Thursday, April 8, 2010
எங்கு இருக்கிறோம் நாம்?
Wednesday, April 7, 2010
எனக்குப் பிடித்த 10 பெண்கள்
Tuesday, April 6, 2010
நல்லாத் தானே போய்க்கிட்டு இருந்துச்சு...
Thursday, March 25, 2010
நல்லதொரு சிநேகம்
எனது இந்த வெறுப்பை அறிந்தும் அம்மா தொடர்ந்து ஒரு வருடமாக “குமுதம்-சிநேகிதி” வாசிக்க சொன்னார். வேண்டா வெறுப்போடும், அம்மாவின் மீதான மரியாதையின் காரணமாகவும் போன வாரம் வாங்கி வந்தேன். வாங்கி வந்ததற்கு உள்ளே என்ன தான் இருக்கிறதெனப் பார்க்கலாமெனப் புரட்டினேன். முடித்து விட்டுத் தான் கீழே வைத்தேன். நான் அபத்தம் என நினைக்கும் விஷயங்கள் இல்லை. தவிர பயனுள்ள பல விஷயங்கள். ரொம்பவே பிடித்து விட்டது. அம்மாவிற்கு ஃபோன் செய்து நன்றி சொன்னேன்.
சரி, சிநேகிதிக்கு வரலாம். நான் வாசித்தது மார்ச் 1-15 வரையிலான இதழ். வாங்கும் போது 30 வகை ரொட்டி என இலவச இணைப்பைக் கடை பையன் நீட்ட, வேண்டாம் என மறுத்து விட்டு வந்தேன். புத்தகத்தில் தரம் இருப்பதாக நம்புபவர்களுக்கு எதற்கு இந்த இலவச இணைப்புகள் என்பதென் எண்ணம். பெண்கள் சிறப்பு இதழென்பதால் முதல் இருபது பக்கங்களுக்கு வெவ்வேறு துறைப் பெண்கள் பற்றிய ஒரு/இரு பக்கக் கட்டுரைகள். போக்குவரத்துக் காவல்துறை அதிகாரி, கலெக்டர், கோவில் கருவூலத்தில் இருக்கும் பெண், காய்கறி விற்று மருத்துவமனை கட்டிய பெண், பாடகி, புல்லாங்குழல் இசைக்கும் பெண், ஒரு குடியிருப்பில் விட்டு வேலை செய்யும் அம்மா என வித்தியாசமான பெண்கள் பற்றிய தொகுப்பு சுவாரசியம்.
உள்ளே சமையல் குறிப்பில்லை; பதிலாக அத்தியாவசிய உணவுப் பழக்க வழக்கங்கள். காஸ்மெடிக் அழகுக் குறிப்பில்லை; மாறாக உணவால் அழகாவது எப்படி. அழும், ஆறுதல் சொல்லும் சோகக் கதைகள் இல்லை; பெண்களே கருத்து சொல்லும் விவாத மேடை. இத்துடன் டாக்டர்.ஷாலினியின் அவசியமான கட்டுரை ஒன்று. வாசித்து முடித்து விட்டு அம்மாவை அழைத்து நன்றி சொன்னேன். தங்கையையும் ரெகுலராக வாசிக்க சொன்னேன். சிநேகிதியில் கொஞ்சம் அலுப்பான வுஷயம் சுய விளம்பரம். ஒருவரைப் பற்றி எழுதும் போது கூடவே “இவரும் நம் வாசகி” என சொல்வது சலிப்பாக உள்ளது. மற்றபடி ரொம்பவும் நல்லாருக்கு. (இது வெறும் புகழ்ச்சி அல்ல. 20 ரூபாய் வீணாகாததன் மகிழ்ச்சி)
*************************************************************************************************************
போன முறை திருப்பூர் சென்றிருந்த பொழுது நான் இருந்த கான்ஃபரன்ஸ் ஹாலில் மெல்லிய பாட்டு சத்தம் கேட்டது. அங்கிருந்தவரை அழைத்து விபரம் கேட்க, இது HR பாலிஸிகளில் ஒன்று. இது போல் பாட்டுக் கேட்டுக் கொண்டே வேலை செய்வதால் தொழிலாளர்களுக்கு அயற்சி ஏற்படாமல் இருப்பதாகவும், வேலை செய்ய ஆர்வம் அதிகமாவதாகவும் தெரிவித்தார். அங்கிருந்த ஒரு கன்சல்டண்டைக் கேட்ட போது அது உண்மைதானென உறுதி செய்தார். எனக்கும் நன்றாகவே இருந்தது. ஆனால் இது அட்மினிஸ்ட்ரேடிவ் ப்ளாக்கில் மட்டும் இருப்பதாக சொன்னார்கள். மனதிற்குள் ஒன்று நினைத்துக் கொண்டு சொல்லாமல் வந்து விட்டேன். (வேலை செய்பவர்களுக்காகப் பாடலென்றால் அவசியம் ஷாப் ஃப்ளோரில் தானே இருக்க வேண்டும். நாற்காலியில் கம்ப்யூட்டரை வெறித்துக் கொண்டு தூங்குபவர்களுக்கு எதற்கு)
*************************************************************************************************************
*************************************************************************************************************
*************************************************************************************************************
*************************************************************************************************************
Friday, March 19, 2010
சாப் ஸ்டிக்ஸ் பெண்ணின் தாண்டியா நடனங்கள்

Wednesday, March 17, 2010
கேஷுவல்ஸிலும் கலக்கலாம்
Sunday, March 14, 2010
நிறம் மாறா மனிதர்கள் - 1
இந்தத் தொடர் இரத்த சம்பந்தமில்லாத என் உறவுகள்/நட்புகளைப் பற்றியது. நொடிக்கொரு தரம் பச்சோந்தியாய் மாறும் மனித உறவுகளுக்கிடையே எனக்குத் தெரிந்த நாள் முதல் இந்நொடி வரை மாறாத தூய அன்பு கொண்ட என் சுற்றங்களைப் பற்றியது.
இவரை இத்தொடரில் நான் முதல் ஆளாக எழுதக் காரணமுண்டு. என் அம்மா அப்பாவை விட சிறு வயதில் எனக்கு மிகவும் பிடித்தவர், இப்போதும். சிறுவயதின் அனைத்து சேட்டைகளுக்கும் என்னை அனுமதித்தது இவர் தான். நான் நடக்க ஆரம்பிக்கும் முன் “இந்தப் புள்ள நடக்குமாமா.. பேசுமாமா... எப்போம்மா...” என மாமா அவர் அம்மாவிடம் கேட்டுக் கொண்டே இருப்பாராம். என் கால்களைத் தடவிக் கொடுத்து என்னை நடக்க வைத்தது இவர் தான். இப்போதும் பெருமைப்பட்டுக் கொள்வார். பல மாலைகளில் மாமா வீட்டிலே நான் தூங்கிப் போவதுண்டு. அப்போதெல்லாம் எந்த அசைவுகளுமின்றி கண்ணாடி தூக்கிச் செல்லும் கவனத்தோடு என் வீட்டிற்குத் தூக்கிச் சென்று, படுக்கையில் இட்டு, நான் தூங்கும் போது எந்த சத்தமும் யாரையும் எழுப்ப விடாமல் பார்த்துக் கொண்டிருப்பாராம்.
தினமும் என்னைக் காட்டிற்குத் தூக்கிச் சென்று வயலில் நீர் பாய்ச்சிக் கொண்டே எழுத்துக்கள், சொற்கள் கற்றுக் கொடுத்தார். கிராமத்து பம்ப் செட்டில் குளிப்பாட்டி விட்டு அங்கிருந்து திரும்பி வீடு வரும் போது என் காலில் மண் ஒட்டிவிடாமலிருக்க சைக்கிளின் பெடலில் என் கால்களை வைத்து ’டக்கடிப்பது’இல் ஆரம்பித்து நான் கற்றது தான் மிதிவண்டி. அப்போதும் ஏதேனும் பாடங்கள் சொல்லிக் கொண்டே வருவார். மாமாவின் லைஃப்பாய் சோப்பின் மணம் இப்போது நினைத்தாலும் என்னைக் கடந்து போகும் காற்றில் கலந்து செல்கிறது.
கிராமத்து வாசனையுடன் என் பெயரை அழைக்கும் ஒரே மனிதர். “விக்கினேசு” என மாமா அழைக்கும் போது வரும் சந்தோஷமே தனி. சிறு வயதில் பல முறை இவர் இப்படி அழைப்பதைக் கூறி அழுதிருக்கிறேன், “என் பேர் விக்னேஷ்வரி. ’விக்னேஷ்’ன்னு சொல்லுங்க” அப்படின்னு. ஆனால் இப்போது மாமாவால் அழைக்கப்படும் போது மட்டும் தான் என் பெயர் அழகாகத் தெரிகிறது.
பள்ளி செல்வதற்கு நான் தயாரான போது மாமாவின் கல்யாணப் பேச்சு ஆரம்பமானது. சுற்றியிருந்தோர் “உங்க மாமாவுக்குக் கல்யாணம் ஆகப் போகுது. அப்புறமெல்லாம் இப்படி உன்னைத் தூக்கிக்கிட்டு சுத்த மாட்டான்” என சொல்லிச் சிரித்த நேரங்களில் வெம்மையான நீர் கண்களை நிறைத்துக் கொள்ளும். மாமாவின் அம்மாவிடம், “பாட்டி, மாமா கல்யாணம் பண்ணிக்கிட்டா வர்ற அத்தை, என்னை மாமா கூட பம்ப் செட் போக விட மாட்டாங்களா?” எனக் கண்ணீர் பொங்கக் கேட்டு அழுதிருக்கிறேன். அப்போதெல்லாம் “வர்றவ அப்படி சொன்னா அவ அம்மா வீட்டுக்கே அனுப்பிருவேன்டா கண்ணு. நீ அழாத” எனப் பாட்டி சமாதானப்படுத்தியிருக்கிறார். அந்த வயதில் தோன்றிய அறிவாளித் தனமான ஐடியாவால் கொஞ்ச நாளைக்கு “நானே எங்க மாமாவைக் கல்யாணம் பண்ணிப்பேன். அப்புறம் நானும் மாமாவும் பம்ப் செட் போவோம், காட்டுக்குப் போவோம், எல்லா இடத்துக்கும் சுத்துவோம்” என சொல்லித் திரிந்திருக்கிறேன்.
எனக்கு 14 வயதிருக்கும் போது மாமாவுக்குத் திருமணமானது. அப்போது புதிதாய் வரப் போகும் அத்தையைக் காணும் ஆவல் மட்டுமே இருந்தது. கொஞ்சம் சிறுபிள்ளைத் தனம் குறைந்திருந்ததோ என்னவோ. மாமாவிற்குத் திருமணமான பின்பும் என் மீதான அன்பு மாறவில்லை. பள்ளி செல்லும் காலை அவசரத்தில் “மாமா போயிட்டு வரேன்”ன்னு கத்திக்கிட்டே ஓடும் போது “இருடா கண்ணு” எனத் தன் பையிலிருந்து எவ்வளவு எனப் பாராமல் கையில் வந்த சில்லரைகளைக் கொடுத்தனுப்புவார். “வேண்டாம் மாமா அப்பா திட்டுவாங்க” என்றால் “என் மருமகளுக்கு நான் செய்றேன், யார் என்ன சொல்றது” என்ற அவரின் உரிமை, அவர் மீதான அன்பை அதிகரிக்கும்.
பள்ளி நாட்களில் ஃபர்ஸ்ட் ரேங்க் எடுத்தால் நேராக மாமாவிடம் தான் ப்ராக்ரஸ் கார்டை நீட்டுவேன். அப்படியே மாமா வீட்டிலேயே புத்தக மூட்டையை வைத்து விட்டு நேரே ஹோட்டலுக்கு அழைத்து சென்று விடுவார். முதல் ரேங்க் எடுக்கும் போதெல்லாம் எங்கள் ஊரின் “கற்பகம் (ஹோட்டல்) சோலா பூரி”யும், ஒரு டசன் வளையலும் எனக்குக் கிடைப்பது உறுதி. அம்மா, அப்பாவின் மீதான பாசமும், பயமும் பெற்றுத் தராத அந்த முதல் மதிப்பெண்ணை என்னைத் தொடர்ந்து பெற வைத்தது மாமாவின் அன்பும், சோலா பூரியும் தான்.
எதிர்பார்ப்பு, ஆதாயம், தன்னலம், சூது இவை எதுவுமில்லாத அதே தூய அன்பை 2 குழந்தைகளுக்குத் தகப்பனான பின்பும் மாமாவிடம் பார்க்க முடிகிறது. போன முறை ஊருக்கு சென்றிருந்த பொழுது என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார், “விக்கினேசு கண்ணு, உன்னை வயக்காட்டுக்கும், பம்பு செட்டுக்கும் கூட்டிட்டுப் போய் ‘ஆனா, ஆவன்னா’ சொல்லிக் குடுத்து அடிப்படைக் கல்வி குடுத்ததால தான்டா இன்னிக்கு இவ்ளோ பெரிய உத்தியோகத்தில இருக்க”. ஒவ்வொரு முறையும் அவர் சொல்வது. அவரின் அன்பைப் பெற்ற கர்வத்தில் ஒரு சிரிப்புடன் “ஆமா மாமா கண்டிப்பா” என்பேன். வயதின் காரணமாகவும், உடல்நிலை காரணமாகவும் மாமாவிடம் அதே ஓட்டத்தைப் பார்க்க முடியாவிட்டாலும் நான் வந்தால் உடனே அவரின் ஸ்பெஷலான இஞ்சி டீ கொண்டு வந்து கொடுத்துக் “குடிடா கண்ணு” என்பார். “இப்போ தான் மாமா காஃபி குடிச்சேன். கொஞ்ச நேரம் கழிச்சுக் குடிக்குறேன்” என்றால் அதனால் வாடிப் போகும் அவர் முகம் பார்க்க சங்கடமாயிருக்கும். அதனால் டீயையும் குடித்து விடுவேன். மாமாவின் பாசத்தையும், அக்கறையும் விட வயிற்றுப் பிரச்சனை பெரிதா என்ன.
என் திருமணத்தின் போது என் அப்பாவைக் காட்டிலும் அதிக பிஸியாக இருந்தார் மாமா. நான் மறந்து விட்ட ஒரு பதற்ற கணத்தில் என்னவர் “மாமா எங்கே” எனத் தேடி மணவறைலிருந்து இறங்கிச் சென்று சமையலறையிலிருந்த மாமாவை அழைத்து வந்து புகைப்படம் எடுக்க வைத்தார். 25 வருடங்களுக்கு முன்பிலிருந்து தொடரும் மாமாவின் அதே அன்பை இப்போது அத்தையிடமும் அவரின் குழந்தைகளிடமும் பார்க்கும் போது அதை விட சந்தோஷமும் நிம்மதியும் தரக் கூடியது வேறெதுவுமில்லை எனத் தோன்றும். மாமாவை டெல்லி அழைத்துக் கொண்டிருக்கிறேன், கொஞ்ச நாள் எங்களுடன் தங்கிப் போக. “உன் குழந்தை வரட்டும்டா. அதுக்கு ‘ஆனா, ஆவன்னா’ சொல்லித் தர வாரேன்” என்கிறார். “டெல்லில பம்ப்செட் இல்லையே மாமா” என்றேன் ஒருவித மெல்லிய இழப்புடன்.
Tuesday, March 9, 2010
உறைந்திருக்கும் வசந்தம்

























