
திடீரென படிக்க வேண்டும் என ஆர்வம் வந்தது. அதுவும் டெல்லி nift இல். இந்தியாவின் நம்பர் 1 Fashion Designing Institute டெல்லியில் இருக்கும் போது அங்கு மாஸ்டர்ஸ் படிக்கும் வாய்ப்பைத் தவற விடலாமா.... அவரிடம் கேட்டேன். படிக்க சொன்னார். எல்லா தகவல்களையும் சேகரிக்க ஆரம்பித்தேன். வேலையை விட்டு விட்டு Entrance Exam ற்கு தயாராக சொன்னார். எல்லாம் சரியென மகிழ்ந்த வேளையில், Graduation முடிச்சுட்டியா எனக் கேட்டார். அப்போது தான் விட்டு விட்ட இரண்டு செமஸ்டர் ப்ராக்டிகல் தேர்வுகள் நினைவிற்கு வந்தன. திரு திருவென முழித்த என்னை கோவை அனுப்பி எக்ஸாம் முடிக்க சொன்னார். ஒருபக்கம் கணவர் துரத்த, மறுபக்கம் nift building கனவில் வந்து அழைக்க, ஒரு வழியாய் ப்ராக்டிகல்ஸை மூன்று வருடங்களுக்குப் பிறகு முடித்து விட்டேன். இனி அப்துல் கலாம் சொன்னது போல் கனவு காணுங்கள் தான். வேறென்ன, nift கனவு தான். ( கனவு மெய்ப்பட வேண்டும் )
**************************************************
ப்ராக்டிகல் தேர்விற்கு செல்ல வேண்டிய அன்று வழக்கம் போல் தாமதமாக எழுந்ததால் நேரமாகி விட்டது. கோவை டாக்ஸிகாரர்கள் எவ்வளவு நல்லவர்கள் என அன்று தான் அறிந்தேன். ஒரு டாக்ஸியும் இருபது நிமிடத்திற்குள் வருவதாய் இல்லை. பஸ்ஸில் சென்றால் தேர்வறைக்குள் நுழைய முடியாதென்பது உறுதியானதால் தோழியின் கணவரின் Discover ஐ எடுத்துச் சென்று விட்டேன்.
நேரத்திற்குப் போய் விட்டேன். நண்பனின் அழைப்பு தொலைபேசியில்.
"விக்கி, இன்னிக்கு உனக்கு எக்ஸாம் இல்ல, All the Best"
"அடப்பாவி, மூணு வருஷம் முன்னாடி எழுத வேண்டியத இப்போ எழுதுறேன். இதுக்கு வாழ்த்து வேறையா...."
"நான் "All the Best" சொன்னது உன் Examiner க்கு."
".............."
"ஆமா, எப்படி நேரத்துல போய் சேர்ந்த... நீ காலேஜ் டைம்லேயே பர்ஸ்ட் ஹவர் முடிஞ்சப்புறம் தான வருவ"
"இன்னிக்கும் லேட் ஆகிடுச்சு தான். Friend Husband கிட்ட Discover Bike வாங்கிட்டு வந்திட்டேன்"
"ஐயோ பாவம், சாயங்காலம் அவர் அவரோட பைக்க Discover பண்ண வேண்டி இருக்கும்."
"ரொம்ப டேமேஜ் பண்ணிட்ட. பை."
லைனைக் கட் பண்ணிவிட்டு மனதில் நினைத்தேன்.
"இவனுக்கு நான் ஏன் கார்க்கி ப்ளாக் பத்தி சொன்னேன்...."
( ப்ளாக படிச்சவன் மொக்கையயே தாங்க முடியல.......... )
**************************************************
பதிவுலக எச்சரிக்கைகளை மீறி கந்தசாமி படம் போனது எவ்வளவு பெரிய தவறு என உணர்ந்தேன். முதல் பத்து நிமிடம் ஒழுங்காய்ப் போய்க் கொண்டிருந்த படம் அடுத்த பதினைத்து நிமிடங்களுக்கு ஒரு சத்தமுமில்லாமல் போனது. பத்து ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கினாலே தியேட்டரை ரணகளம் பண்ணும் நம்மூர்ப் பசங்க நூற்றி ஐம்பது ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி சவுண்டு இல்லாம படம் காட்டினா விடுவாங்களா... எழுந்து ஆபரேட்டரை தூய தமிழில் திட்ட ஆரம்பித்து விட்டார்கள். ஏதோ இங்கே உள்ளவனுக்கு புரியல, நம்ம பசங்க தப்பிச்சாங்க. எல்லாரும் சேர்ந்து பேசி படத்தை மறுபடியும் போட சொன்னார்கள். முதல் சண்டைக் காட்சியை (!!!!) இரண்டாம் முறை பார்க்கும் துர்பாக்கியசாலி ஆனேன். முதல் காட்சியிலேயே முறைத்த என்னவர், படம் முடிந்த பின்பு "இனி தமிழ்ப் படத்துக்கு கூப்பிடு. உன்னைக் கவனிச்சுக்குறேன்" ங்குற மாதிரி ஒரு லுக் விட்டார். ஒன்னும் பேசாமல் வீடு வந்து சேர்ந்தேன். ( விக்ரம், ஏன் இப்படி.... :( )
**************************************************
தோழியின் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தேன்.
"ஆன்ட்டி, வாங்க நாம அனிமல்ஸ் வெச்சு சண்ட போடலாம்" அவனுடைய அனிமல் செட் பொம்மையை வைத்துக் கொண்டு கொஞ்சினான்.
"சண்டை வேண்டாம். நாம எல்லாத்தையும் சமாதானம் பண்ணி வச்சுடலாம்" என்றேன்.
"ஐயோ, வேணாம். சண்டை போட்டா தான் நல்லா இருக்கும். ஜெடிக்ஸ்ல சண்டை தான் போடுவாங்க."
"இல்ல தம்பி, நான் உனக்கு சொல்லித் தரேன். அனிமல்ஸ் இப்போ சண்டை போடாது. நாம எல்லாத்துக்கும் கட்டி பிடிச்சு சமாதானம் பண்ணி வைக்கலாம்"
"கட்டிப் பிடிச்சா சமாதானமா. அப்புறம் ஏன் படத்துல இந்த ரெண்டு அங்கிளும் (ஹீரோவும், வில்லனும்) கட்டி பிடிக்காம கத்தி பிடிக்குறாங்க"
"அவங்களுக்கு அவங்க ஆன்ட்டி சொல்லி தந்திருக்க மாட்டாங்க. நான் உனக்கு சொல்லி தரேன்ல. சரி விடு அனிமல்ஸ் வேண்டாம். நீ உன் பியானோ எடுத்திட்டு வந்து எனக்கு வாசிச்சுக் காமி" என பிளேட்டை மாத்தினேன். ( அவன் ஏதாவது பாடல் காட்சி பார்த்து விட்டு அந்த அங்கிளும் அக்காவும் சமாதானம் பண்றாங்களானு கேக்குறதுக்கு முன்னாடி எஸ்கேப். )
**************************************************
திருமணம் நிச்சயமான தோழி ஒருத்திக்கு அவளது நண்பனின் மீது ஒரு தலைக் காதல். திருமணத்தை நிறுத்தவும் முடியாமல் காதலை கட்டுப்படுத்தவும் முடியாமல் திணறியவள் என்னையும் இன்னொரு தோழியையும் பார்க்க வந்தாள். அவளுக்கு என்ன சொல்வது எனத் தெரியாமல் நான் தவிக்க உடனிருந்த மற்றொரு தோழி அவளை தேற்றிய விதம் கண்டு மிகவும் மகிழ்ந்தேன். அவள் சொன்ன டயலாக் சாதாரணம் எனினும் தோழி தெளிவாக எங்களிடமிருந்து விடை பெற்று சென்றாள். அவள் சொன்னது ஒரே வாக்கியம். "Taj Mahal to Taj Mahal hai. Apni gar, apni gar hai"
"தாஜ்மஹல் எல்லோரும் பார்த்து வியக்கும், பிரம்மிக்கும் அழகு தான். ஆனாலும் நம்மால் அதற்குள் வசிக்க முடியாது. அப்படியே அங்கிருப்பதானால் ஒரு வேலையாளாக இருக்க மட்டுமே முடியும். அதன் அழகை ரசிக்க வருடமொருமுறை பார்த்து வரலாம். ஆனாலும், நம் வீட்டில் ராணியாய் இருக்கும் நிம்மதி தினமும் தாஜ்மகாலில் தங்குவதால் வந்து விடாது. அது போல் நல்ல விஷயங்கள் நம்மை சுற்றி தினமும் நடக்கும். நமக்குப் பிடித்தவர்கள் ஆயிரம் பேர் வருவர். எல்லோரும் அழகு, எனக்கென விதிக்கப்பட்டவன் தான் என்னவன், என் வீடு போன்ற நிம்மதி தருபவன் என்ற எண்ணம் வேண்டும்." என்றாள். மிகவும் ரசித்தேன். ( தோழிகளைப் போல் சிறந்த ஆலோசகர் யாருமுண்டா... )
**************************************************
நண்பரிடம் இன்னிக்கு துணுக்ஸுக்கு செய்தி ஒன்றும் இல்லை என்றேன். அவர் சொன்னார், "செய்தி தான் எல்லா இடத்திலேயும் இருக்கே. நிகழ்வுகளையும், அனுபவங்களையும் விட சிறந்த பகிர்தல்கள் இருக்க முடியுமா. அதையே எழுது." எழுதிட்டேன். அவர் சொன்னது சரியா? ( சரியில்லைனா நண்பர் நம்பர் தரேன் :) என்னைத் திட்டாதீங்க )