், நட்பு வட்டத்தையும், அடுத்ததடுத்த வெற்றிகளையும் குவித்து வரும் சில பதிவர்களின் அனுபவங்களைக் கேட்போம்.

அந்தந்த காலகட்டத்தில் ஏற்படும் அறிவியல் முன்னேற்றத்தை ஏற்று செல்லாத எந்தக் கலையும் கொஞ்சம் கொஞ்சமாய் அழிய வாய்ப்புண்டு. எழுத்து என்பது பேனா, பேப்பர் என்பதை மறந்து கணினிக்குள் வந்தபிறகு எழுத்தாளர்கள் கணினியில் தட்டச்சு செய்வது அதிகரித்தது. அதன்பின் வலையுலகம் என்பது வந்து கட்டற்ற சுதந்திரம் கொடுத்து, எல்லாருமே எழுதி பயிற்சி பெற்றுக்கொள்ளக் கூடிய களமாக மாறி கலக்கிக் கொண்டிருக்கிறது. இதை சரியான முறையில் பயன்படுத்தி, எழுதி அச்சு ஊடகங்களில் தங்கள் பெயரைப் பதித்த பலபேரின் வெற்றியே இதற்கு உதாரணம்” என்கிறார் கடந்த இரு வருடங்களாக பதிவுலகில் தன் எழுத்துகளால் ‘பரிசல்காரன்’ என்ற பெயரில் அறியப்பட்டு வரும் திருப்பூரைச் சேர்ந்த கிருஷ்ண குமார். இவரது வலைப்பதிவுகளின் எழுத்தனுபவம் மூலமாக ”டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்” என்ற புத்தகம் வெளியிட்டுள்ளார் என்பதும் மகிழ்ச்சிக்குரியது. இவரின் வலைப்பூ முகவரி www.parisalkaaran.com

கண்டம் விட்டுக் கண்டம் கடந்து வாழும் மதுரைத் தமிழரான நேசமித்திரன் கூறுகையில் “அயல்தேசத்தின் தனிமையில் வலையுலகம் எனக்கு திறந்த ஜன்னல், புதிய கிரகங்களுக்கு அழைத்து சென்றிருக்கிறது . ஒரு கவிதையை எழுதி பத்திரிக்கைக்கு அனுப்பிவிட்டு காத்திருந்து .. எதனால் நிராகரிக்கப்பட்டது என்று காரணமறியாமலே குமைந்து கிடந்தது ஒரு காலம் . இன்று இடுகையிட்ட நொடிப்பொழுதில் கிடைக்கும் மறுமொழிகள்- எதிர்வினைகள் தரும் ஊக்கம், புத்தகம் வெளியிடும் தூரம் வரை பயணித்ததற்கு வலையுலகும் நட்பும் மட்டுமே காரணம்” இவரும் விரைவில் தன் கவிதைத் தொகுப்பை வெளியிட உள்ளார். வாசிப்பவரை அதிகம் யோசிக்க வைக்கும் கொஞ்சம் சிக்கலான மொழிக்கு சொந்தக்காரரான இவரின் வலைப்பூ www.nesamithran.blogspot.com

வலைப்பூக்களில் கமர்ஷியல் ஹிட் அடைந்துள்ள கேபிள் சங்கர் என்ற சங்கர நாராயணன் திரைப்படத் துறையைச் சேர்ந்தவர். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் சிறு வேடங்களில் நடித்தும், பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தும், வசனம் எழுதியும், ஒரு குறும்படம் இயக்கியும் உள்ள இவரின் திரைப்பட இயக்குனர் ஆர்வம் வலைப்பதிவுகளின் மூலம் பூர்த்தியாகப் போகிறது. அது எப்படி என அவரிடமே கேட்போம் “ஒரு பொழுது போக்காத் தான் எழுத வந்தேன். எழுத வந்து இரண்டு வருடங்கள் கூட முடியாத நிலையில் இன்றைய அதிக ஹிட்டுகள் வாங்கும் பதிவர் என்ற இடத்திற்குக் கொண்டு சென்ற வாசகர்களுக்கு என் மனமார்ந்த நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். என்னால் சிறுகதை எழுத முடியும் என நினைத்தது கூட இல்லை. வலைப்பதிவில் என் எழுத்துகளுக்குக் கிடைத்த பின்னூட்டங்களும், ஊக்கமும் தான் என் எழுத்தை மெருகேற்றி என்னை ஒரு சிறுகதை எழுத்தாளனாக மாற்றியது. ”லெமன் ட்ரீயும் ரெண்டு ஷாட் டக்கீலாவும்”, ”மீண்டும் ஒரு காதல் கதை” என்ற இரு சிறுகதைத் தொகுப்புகளும், ”சினிமா வியாபாரம்” எனும் புத்தகமும் எழுதும் நம்பிக்கையைத் தந்தது வலைப்பதிவே. வலைப்பதிவுகளில் என் எழுத்தை வாசித்தும், என்னைப் பற்றி அறிந்தும் என் மீது நம்பிக்கை கொண்டு படம் செய்ய முன் வந்திருக்கிறார் என் ப்ரொடியூசர். பல வருட இயக்குனர் முயற்சி இரு வருட வலைப்பதிவுப் புகழால் கிடைப்பது சொல்லிட முடியா ஆனந்தமே” அவரின் படத்திற்கு வாழ்த்துகள். நாளைய இயக்குனரின் இன்றைய வலைப்பக்க முகவரி www.cablesankar.blogspot.com

எழுத்தாளர் மட்டும் எழுதுமிடம் என்றில்லாமல் வாசிப்பனுபவம் கொண்டவர்கள், எழுத்தார்வம் மிக்கவர்களும் வலைப்பக்கங்களில் எழுதுகிறார்கள். ”ரொம்ப நாளா மற்றவர் பதிவுகளை வாசிச்சுட்டுத் தான் வந்தேன். நாமளும் எழுதலாமேன்னு உள்ளுக்குள் ஒரு ஆர்வம் இருந்தாலும் அனுபவமில்லாததால் ஏதோ கிறுக்கி வந்த என் ஆரம்ப கால எழுத்தையும் ஒரு வருடம் கழித்து வாசிக்கும் என் சமீப எழுத்துகளிலும் ஏற்பட்டிருக்கும் மாறுதலும் முன்னேற்றமும் என்னை இன்னும் எழுதத் தூண்டுகிறது. அலுவலின் முழு நாள் டென்ஷனுக்குப் பிறகு ஒரு மணி நேர ஆசுவாசம் வலைப்பூக்கள் வாசிப்பதும், எழுதுவதும்” என்கிறார் சென்னையில் ஐ.டி. துறையில் வேலை பார்க்கும் ரகு என்ற பதிவர். இவரின் வலைப்பக்கம் www.kurumbugal.blogspot.com

இது தவிர தனது சுவாரசிய வலைப்பதிவுகளால் தனக்கென ஒரு வாசகர் வட்டத்தை வைத்திருக்கும் பதிவர்கள் - ஈரோடு கதிர், ஆதிமூலகிருஷ்ணன், செல்வேந்திரன், கார்க்கி, பட்டர்ஃப்ளை சூர்யா, அப்துல்லா, வடகரை வேலன், சஞ்சய் காந்தி, வெயிலான், நாடோடி இலக்கியன், மோகன் குமார், முரளிக்குமார் பத்மநாபன், ஜெட்லி, ஜெய், ஹாலிவுட் பாலா, தராசு..............

வலைப்பதிவ ஆண்களுக்குக் கொஞ்சமும் குறைந்தவர்களல்லர் பெண்பால் பதிவர்கள்.
தமிழ்நதி, ரம்யா, வித்யா, லாவண்யா, கலகலப்ரியா, ரோகிணி, ராஜி, விஜி, சந்தனமுல்லை, ப்ரியா, மேனகாசாத்தியா, அனாமிகா, ஹுஸைனம்மா, ராமலட்சுமி எனத் தொடரும் பெண் பதிவர்கள் எல்லாத் துறைப் பதிவுகளிலும் கலக்குகிறார்கள். இவர்களில் ஐ.டி.துறைப் பெண்கள், மேலாண்மைப் பதவியில் இருப்போர், சொந்தத் தொழில் செய்வோர், மருத்துவர், பேராசிரியை, இல்லத்தரசிகள் என அனைவரும் அடக்கம். இவர்கள் அனைவரும் உலகின் வெவ்வேறு மூலைகளிலிருந்து வலைப்பதிவுகளின் மூலம் இணைந்து நல்ல நட்பைப் பின்னூடங்கள் மூலம் தொடர்கின்றனர்.

கிறுக்கல்கள் எனப் பொருள்படும் “Scribblings" என்ற வலைப்பக்கத்தை கடந்த 5 வருடங்களாக எழுதி வரும் வித்யா சொல்கிறார், “வீட்டுல இருக்குற என்னை மாதிரி இல்லத்தரசிகளுக்கு நல்ல பொழுதுபோக்கு மற்றும் உலகத்துடன் தொடர்பிலிருக்க வலைப்பக்கங்கள் உதவுகின்றன. என் கருத்துகளை எனக்குப் பிடிச்ச மாதிரி, என் தளத்தை நானே வடிவமைச்சுப் போட்டுக்கறது ரொம்ப சந்தோஷமா இருக்கு” வீடு, சமூகம், இடங்கள், பொதுப் பிரச்சனைகள் என அனைத்தையும் ஒரு கை பார்க்கும் இவரின் தளத்தில் அதிகம் வரவேற்பைப் பெற்ற பதிவுகள் ரெஸ்டாரண்ட் பற்றிய இவரின் விமர்சனம். சென்னையின் அனைத்து இடங்களிலும் இருக்கும் பெரும்பாலான ரெஸ்டாரண்ட்டுகளின் சுவையும் தரமும் அறிய இவர் பதிவைப் பாருங்கள். www.vidhyascribbles.blogspot.com

சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் சாவின் விளிம்பு வரை சென்று திரும்பி வந்த ரம்யாவின் வலைப்பக்கத்தின் பெயரே அவர் தன்னம்பிக்கைகுச் சான்று. www.ramya-willtolive.blogspot.com இல் எழுதி வரும் இவர் எழுத வந்ததன் நோக்கம் பல நட்புகளின் மூலம், தான் செய்ய விரும்பிய பொது நலச் சேவையை வெளிக் கொண்டு செல்வதானாம். நல்லதொரு நகைச்சுவை நடையில் எழுதும் இவரின் பதிவுகளில் தூய நட்பைக் காணலாம். இவரிடம் பேசுகையில் நமக்கும் ஒரு தன்னம்பிக்கை வெளிப்படும். “நான் இன்னிக்கு என் வாழ்க்கைல வாழ்றதுக்கே போராடிட்டிருக்கேன். அதுனால யாருக்கு என்ன கஷ்டம் வந்தாலும் என்னை முன்னாடி வெச்சுப் பார்த்து வந்த கஷ்டமெல்லாம் ஒண்ணுமே இல்லைன்னு தூக்கிப் போட்டுப் போயிட்டே இருக்கணும். இந்த என் மெஸேஜ் எல்லாரையும் அடையணும்னு தான் எழுத வந்தேன். தன்னம்பிக்கையை மட்டுமே கருவா வெச்சு என் பதிவுகளை எழுதிட்டிருக்கேன்” என்கிறார்.

இப்படி வலைப்பதிவர்கள் தங்களுக்குள் நல்ல நட்பை ஏற்படுத்திக்கொண்டாலும் அவ்வப்போது சிறு பிள்ளைகள் போல் குழுக்களாக சண்டையிட்டுக் கொள்வதும், சமாதானமாகி விடுவதும் உண்டு.

பலரும் வலைப்பக்கங்களுக்கு அடிமையாகி வேலை நேரங்களில் வேலையைக் கெடுத்து வாசிக்கிறார்கள்/எழுதுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு ஒரு புறமிருந்தாலும் அதற்கான நேர எல்லையை நாம் வரையறை செய்து கொண்டோமானால் எப்பிரச்சனையும் இல்லை. வலைப்பதிவினால் வரும் தீமை என சொல்ல ஒன்றுமில்லை அதை அளவாக நல்ல விதத்தில் உபயோகித்தால்.

ஜூன்16-30,2010 “தமிழ் கம்ப்யூட்டர்” இதழில் நான் எழுதி வெளியான கட்டுரை.

62 comments:

நேசமித்ரன். said...

மிக்க நன்றி விக்னேஷ்வரி

Vijay said...

வலைத்தளங்கள் இவ்வளவு பிரபலம் ஆனதற்கு நீங்கள் சொல்வதெல்லாம் ரொம்ப கரெக்ட். ஆனால் அவை இவ்வளவு பெரிய வெற்றியடைவதற்கு முக்கிய காரணம் இதெல்லாம் ஓசி’ல கிடைக்கிறது என்பது தான். ஒவ்வொரு பதிவி்ற்கும் இம்புட்டுத் தரணும்’னு பிளாக்ஸ்பாட் சொல்லிட்டா எவ்வளவு பேர் தங்களது வலைப்பதிவைத் தொடர்ந்து நடத்துவார்கள் என்று தெரியாது :)

தேவன் மாயம் said...

நல்ல கட்டுரை விக்னேஷ்வரி!!! வாழ்த்துகள்!!

அபி அப்பா said...

அடி தூள்! நல்லா பிரிச்சு மேஞ்சு இருக்கீங்க:-))

அன்பரசன் said...

தகவல்கள் அருமை...

கனிமொழி said...

நல்லா எழுதி இருக்கீங்க விக்னேஷ்வரி...!! வாழ்த்துகள்!!
//வாசிப்பவரை அதிகம் யோசிக்க வைக்கும் கொஞ்சம் சிக்கலான மொழிக்கு சொந்தக்காரரான//
:) உண்மை...

'பரிவை' சே.குமார் said...

நல்ல கட்டுரை விக்னேஷ்வரி!!! வாழ்த்துகள்!!

Anonymous said...

குட் குட்.. நல்லாருக்கு விக்கி :))

a said...

ரொம்ப நல்லா சொல்லி இருக்கீங்க... வாழ்த்துக்கள்....

ராம்ஜி_யாஹூ said...

நல்ல கட்டுரை நன்றிகள்

அபி அப்பா said...

\\இப்படி வலைப்பதிவர்கள் தங்களுக்குள் நல்ல நட்பை ஏற்படுத்திக்கொண்டாலும் அவ்வப்போது சிறு பிள்ளைகள் போல் குழுக்களாக சண்டையிட்டுக் கொள்வதும், சமாதானமாகி விடுவதும் உண்டு.\\\

இதல்லாம் வேற நடக்குதா? சின்னபுள்ள தனமால்ல இருக்கு:-))

Menaga Sathia said...

பதிவு அருமை விக்கி...வாழ்த்துக்கள்!!

sakthi said...

நல்ல கட்டுரை விக்னேஷ்வரி!!! வாழ்த்துகள்!

வினோ said...

அருமையான பகிர்வு.. மிக்க நன்றி விக்கி...

@ விஜய் : நீங்க சொன்னது யோசிக்க வேண்டிய விசயம்...

ஸ்ரீ.... said...

எளிமையான, கருத்தாழமிக்க கட்டுரை. வலைப்பூக்களைப் பற்றி சிறப்பாக தொகுத்திருக்கிறீர்கள். பல பதிவர்களின் அறிமுகமும், வலையுலகப் பிரச்சனை குறித்துப் பேசியதும் கட்டுரையின் நேர்மையைக் குறிக்கிறது. (என்னைப் பற்றியும் ஏதாவது சொல்லியிருக்கலாம்!!!) வாழ்த்துக்கள்!

ஸ்ரீ....

சுசி said...

மீண்டும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

Unknown said...

நல்ல கட்டுரை....

Thamira said...

இப்ப என்ன திடீர் ஆராய்ச்சிக் கட்டுரைன்னு நினைச்சேன். கடைசியில்தான் புரிந்தது. அப்ப சரி..

புதியவர்களுக்கு இந்தக் கட்டுரை மிக உதவும். நன்று.

என் பெயரையும் வரிசையில் இட்டமைக்கு நன்றி.

பா.ராஜாராம் said...

நல்லா எழுதி இருக்கீங்க ம. மகள்ஸ்.எனக்கே புரியுரமாதிரியும். :-)

ஒரு மெயிலை தட்டி விட்டுட்டு கிளம்பி போய்விடுகிறேன். இப்பதான் தெரிகிறது கண்ணன், நிறைய காரியங்கள் பார்க்கிறான் என.

ரொம்ப பிடிச்சது,

நம்ம இடம் பற்றி நம்பிக்கை தெறிக்கும் வார்த்தைகள் விக்கி.

Cable சங்கர் said...

good.. v.good.. :)

பனித்துளி சங்கர் said...

மிகவும் தெளிவான விளக்கங்களுடன் கூடிய . மிகவும் பயனுள்ள பதிவு . முயற்சிக்கு வாழ்த்துக்கள் தோழி ! பகிர்வுக்கு நன்றி

Anonymous said...

அருமையான தகவல்கள்!
இவ்ளோ இருக்கா வலைபதிவுல?!
நிறைய புது தகவல்கள் தெரிஞ்சுக்கிட்டேன், நன்றி!

Ravichandran Somu said...

நல்ல கட்டுரை.... வாழ்த்துகள்!

தராசு said...

அருமையான எழுத்து விக்கி,

வாழ்த்துக்கள்.

ப்ரியமுடன் வசந்த் said...

அதிர்ஷ்ட பார்வை பதிவரின் பார்வை இங்கு படுமா ஏன்னா அவர்தான் சொல்லியிருந்தார் பத்திரிக்கைகளுக்கான எக்ஸ்குளூசிவ் தன்மையோட இங்க யாருமே எழுதுறதில்லைன்னு ... இந்த பதிவுல அவரோட குறை தீர்ந்துடுச்சுன்னு நினைக்கிறேன்...!

சபாஷ் விக்னேஷ்வரி..!

CS. Mohan Kumar said...

அற்புதம் விக்கி. தேர்ந்த பத்திரிக்கையாளர் போல் எழுதியிருக்கீங்க

Mohan said...

எல்லோருக்கும் புரியும்படி மிகவும் விலாவரியாக எழுதியிருக்கிறீர்கள்!

ஈரோடு கதிர் said...

மிக அருமையான கட்டுரை

டிஸ்கி: ஏன்னா.. எம்பேரும் வந்திருக்குள்ள,ஆனா அதச்சொல்லி என்னை தமிழ்க்கம்ப்யூட்டர் வாங்கி படிக்கச்சொன்ன உங்க நுண்ணரசியலை மெச்சுகிறேன்

ஈரோடு கதிர் said...

உண்மையில் வலைத்தளம் குறித்து எழுதப்பட்ட ஒரு சுவாரசியமான கட்டுரை என்றே சொல்லவேண்டும். கிட்டத்தட்ட வலைப்பக்கத்திற்கான அனைத்து விடயங்களையும் சுட்டியுள்ளமை கவர்ந்த ஒன்று. ங்கப்பா.. கடைசியாக வலைச் சண்டையையும் சுட்டிய நேர்மைய பாராட்டியே தீர வேண்டும்..

தமிழ் கம்ப்யூட்டர், புதியதலைமுறை என அடுத்த தளத்திற்கு நகர்வது பெருமையான ஒன்று,

தொடருங்கள்... வாழ்த்துகள்

வெங்கட் நாகராஜ் said...

புதிய பதிவர்களுக்கும் உபயோகப்படும் வகையில் நல்ல கட்டுரை. பகிர்வுக்கு நன்றி விக்னேஷ்வரி.

நாடோடி இலக்கியன் said...

புதிய‌வ‌ர்க‌ளுக்கு மிக‌வும் ப‌ய‌னுள்ள‌ க‌ட்டுரை தெளிவான‌ விள‌க்க‌ங்க‌ளுட‌ன். ரொம்ப‌ பொறுமையும் உழைப்பும் தேவைப‌ட்டிருக்கும் இடுகை.

வாழ்த்துக‌ளும் பாராட்டுக‌ளும் விக்னேஷ்வரி.என் பெய‌ரையும் குறிப்பிட்ட‌மைக்கு மிக்க‌ ந‌ன்றிங்க‌.

Raghu said...

அடுத்த‌ த‌ள‌த்திற்கான‌ முத‌ல் ப‌டி விக்கி

வாழ்த்துக‌ளோடு ந‌ன்றியும் :)

Radhakrishnan said...

வாழ்த்துகள். முழுவதும் படித்துவிட்டு எழுதலாம் என இருந்தாலும் நேரம் கடந்து விடுகிறது.

http://rkguru.blogspot.com/ said...

எப்பா எம்மாம்பெரிய பதிவு...........bookmaarkula save பண்ணிட்டேன் அப்புறம் படிக்கிறேன்.

அமுதா கிருஷ்ணா said...

நல்ல கட்டுரை..

கல்யாண்குமார் said...

தெளிவாக இவ்வளவு விஷயங்களை நல்ல தமிழில் யாரும் விளக்கவில்லை. உங்கள் எழுத்து நடையில் இருக்கும் எளிமை, கணினி வலை பற்றி அறியாதவருக்கும் ஆர்வத்தை உண்டு பண்ணும். தொடருங்கள். வாழ்த்துகள்.

வால்பையன் said...

பயனுள்ள இடுகை, ரீடரில் சேர் பண்ணிட்டேன்!

அன்பேசிவம் said...

nalla cover story vikky, arumaiyaa eluthiyirukkinga "serthalam" saarpaa new comerskku seminor edukka ithai appadiye print out eduththu kuduththidalaamnnu paarkiren.

kudukkalaamillaiyaa?
:-)

அன்பேசிவம் said...

ALL the BEST :-))

ம.தி.சுதா said...

இந்த அறப மனிதனுக்க நீங்கள் சொன்னவை மிகவும் உபயோகமாக இருக்கிறது.

R.Gopi said...

ஆனந்தி.....

சூப்பர்....

அட்டகாசம்....

தெளிவான எழுத்து.......

விரிவான அலசல்....

எல்லோருக்கும் புரியும் விதமான எளிமையான வார்த்தைகள்....

அழகான கட்டுரை...

வாழ்த்துக்கள்....

எம்.எம்.அப்துல்லா said...

பத்த்ரிக்கையாளர் ஆனதுக்கு வாழ்த்துகள். என் பெயர் குறிப்பிட்டமைக்கு நன்றி விக்கி.

☼ வெயிலான் said...

சொல்ல வந்ததை முரளி சொல்லி விட்டார். நன்றி மட்டும் சொல்லிக்கறேன்.

விக்னேஷ்வரி said...

வாங்க நேசமித்திரன்.

ஆமா விஜய். சரிதான்.

நன்றி மருத்துவரே.

நன்றி அபி அப்பா.

நன்றி அன்பரசன்.

நன்றி கனிமொழி. :)

நன்றி சே.குமார்.

விக்னேஷ்வரி said...

நன்றி விஜி.

நன்றி யோகேஷ்.

நன்றி ராம்ஜி.

அபி அப்பா :)

நன்றி மேனகா.

நன்றி சக்தி.

நன்றி வினோ.

விக்னேஷ்வரி said...

நன்றி ஸ்ரீ.

நன்றி சுசி.

நன்றி கலாநேசன்.

வாங்க ஆதி. நன்றி.

நன்றி மாம்ஸ்.

நன்றி கேபிள்.

நன்றி சங்கர்.

விக்னேஷ்வரி said...

நன்றி பாலாஜி சரவணா.

நன்றி ரவிச்சந்திரன்.

நன்றி தராசு.

நன்றி வசந்த்.

நன்றி மோகன்குமார்.

நன்றி மோகன்.

நன்றி கதிர். :)

விக்னேஷ்வரி said...

மறுபடியும் நன்றி கதிர்.

வாங்க வெங்கட். நன்றி.

நன்றி நாடோடி இலக்கியன்.

வாங்க ரகு. நன்றி. :)

நன்றி ராதாகிருஷ்ணன்.

வாங்க குரு. சரிங்க.

நன்றி அமுதா.

விக்னேஷ்வரி said...

நன்றி கல்யாண்ஜி.

நன்றி வால்.

நன்றி முரளி. தாராளமா...

நன்றி சுதா.

நன்றி கோபி. ஆமா, யாருங்க அந்த ஆனந்தி...

வாங்க அப்துல்லா.

வாங்க வெயிலான். நன்றி.

butterfly Surya said...

அருமை.

வாழ்த்தும் நன்றியும்.

priya.r said...

சிறந்த பதிவு ;வலை உலகை பற்றி உபயோகமான பயனுள்ள கருத்துகளை
வெளியிட்டு அனைவரின் பாராட்டையும் பெற்று இருக்கறீர்கள்.

இத்தகைய தகவல்களை திரட்ட ,யோசித்து எளிமையாக அனைவருக்கும் புரியும் விதத்தில் கோர்வையாக எழுத,எழுத்து பிழை திருத்த ஆக மொத்தம் உங்களின் பல மணி நேர உழைப்பு வீண் போகாமல் இந்த கட்டுரையின் வெற்றிக்கு வித்திட்டுருக்கிறது.

தங்கள் பணி தொடர எனது வாழ்த்துக்கள் விக்னேஸ்வரி.

க.தமிழினியன் said...

லக்கிலுக் பற்றி ஏதும் சொல்லவில்லை..?

நீங்க ரொம்ப பெரிய ஆள்னு இன்னைக்கு தான் தெரியுதுங்க!

Unknown said...

I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

பூமகள் said...

பெரிய பெரிய கட்டுரை எழுதி அசத்துறீங்க விக்னேஷ்வரி..

உங்க பக்கத்துக்கு முதன் முதலா வந்தேன்.. கலக்குங்க.. தொடர்கிறேன்.. ஆனாலும், உங்க அளவுக்கு எழுத நமக்கு வராதுங்க.. என்னா ஸ்பீடு.. :)

அன்புத் தோழி,
பூமகள்.

ஹுஸைனம்மா said...

தெளிவான விளக்கங்கள் தருகிறது கட்டுரை. பத்திரிகையாளர் ஆனதுக்கு வாழ்த்துகள்.

என் பெயரையும் நினைவில் வைத்ததற்கு நன்றிகள் விக்னேஷ்வரி!!

RAGUNATHAN said...

நன்றாக எழுதியிருக்கிரீர்கள்..பதிவுலகை மிக எளிதாகவும் விளக்கி இருக்கிறீர்கள் விக்னேஷ்வரி..வாழ்த்துகள்..

Meerapriyan said...

valaippu-kkaz padri virivaana pathivu. nandru-meerapriyan.blogspot.com

Anonymous said...

நல்ல பதிவு. வரவேற்கிறேன்.

commomeega said...

பதிவுலகை பற்றிய நல்ல,விரிவான,பயனுள்ள கட்டுரை. மிக்க நன்றி . பதிவாளர்கள் பற்றிய வரிசையில் பெண் பதிவாளர்களில் மிக முக்கியமான இடத்தில் இருக்கும் இம்சைஅரசி அக்காவை குறுபிட்டு இருக்கலாம்.

Venkata Ramani. said...

அற்புதமான கட்டுரை.புதிய (என் போன்ற) வலைப்பதிவர்களுக்கு உற்சாகம் தருகிறது. வாசிக்கத் தகுந்த வலைப்பதிவுகளைச் சுட்டிக்காட்டியிருப்பது பயனுள்ளது.www.veniyinpookkoodai.blogspot.comஎன்ற வலைப்பூவில் என் பழைய புதிய படைப்புகளைப் பதிந்து வருகிறேன். படித்துப் பார்ப்பீர்களானால் மகிழ்வேன். hit counter எப்படி அமைப்பது என்பது பற்றி விளக்கிச் சொல்ல முடியுமா?

Venkata Ramani. said...

என் போன்ற புதிய வலைப்பதிவர்களுக்குப் பயனுள்ள கட்டுரை.www.veniyinpookkoodai.blogspot.comஎன்ற வலைப்பூவில் என் புதிய பழைய எழுத்துக்களைப் பதிந்து வருகிறேன். Hit Counter அமைப்பது பற்றி விளக்கிச் சொல்ல முடியுமா?

Rathnavel Natarajan said...

நல்ல பயனுள்ள பதிவு.
பதிவு பற்றிய நிறைய செய்திகள் கற்றுக் கொண்டேன்.
வாழ்த்துக்கள்.