Sunday, March 27, 2011

Our Moms always rock

ஒரு மாதம் அம்மா வீட்டில். வருடம் இப்படி ஒரு மாதம் கிடைத்தால் நன்றாகத் தானிருக்கும். ஆனால் எப்போதும் யாருக்காவது உடல்நிலை சரியில்லாமல் போக வேண்டுமெனவா பிரார்தித்துக் கொள்ள முடியும்.. ஒவ்வொரு பயணமும் தூக்க முடிந்த பெரு மூட்டையளவு அனுபவங்களைத் தருகிறது. அவைகளுக்கு இப்பயணத்திலும் குறைவில்லை.

இப்பயணத்தின் எதிர்பாரா சந்திப்பு கவிஞர் நேசமித்திரனுடனானது. "ஹலோ, சொல்லுங்ண்ணே..” என அவர் பேசிப் பார்க்கையில் அவர் எழுத்தையும் பேச்சையும் இணைத்துப் பார்த்து வரும் மிரட்சி முதன்முறை பார்க்கும் யாருக்கும் வருவதுண்டு. அப்படி ஒரு எளிமையான நட்பான மனிதர். பதிவ நண்பர் சிவாவையும், கூடவே தோழியையும் தங்கையையும் அழைத்துக் கொண்டு நேசமித்ரனுடன் ஆண்டாள் கோவிலடைந்தோம்.

நான் நடை பயின்றதே ஆண்டாள் கோவில் பிரகாரத்தில் எனலாம். தடுக்கி விழுந்தால் கோவிலென ஆண்டாள் கோவில் என் வீட்டு முற்றமாயிருந்த காலமுண்டு. நேராகப் போய் ஆண்டாளின் அழகில் மயங்கி எழுந்து வருவதே பெருங்காரியம். ஆனால் அழகு ஆண்டாளிடம் மட்டுமல்ல, அக்கோவிலின் ஒவ்வொரு தூணிலுமென சொல்லிக் கற்றுத் தந்தார் கவிஞர்.

அவர் சொல்லச் சொல்ல இத்தனை நாளாய் இவையெதையும் கண்டுணராத குற்றவுணர்ச்சியும், அவர் சொல்லும் விஷயங்களின் ஆழமும் புதுமையும் அவை மீதான சிறுபிள்ளைத் தனமான சந்தேகங்களுமென ஒரு கலக்கல் மாலை அனுபவம்.

முதன் முறையாக கற்சிற்பங்களின் அழகில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக லயித்திருந்தேன். ஒவ்வொரு விஷயத்திலுமிருக்கிற கற்றலை அவர் மூலமறிய முடிந்தது. மதுரை சாயலில் பேசிக்கொண்டேயிருக்கையில் இலக்கியம் பேசுகிறார்; கவிதை கிறுக்குகிறார். ஒரு மனிதன் ஒரு நாளைக்குக் கவிதையுடன் எவ்வளவு நேரம் வாழ முடியும். இவரின் ஒவ்வொரு வினாடியும் கவிதையுடனேயே ஆரம்பித்து முடிகிறது. கொஞ்சம் மிரட்சியுடனும் அதிக மரியாதையுடனுமே அவர் பேச்சுகளைக் கவனித்துக் கொண்டிருந்தேன். என்னை விட அதிகமான ஆழ்ந்த சிந்தனையில் இருந்த சிவா அடுத்து ஒரு நாள் முழுக்கக் கவிஞர் பற்றியும் அவரிடம் விவாதித்த விஷயங்கள் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார். (கவிஞன்யா!)
*************************************************************************************************************

ஏற்கனவே யோகிக்கும் எனக்கும் புத்தக அலமாரியால் வரும் சண்டைகளுக்குப் பஞ்சமில்லை. அவரது தடிமனான என்சைக்ளோபீடியாக்களும், டெக்ஸ்டைல் மற்றும் ஐடி ரெஃபெரென்ஸ் புத்தகங்களும் அவற்றின் பரிமாணங்களையொத்த நாவல்களுமென ஆறடுக்கு அலமாரியின் நான்கடுக்குகளை எடுத்துக் கொண்டு விட்டார். மீதியிருக்கும் என் இரு அடுக்குகளிலும் அவ்வப்போது வாடகைக்கு அவர் புத்தகங்கள் அடைக்கப்பட்டிருக்கும். அவற்றை எடுத்து த்ரோபால் விளையாடுவது என் பொழுதுபோக்காக இருந்து வந்தது. இனி அது முடியாதெனும் அளவுக்கு அவ்வடுக்குகளை நிறைக்க புத்தகங்களை ஊரிலிருந்து வாரி வந்துள்ளேன். நான் வாங்கிய புத்தகங்கள் போதாதென நண்பர்களிடமிருந்தும் பரிசாகப் புத்தகங்கள். மொத்தம் பதினைந்து கிலோவுக்கு. இனி யோகி ஒரு துண்டு காகிதம் வைக்க வேண்டுமென்றாலும் கூட இடமில்லை.
(வழக்கம் போல வாங்கிட்டு வந்தாச்சு. வாசிக்கறது எப்போதுன்னு தான் தெரியல..)

*************************************************************************************************************

சென்னை - எனக்கு மிகப் பிடித்த ஊர். காரணம் இதுதானெனக் குறிப்பிட்டுச் சொல்ல சிறுவயதிலிருந்து தெரியவில்லை. எல்லோருமாய் குடும்பத்துடன் மஹாபலிபுரம் போனோம். அங்கே இந்தியர்களுக்கு நுழைவுக் கட்டணம் 10 ரூபாயெனவும், வெளிநாட்டவருக்கு 250 ரூபாயெனவும் எழுதப்பட்டிருந்தது. நான் பார்த்த வரையில் இம்மாதிரியான கட்டண வித்தியாசம் எல்லா இந்திய நகரங்களிலும் உள்ளது.
உடனிருந்த அங்கிள் டிக்கெட் கொடுப்பவரிடம் கேட்டார்..
“ஏங்க, நமக்கு மட்டும் 10 ரூபா.. வெளிநாட்டுக்காரங்களுக்கு 250?”
பதில் சொன்னவர் தெரியாதென சொல்லியிருக்கலாம் தான். ஆனால் அவர் சொன்ன பதில்...

“ஏன்னா அவங்க வெளிநாட்டுக்காரங்க”
”போயாங்......” மனசுக்குள் நினைத்துக் கொண்டேன்.
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்............

*************************************************************************************************************

இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்தது போல் பதிவுலகம் அதிக உற்சாகத்துடனும், சுவாரஸ்யப் பதிவுகளுடனும் இனி எப்போதிருக்கும் என்ற ஏக்கமும் கேள்வியும் தொக்கி நிற்கின்றன. ஒரு வேளை பதிவுலகம் அப்படியே தானிருக்கு, நான் தான் எழுதலையோங்கற கேள்வியும் அடிக்கடி வந்து போகுது. ரெண்டும் தான்னும் தோணுது. ஏன்.. ஏன்... அப்படின்னு கேள்வி உள்ளுக்குள்ள எக்கோ ஆகறதுக்கு முன்னாடி வாசிப்பு அதிகரிக்கையில் எழுத்து குறையுமெனும் தர்க்கமும் வருது. இல்ல, யஹூ, ஆர்குட், ஃபேஸ்புக் மாதிரி ப்ளாகும் சீசனல் தானான்னும் தெரியல. இருந்தாலும் அடிக்கடி நிகழும் பதிவர் சந்திப்புகளும், வாசித்த புத்தகங்கள் மனதிற்குள் ஏற்படுத்தும் தாக்கமும் ப்ளாகை இன்னும் கொஞ்ச நாட்கள் கொண்டு போகுமெனத் தோன்றுகிறது. (எழுதாம இருக்கற சோம்பேறித்தனத்துக்கு என்னெல்லாம் சாக்கு..)

*************************************************************************************************************

மெயிலில் ரசித்தது:

2011 வேர்ல்ட் கப்பை இந்திய அணி 100% நிச்சயம் ஜெயிக்கும். ஏன்னா...


















virenderR shewag
sachin tendulk
Ar
yuvra
J singh
gaut
Am gambhir
yusuf patha
N
ms dhon
I
virat
Kohli
harbh
Ajan singh
zaheer kha
N
s sreesan
Th
r as
Hwin

(எப்படியெல்லாம் யோசிக்குறாய்ங்க :) )

*************************************************************************************************************

அம்மாவிடம் ஃபோனில் பேசிக் கொண்டிருக்கையில் தங்கை என்ன செய்கிறாளெனக் கேட்டேன்.
அம்மாவின் பதில் “அவ சங்கீத பரம்பரைல இருந்து வந்திருக்காள்ல. அதனால காலைல எழுந்ததுல இருந்து காலேஜ் போற வரை டிவி அல்லது சிடி ப்ளேயர்ல பாட்டு ஓடணும். சாயங்காலம் காலேஜ்ல இருந்து வந்ததுல இருந்து படுக்கப் போற வரைக்குமும் அதே தான்.”
பாட்டுக் கேக்கறது குத்தமாய்யா.. எப்போதோ வாசித்த ஒரு குறுஞ்செய்தி நினைவிற்கு வந்தது.

அம்மாக்கள் குழந்தைகள் இரவு படுக்கப் போகும் முன்:

England Mom: Good Night Dear
Gujrathi Mom: Shubh Raat Beta
Pakistani Mom: Shaba Khair
Tamil Mom: நான் அந்த மொபைலை தூக்கி அடுப்புல போடப் போறேன் பாரு. தூங்கப் போறியா இல்லையா.. (Our moms always rock. :) )

*************************************************************************************************************

யோகி டைம்ஸ்

அலுவலகத்திலிருந்து வீட்டுக்குள் நுழைய எத்தனித்த பொழுது வழக்கமான சாவி தேடும் படலம் ஆரம்பமானது. யோகி உதவுவதாய் ஹேண்ட்பேக்கைப் பார்வையிட்டார்.
ஒரு அலட்சியப் பார்வையுடன், “Its not that easy to find something from a lady's purse" என்றவாறே அவர் பக்கமிருந்து பையை என் பக்கமிழுத்தேன்.
சட்டென்று சாவியை எடுத்து விட்டுச் சொன்னார் “For that you need to have a man's eye"
(அட! )